வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!

ஒரு காலத்தில், வண்ண, வண்ண சேலைகளை தேர்வு செய்து அணிவதில் மட்டும்தான் பெண்கள் கவனம் செலுத்தி வந்தனர்.
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!

ஒரு காலத்தில், வண்ண, வண்ண சேலைகளை தேர்வு செய்து அணிவதில் மட்டும்தான் பெண்கள் கவனம் செலுத்தி வந்தனர். முக அலங்காரம் என்பது வெறும் பவுடர் பூச்சு மட்டுமே என்று இருந்த காலம் அது. ஆனால், இன்றோ தலை முதல் பாதம் வரை அழகுபடுத்துவதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். அதற்காகப் பல மணி நேரங்களைச் செலவிட்டு வருவதுடன், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றனர். 
அதனால் இப்போது அழகுநிலையங்கள் பெருகிவிட்டன. அதனால் அழகுக்கலை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இப்படி, வருமானம் வரும் தொழிலாக அழகுக்கலை தொழில் உருவாகி விட்டது. சேனல்கள் தோறும் அழகுக் குறிப்புகள் ஆயிரம் கூறப்பட்டாலும், தாங்களாகச் செய்து பார்ப்பதை விட, அழகுக் கலை நிலையங்களில் தங்களை அழகுபடுத்திக் கொள்வதையே பெண்கள் விரும்புகின்றனர். 
வண்ண, வண்ண உடைகள், வித்தியாசமான உடை வடிவங்கள் என உடை நாகரிகங்கள் அதிகரித்து விட்ட நிலையில், பேஷன் டிசைனருக்கான வாய்ப்புகள் பெருகி விட்டதைப் போலவே, அழகுக்கலை நிபுணர் எனப்படும் காஸ்மடாலஜிஸ்ட்டிற்கும் வாய்ப்புகள் அதிரித்து வருகின்றன. இன்றைய புதிய டிரெண்ட் என்ன என்பதைப் புரிந்து கொண்டு, வரும் வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வகையில் அழகுபடுத்துபவர்கள் மட்டும்தான் இத்துறையில் ஜெயிக்க முடியும். 
சாதாரணமாக வரும் வாடிக்கையாளர்களை, நவீன டிரெண்ட்டைப் பயன்படுத்தி அழகானபவர்களாக மாற்றுவதற்கான கலையை கற்பித்து தரும் படிப்புதான் காஸ்மடாலஜி. பெரும்பாலும் முகம் மற்றும் தலைமுடியை அலங்கரிக்க வரும் கூட்டமே அதிகம் என்றாலும் கூட, தற்போது நகம், தோல், கண்கள் , இமைகள் என பலவற்றையும் அழகுபடுத்த ஆர்வம் காட்டி வருகிறது இளைய தலைமுறை. 
அதனால், தலை முதல் பாதம் வரை அழகை மெருகூட்டும் கலையை கற்றவர்களால்தான், கால ஓட்டத்தில் நிற்க முடியும். தொலைகாட்சிகளில் வரும் அழகுக்கலை விளம்பரங்களால் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. 
முடி என்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காரணியாக இருக்கிறது. லேசாக முடியில் வெள்ளை எட்டிப் பார்த்தாலே பதற்றமடைபவர்கள் பலர். முடி வெட்டுதல், சுத்தம் செய்தல், கலரிங், விக் தயாரித்தல், முடியை நேராக்குதல், சீர் செய்தல் போன்றவை இதில் அடங்கும். 
உடலில் தேவையற்ற முடியை நீக்குவது என்பது பெரும்பாலான பெண்களால் விரும்பப்பட்டு செய்யப்படுகிறது. வலியுடன் முடியை அகற்றும் நிலை மாறி வலியில்லாமல் முடியை நீக்கும் புதிய வகை லேசர் சிகிச்சைக்கான கல்வி கற்று நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் கடும் கிராக்கி நிலவுகிறது.
ஃபேசியல், மசாஜ், நறுமண சிகிச்சை, நீரூற்று சிகிச்சை மற்றும் அலங்காரம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த வகையில் அடக்கம். ஒருவரின் தோல் தன்மை குறித்து சரியாகப் பரிசீலித்து அதற்கு ஏற்றவகையிலான தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தும் கலை இது.
கைகள், கால்கள் மற்றும் நகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, அழகூட்டல் விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று. இது ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. சஹண்ப் Nail technician என்பவர், கைகளையும், பாதங்களையும் அழகூட்டும் படிப்பை கற்றுக் கொள்ள முடியும். இதைக் கற்றவரால் painting, டிசைனிங் உள்ளிட்ட அழகுப் பணிகளைச் செய்ய முடியும். 
மருத்துவம் சாராத அழகூட்டும் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவையில்லை. இத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், ஏதேனும் ஒரு பிரிவில் ஸ்பெஷலைசேஷன் படிப்பது நல்லது. Henna, skin care, tattoos, hair styling  போன்ற பிரிவுகளைக் கற்றுக் கொண்டால் கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும். 
இந்தியா முழுவதும் கிளைகளுடன் இயங்கும் தனியார் அழகுக்கலை நிறுவனங்கள் தனித்திறமையுடன், ஏதாவது ஒரு பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் நபர்களை வரவேற்று வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். வாடிக்கையாளர்களைப் பொறுமையாகக் கையாண்டு அவர்கள் மனம் குளிர அழகூட்டினால் கூடுதல் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. 
திருமணம், திருமண வரவேற்பு, பள்ளி,கல்லூரி விழாக்களிலும் இப்போது இத்தகைய அழகுக் கலை நிபுணர்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு நிகழ்ச்சிக்கே நிறைய வருமானம் பெற முடியும். முன்பெல்லாம், பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த அழகூட்டும் கடைகள் , சிறிய நகரங்களிலும் தங்கள் கிளைகளைத் தொடங்கியதிலிருந்தே காஸ்மடாலஜி துறையின் தேவை அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. 
வெள்ளித்திரை, சின்னத்திரை, ஆடல், பாடல் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் என இத்துறையின் தேவை பல தளங்களிலும் விரிவடைந்து வருகிறது. எனவே, விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் சுயமாக இத்தொழிலைச் செய்து, வருமானம் ஈட்டிட அழகுக்கலைப் படிப்பைக் கற்கலாம். 
B.Sc. in Beauty Cosmetology Course, Certificate in Cosmetology Course, Diploma in Cosmetology உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தமிழக அளவில் பல கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன. தனியார் அழகுக்கலை நிறுவனங்களும் கற்றுத் தருகின்றன.
ஆனால், சரியான அழகுக்கலையைக் கற்பிக்கும் தரமான நிறுவனங்களைத் தேர்வு செய்து படித்தால் வெற்றி நிச்சயம்.
வி.குமாரமுருகன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com