உலகத் திறன் போட்டி: தண்ணீர் தொழில்நுட்பத்துக்கு தங்கம்!

ரஷியாவில் அண்மையில் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது ஒலிம்பிக் போட்டிக்கு இணையான உலகத் திறன் போட்டி கசான்-2019. இதில், இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளதோடு, வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 19
உலகத் திறன் போட்டி: தண்ணீர் தொழில்நுட்பத்துக்கு தங்கம்!


ரஷியாவில் அண்மையில் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது ஒலிம்பிக் போட்டிக்கு இணையான உலகத் திறன் போட்டி கசான்-2019. இதில், இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளதோடு, வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்று சாதனை பட்டியலில் அடியெடுத்து வைத்துள்ளது.

WorldSkills International  என்பது உலக அளவில் சுமார் 82 உறுப்பு நாடுகள் இணைந்த ஒரு சர்வதேச திறன் வளர்ச்சி இயக்கமாகும்.  இது உலகெங்கிலும் உள்ள தொழில், தொழில்நுட்பம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களில், திறன்களின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சிக்கான குரலாக கடந்த 1950 முதல் ஒலித்து வருகிறது. குறிப்பாக, எதிர்காலத்துடன் தொடர்புடைய திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து இளைஞர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தொழில்துறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

WorldSkills அமைப்பு இளைஞர்களையும், கல்வியாளர்களையும் ஒன்றிணைத்து இளைஞர்கள் போட்டியிடவும், அனுபவம் பெறவும், அவர்கள் விருப்பமான திறனில் எவ்வாறு சிறந்தவர்களாக மாறலாம் என்பதை அறியவும் வாய்ப்பளிக்கிறது.

இதன் ஒருபகுதியாக உலகத் திறன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை   நடைபெறும் இந்தப் போட்டியில், தச்சுத் தொழில் முதல் பூக்கடை வரை, சிகையலங்காரம் முதல் மின்னணு தொழில்நுட்பத் தொழில் வரை, மோட்டார் மெக்கானிக் முதல் பேக்கரி தொழில் வரை 6 பிரிவுகளில் அடங்கிய 56 திறன்களில் சர்வதேச அளவில் இளைஞர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம், Medallion of Excellence, Albert Vidal Award, Best of Nation ஆகிய பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 22 முதல் 27 வரை ரஷியாவின் டாடர்ஸ்தான் தலைநகர் கசானில் நடைபெற்ற 45 -ஆவது உலகத் திறன் போட்டியில், 63 நாடுகளைச் சேர்ந்த 1,354 இளம் தொழில் வல்லுநர்கள்  போட்டியிட்டனர். இதில், மொபைல் ரோபாட்டிக்ஸ், முன்மாதிரி- மாதிரிகள், சிகையலங்காரம், பேக்கிங், மிட்டாய், வெல்டிங், செங்கல் கட்டுமானம், கார் பெயிண்டிங், பூக்கடை உள்ளிட்ட 44 திறன்களில் இந்திய அணி பங்கேற்று, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம், 15 Medallion of Excellence, JÚ Best of Nation பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் கடந்த 2007 முதல் இந்தியா பங்கேற்று வந்தாலும்,  தற்போது தங்கம் உள்ளிட்ட 19 பதக்கங்களுடன் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கசான்-2019 போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த எஸ். அஸ்வதா நாராயணா, தண்ணீர் தொழில்நுட்பத்தில் (Water Technology) 11 நாடுகளுடன் போட்டியிட்டு தங்கம் வென்றார். இந்தியப் போட்டியாளர்களிடையே அவருக்கு "பெஸ்ட் ஆப் நேஷன்' என்ற விருதும் கிடைத்தது.

அதேபோன்று, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் நூட்டலபதி, வலைத்தள தொழில்நுட்பத்தில் (Web Technologies) 33 நாடுகளுடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரமானிக், நகை (Jewellery) பிரிவில் 16 நாடுகளுடன் போட்டியிட்டு வெண்கலமும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்வேதா ரத்தன்புரா, வரைகலை வடிவமைப்பில் (Graphic Designing) 35 நாடுகளுடன் போட்டியிட்டு வெண்கலமும் வென்றனர். இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே பெண் திறனாளர் என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார். இந்திய அணி, WorldSkills போட்டியில் 6 ஆவது பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

கசான் நகரில் கடந்த ஆகஸ்ட் 28 -இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த விழாவில், 63 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கலாசாரங்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே பரிசுகள் வழங்கப்பட்டன.

சராசரியாக 22 வயதுடைய இந்திய அணியினர் அனைவரும் நாட்டின் 2 மற்றும் 3 -ஆம் நிலை நகரங்களில், மிகவும் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். இவர்களின் பெற்றோரில் சுமார் 35 சதவீதம் பேர் விவசாயத் துறையினர் மற்றும் கூலித்தொழிலாளர்கள்.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வேர்ல்ட்ஸ்கில்ஸ் இந்தியா (WhorldSkills India) என்ற அமைப்பு,  நாடு முழுவதும் இந்தியாஸ்கில்ஸ் என்ற போட்டியை நடத்தி, சர்வதேச போட்டிகளுக்கான திறனாளர்களைத் தேர்வு செய்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் பதிவுசெய்ய வேண்டும். பிறகு, மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். மாநில சாம்பியன்கள் பிராந்திய போட்டிகளிலும், அதில் வென்றவர்கள் இண்டியாஸ்கில்ஸ் தேசியப் போட்டியிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உலகத் திறன் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்திய அணியின் வெற்றி குறித்து, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், ""இந்தியா அணி புதிய வரம்புகளை வரையறுத்து, சீனா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராகத்  தங்கள் திறமையை நிரூபித்துள்ளது. அந்த அர்ப்பணிப்பு மற்றும் உறுதியிலிருந்து, நாட்டின் இளைஞர்கள் பெரும் உத்வேகம் பெறவேண்டும். இந்தியா இளமையான மற்றும் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ளது என்பதை நம் குழுவினர் காட்டியுள்ளனர்'' என்றார். 

46 -ஆவது உலகத் திறன் போட்டி, சீனாவின் ஷாங்காய் நகரில், வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய்- 2021 என்ற பெயரில் நடைபெறவுள்ளது. ரர்ழ்ப்க்நந்ண்ப்ப்ள் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் அமைப்பு 2030-க்குள் 10 கோடி இளைஞர்கள், திறன்களுடன் முன்னேறுவதற்கான ஊக்குவிப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com