நம்பினோர் கெடுவதில்லை!

பதினேழு இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த  டி.என்.பி.எஸ்.சி., குரூப் -ஐய தேர்வு கடந்த செப்டம்பர் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது.
நம்பினோர் கெடுவதில்லை!


விளக்கம் அளிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

- பெஞ்சமின் டிஸ்ரேலி.

பதினேழு இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த  டி.என்.பி.எஸ்.சி., குரூப் -ஐய தேர்வு கடந்த செப்டம்பர் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. பதினேழு இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தாலும் தேர்வெழுத வந்தவர்களின் எண்ணிக்கை என்னவோ...13.5 இலட்சம் பேர் மட்டுமே. அதாவது, விண்ணப்பித்தவர்களில் மூன்றரை இலட்சம் பேர் தேர்வெழுத வரவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்வெழுத வராதவர்களின் எண்ணிக்கை சொற்பமானதாகத் தானிருக்கும். விண்ணப்பித்துவிட்டுத் தேர்வைப் புறக்கணித்தவர்களில் பெரும்பாலானோர், போதிய தயாரிப்பின்றி சுயநம்பிக்கை அற்றவர்களாக, தேர்வினைத் தவிர்க்க அபத்த காரணங்களை அடுக்கி, தங்களது சோம்பலினை மறைக்க முயற்சித்தவர்கள். 

சரி,  தேர்வினைத் தவிர்த்தவர்கள் போக, தேர்வெழுதியவர்களின் தேர்வுக்குப் பிந்தைய மனநிலை, தேர்வில் அவர்களது பங்களிப்பு, வெளிப்படுத்திய தகுதி குறித்த பார்வையோடு,  கேள்வித்தாளில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், அவர்கள் சரியாக விடையளித்த கேள்விகளின் எண்ணிக்கை, அதற்கு அவர்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் குறித்த உரையாடல்களில்... பெரும்பான்மையான மாணவர்கள் மதில் மேல் பூனையாய், தன்னம்பிக்கையற்றவர்களாக அவர்கள் பெறுவதற்கு தகுதியான மதிப்பெண்ணை உறுதியாகக்  கூறவில்லை. ஒரு சில மாணவர்கள் மட்டுமே, ""175 கேள்விகளுக்கு சரியான விடைகளை  "டிக்' பண்ணியிருக்கேன்... சார்''  என்றும், ”""கண்டிப்பா.... கிடைச்சுடும் சார்'' என்றும் பதில் அளிக்கிறார்கள். 

ஒரு தேர்வுக்கு, அதன்  பாட திட்டத்தின்படி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளாதவர்கள்-  படிக்காதவர்களுக்கு - தன்னம்பிக்கையில்லாத, தெளிவில்லாத நிலை ஏற்படலாம். ஆனால், தெளிவாய் திட்டமிட்டு படித்தவர்கள் கூட, தேர்வெழுதிய பின்னர் தெளிவற்று அமர்வது, பேசுவது எல்லாம் எதனால்? வாசித்தது, படித்தது மேலோட்டமாகவே, முடிந்துவிட்டதா? உழைத்ததில் தெளிவில்லையா? கவனம் போதவில்லையா?  

தேர்வெழுதிய 13.5 இலட்சம் பேரில், கவனமாக, தெளிவாக,  தங்கள்மீதும் நம்பிக்கையுடனும் படித்த முதல் ஐயாயிரம் பேர் மட்டும்தானே தேர்ச்சி பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள். அவர்களுக்குத்தானே, தமிழக அரசில் பணிகள் ஒதுக்கப்படும். இதுதான் களநிலவரம் என்று தெரிந்தும் தேர்வெழுதிய பின்னர் கூட,  தங்களது தகுதியைத் தீர்மானிக்க முடியாத  சுயநம்பிக்கையற்ற  தன்மை ஏற்புடையதாயில்லை. 

"உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு' என்கிறார் தமிழ்வாணன். தெளிவே வெற்றியின் நுழைவு. ஒரு செயல் அல்லது தேடல், ஒரு வெற்றி அல்லது வாய்ப்பு ஒன்றிற்காக நாம் முயற்சி செய்கின்றோம்  என்றால், நம்மிடத்தில் என்னென்ன உள்ளது, என்னென்ன இல்லை, என்னென்ன வேண்டும் என்ற தெளிவு முதலில் வேண்டும். என்ன இருக்கிறதோ அதைச் செறிவூட்ட வேண்டும். எது இல்லையோ அதைப் பெற்றிட முயலுதல் வேண்டும். ஏனென்றால் தெளிவே வெற்றியின் நுழைவு. 

உதாரணமாக, நாம் கால்பந்தாட்ட போட்டிக்குச் செல்வதாக வைத்துக் கொள்வோம்.  அந்த விளையாட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு என்ன வழி என்று தெரிந்து கொண்டு பயிற்சி செய்து களமிறங்குவோம் அல்லவா?  ஆர்வம் மட்டும் உள்ளது விளையாடத் தெரியவில்லை என்றால்... படித்தோம், ஆனால், அதில் கவனமில்லை என்றால்? தேர்வு எழுதினோம்... அதில் தெளிவில்லை என்றால்?

நாம் நினைப்பதெல்லாம் முதலில் தன்னம்பிக்கைதானா என்ற தெளிவு வேண்டும். சிலர் நிறைவேறாத ஆசைகளை, விருப்பங்களை, இலட்சியங்களை தன்னம்பிக்கை என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். போட்டித்தேர்வில் வெற்றிபெறுவது என்பது நிறைவேறக் கூடிய... சாத்தியப்படும் தன்னம்பிக்கை செயல்தானே! அதில் ஏன் குளறுபடி? பல நிறைவேறவே முடியாத வெற்று ஆசைகளை “தன்னம்பிக்கை” என்று நம்பி, “தோல்வி சவக்குழியை” அருமையாக தோண்டும் ஓர் அபத்த செயல் அல்ல,  போட்டித்தேர்வுகளும்  அதற்கான தயாரிப்புகளும்.

"இதுவரை எழுதிய பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தோல்வியே அடைந்திருக்கின்றேன். ஆனால்,  “இனி நான் நிச்சயமாக ...  அடுத்தடுத்த தேர்வுகளில் முதல் பத்து இடங்களுக்குள் பிடித்து, நல்லதொரு அரசுப் பணிக்குச் செல்வேன்'”என்பது தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட தன்னம்பிக்கை, தொடங்கிய நிலையில் எப்படி இருந்ததோ, அப்படியே தேர்வு எழுதி முடிக்கும்வரை தொடரவேண்டாமா? முயன்றால் முடிவது தன்னம்பிக்கை, விடா முயற்சியில் படிவது தன்னம்பிக்கை, வெற்றி பெறும் வரை முயற்சியைக் கடுமையாக்குவது தன்னம்பிக்கை. ஆக வெற்று நம்பிக்கைகளை ஒற்றியெடுத்துவிட்டு, வெற்றி நம்பிக்கைகளை பற்றிக் கொள்கிற பக்குவத்தை... வித்தையை நாம் கவனமாக உழைப்பதின் மூலம் பெற்றுவிடலாம். 

"நம்மைப் பற்றி நாம் நினைப்பதல்ல நாம்; நம்மை இவ்வுலகுக்கு,  என்னவென்று, எப்படி நிரூபிக்கின்றோமோ... அதுவே நாம்' என்கிற மந்திரம் நமது ஒவ்வொரு செயலிலும், கடமையிலும் கவனமாக இருந்து கொண்டே இருப்பது, நம்மை நம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக உறுதியேற்றிக் கொண்டே வழி நடத்தும். "நம்பினோர் கெடுவதில்லை... இது நான்குமறை தீர்ப்பு' என்று சொல்லப்பட்டதெல்லாம் அவரவர் தெய்வங்களை ஒருவர் நம்பவேண்டியதை வலியுறுத்தப்பட்டதல்ல. ஒருவர்... தன்னையே எந்த அளவிற்கு நம்பவேண்டும் என்பதற்காகவே அவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மை... நாமே நம்பாவிட்டால்... வேறு யார்தான் நம்புவார்கள்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com