சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்!

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இப்போது மேலும் சில துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்!

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இப்போது மேலும் சில துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

நியூக்கிளியர் மெடிசன் டெக்னலாஜி (Bachelor of Science in Nuclear Medicine Technology):

நியூக்கிளியர் மெடிசன் டெக்னலாஜி துறை சார்ந்த படிப்பு, குறைந்த அளவு கதிர்வீச்சை வெளியிடும் கதிரியக்க பொருள்களைப் பயன்படுத்தி மனித உடலில் உள்ள நோய்களைக் கண்டறிவதற்கும், குறிப்பிட்ட சில நோய்களைக் குணப்படுத்துவதற்கும் உதவும் படிப்பாகும். மனித உடலில் உள்ள மூலக்கூறு
களின் நிலை, திசுக்களினிடையே ஏற்படும் உயிரியல் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கண்டறிய இந்த நியூக்கிளியர் மருத்துவத் தொழில்நுட்பம் உதவுகிறது.

இவர்கள் ஒரு நோயாளிக்கு அவரின் உடல்நிலைக்கு ஏற்ப எந்த அளவுக்கு கதிர்வீச்சை அளிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, நியூக்ளியர் மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்களிடம் தெரிவிப்பார்கள். இந்தப் படிப்பு மிகுந்த தொழில்நுட்பம் உள்ள காமா கேமரா, PET ஸ்கேனர், தைராய்ட் அப்டேக்ப்ரோப் போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் திறன்களை ஏற்படுத்தித் தருகிறது.

இந்தக் கருவிகளின் வாயிலாகக் கிடைக்கக் கூடிய தரவுகளைச் சேகரித்து, பல்வேறு நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிய இந்தப் படிப்பு உதவுகிறது.

ஒரு நோயாளியின் உடல்நிலையைப் பற்றிய தகவல்களை இந்தக் கருவிகளின் வாயிலாகச் சேகரிப்பது, கதிரியக்க மருத்துவம் மேற்கொண்ட போது எந்த அளவில் எல்லாம் கதிர்வீச்சுகள் நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டன என்பதை பதிவு செய்வது ஆகியவை இதைப் பயின்றவர்களின் பணியாகும்.

கதிரியக்க மருத்துவத்தைச் செய்யும்போது, அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை இந்தப் படிப்பு சொல்லித்தருகிறது. கதிர்வீச்சினால் நோயாளியோ, மருத்துவர்களோ, மருத்துவப் பணியாளர்களோ பாதிப்படையாமல், எந்த அளவுக்குக் குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த நியூக்ளியர் மெடிசன் டெக்னாலஜி மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

ரேடியோகிராபி, மெடிகல் இமேஜிங் தொடர்பான அறிவை மாணவர்களுக்கு இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது. பல்வேறு கதிரியக்க மருத்துவம் சார்ந்த திறமைகளையும் அறிவையும் மாணவர்களுக்கு இந்தப் படிப்பு ஏற்படுத்துகிறது. ரேடியோகெமிஸ்ட்ரி, அப்ளைடு பிசிக்ஸ், ரேடியேசன் பிசிக்ஸ் மற்றும் எக்யூப்மென்ட் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் மாணவர்
களின் அறிவை இந்தப் படிப்பு வளர்க்கிறது.

ஆக்குபேஷனல் தெரபி ( Bachelor of Occupational Therapy) (BOT):

ஒரு தனிப்பட்ட நோயாளியை மையப்படுத்தி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியை இந்த ஆக்குபேஷனல் தெரபி பயின்ற மாணவர்கள் செய்வார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை, வேலை, கல்வி, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றில் மக்களின் தேவை என்ன, மக்கள் எவற்றைச் செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை மேம்படுத்துவது இவர்களின் பணியாகும்.

மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் உடல்ரீதியான, மனரீதியான, சமூகரீதியான பிரச்னைகள் ஆகியவை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்து கொள்வது ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் முக்கிய பணியாகும்.

வகுப்பறையில் சொல்லித் தரும் கல்வியுடன் மட்டுமல்லாது, நேரடியாக மக்களுடன் மாணவர்கள் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்வதும் இந்தப் படிப்பில் உள்ளடங்கும். மக்களின் வேலை காரணமாக அவர்களின் உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும், அந்தக் குறைபாடுகளினூடே மக்களைச் சிறப்பாகப் பணியாற்ற வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆக்குபேஷனல் தெரபி படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.

உதாரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையினர் ஏசி அறையில் வேலை செய்பவர்கள் உடலுக்குப் போதிய பயிற்சி அளிக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எம்மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வரும் காற்றில் எந்த அளவுக்குத் தூசி இருக்க வேண்டும்? அதைக் குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற வேலை சார்ந்த உடல் பிரச்னைகளைச்சரி செய்வதற்கான படிப்பு ஆக்குபேஷனல் தெரபியாகும். இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள், வயோதிகர்களுக்கான இல்லங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பிசியோ தெரபி:

மனிதர்களின் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நீக்கும் பணியை பிசியோ தெரபி கற்றவர்கள் செய்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களின் அன்றாட வாழ்க்கையில் இயல்பான நிலையைக் கொண்டு வருவதற்கு இந்தப் படிப்பு உதவுகிறது.

உடலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நோயாளிகளை மீட்டு, அவர்களை இயல்பான நிலைக்குக் கொண்டு வருவதற்கு என்ன சிகிச்சைகளைச் செய்வது? எம்மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது? என்ற சொல்லித் தருவது பிசியோ தெரபிஸ்ட்களின் பணியாகும். முகவாதம், பக்கவாதம், தலையில் காயம், தசையின் செயல்பாடுகளில் ஏற்படும் இயல்பு பிறழ்ந்த நிலை, எலும்பு முறிவு, மூட்டுவிலகல், இதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடையது பிசியோ தெரபி படிப்பு ஆகும். இவற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவது பிசியோ தெரபிஸ்ட்களின் பணியாகும்.
இவர்கள் தங்களுடைய பணியின் வாயிலாகக் கற்றுக் கொள்வதே அதிகம். அனாடமி, பிசியாலஜி, எக்ஸர்ûஸஸ் தெரபி, எலக்ட்ரோ தெரபி, பயோ மெகானிக்ஸ், மேனுவல் தெரபி, கிளினிகல் ஆர்த்தோ பேடிக்ஸ் ஆகியவை பிசியோ தெரபி படிப்பின் பாடத்திட்டத்தின் உள்ளடங்குபவையாகும்.

பிசியோ தெரபி படித்தவர்கள் உடலின் இயக்கம் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பதுடன், உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை நீக்குவது, உடல் உறுப்புகள் சரியாக இயங்காதநிலையை மாற்றியமைப்பது ஆகியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்கும் திறனும் பெற்றிருப்பார்கள்.

உடலில் இயங்காமல் முடங்கிப் போன செல்களை இயங்க வைப்பதும் பிசியோ தெரபி படித்தவர்களே.

பிசியோ தெரபி படித்தவர்கள் orthopaedics, paediatrics, neurology, cardiopulmonary, sports, oncology, community physiotherapy ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பைப் படிக்கலாம். இத்துறையில் முனைவர் பட்டப் படிப்பும் உள்ளது.

Prosthetics & Orthotics (BPO)

கால், கை ஊனமுற்றவர்களுக்கு செயற்கைக் கை, கால்களை உருவாக்குபவர்கள் இந்தப் படிப்பு படித்தவர்களே. இவர்கள் இது தொடர்பான அறிவைப் பெற்றிருப்பதுடன் செயல்முறைப் பயிற்சியையும் மேற்கொள்வார்கள்.

செயற்கைக் கைகள், கால்களை வடிவமைத்தல், உருவாக்குதல், பொருத்துதல் ஆகியவை இவர்களின் பணியாகும்.

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டவர்கள் அதற்குப் பிறகு எந்த அளவுக்கு பிற மனிதர்களைப் போல தங்களுடைய கை, கால்களை இயக்குகிறார்கள் என்பதைக் கண்டறிவதும், தேவையான மாறுதல்களைச் செய்வதும் புராஸ்தெடிக்ஸ் மற்றும் ஆர்தோடிக்ஸ் படிப்பு படித்தவர்களின் வேலையாகும்.

பிற மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து, போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள், பெருமூளை வாதம், நீரிழிவு நோய், தலையில் பலத்த காயமடைந்தவர்கள், தண்டுவட பாதிப்பு உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பணியாற்றுவார்கள்.

மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிப்பது இவர்களின் சிறப்பாகும்.

Bachelor of Business Administration (BBA) – Hospital Administration

ஆக்ஸிலியம் கல்லூரியும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் இணைந்து திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வாயிலாக இந்த பேச்சலர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை வழங்கி வருகிறார்கள். இந்தப் படிப்பு பெண்களுக்கு மட்டும் சொல்லித் தரப்படுகிறது.

மருத்துவத்துறையின் செயல்பாடுகள்மற்றும் நிர்வாகம் தொடர்பான இந்தப் படிப்பில் மருத்துவமனைகளின் நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, மருத்துவமனையின் அன்றாடச் செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகியவை சொல்லித் தரப்படுகின்றன.

இந்தப் படிப்பு படிப்பவர்கள் 3 மாதம் நேரடிப் பயிற்சி பெற வேண்டும். அதற்காக வேலூரைச் சுற்றியுள்ள பல மருத்துவமனைகளில் இவர்கள் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள்.

பிளஸ் டூ படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நிறைய துணை மருத்துவப்படிப்புகள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி மட்டுமே நாம் சொல்லியிருக்கிறோம். இந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் அரசுக்கல்லூரிகளில் மிகக் குறைவாக உள்ளது. அரசுக் கல்லூரிகள், ஜிப்மர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, தில்லியில் உள்ள ஆல் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸஸ், நிம்ஹான்ஸ் போன்ற கல்லூரிகளில் படிப்பதற்கான கல்விக் கட்டணம் ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரு. 40 ஆயிரம் வரை ஆகும். தனியார் கல்லூரிகளில் குறைந்தது ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இதற்குக் கட்டணம் செலுத்த
வேண்டியிருக்கும்.

மேலும் அரசுக் கல்லூரிகளில் படிப்பதால் கிடைக்கும் அறிவும், நடைமுறை பயிற்சியும் தனியார் கல்லூரிகளில் கிடைப்பது ஐயமே. 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கல்லூரிகளில் பயின்றால், அவற்றில் பயின்றவர்கள் திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்று கருதி அடுத்தடுத்த உயர் வாய்ப்புகள் அங்கு படிக்கும் மாணவர்களுக்குக் கிட்டுவதும் எளிதாகும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com