ழுத்துலகில் இளம் மேதைகள்?

ஊரடங்கு காலகட்டத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிர்பந்தம். தற்செயலாக கை பேசியைத் துழாவின போது ராகுல் வெள்ளால் (வயது 11) என்ற சிறுவனின் இசையைக் கேட்க நேர்ந்தது.
ழுத்துலகில் இளம் மேதைகள்?


ஊரடங்கு காலகட்டத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிர்பந்தம். தற்செயலாக கை பேசியைத் துழாவின போது ராகுல் வெள்ளால் (வயது 11) என்ற சிறுவனின் இசையைக் கேட்க நேர்ந்தது. அந்தச் சிறு வயதில் அவனுக்கு ஞானம் அதிகம்தான் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் இசையுலகில் அந்தக் காலத்திலேயே மேதைகளாகச் சிலர் உலா வந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. புல்லாங்குழல் மாலி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்கள்.

திரையுலகில், சின்னஞ்சிறு வயதில் நடிப்புத் திறமையைக் காண்பித்தவர்களை "குழந்தை நட்சத்திரம்' என்கிற அடைமொழியுடனே அறிமுகம் செய்கிறார்கள். "யார் பையன்' படத்தில் வந்த டெய்ஸி இரானியை மறக்க முடியுமா? (ஜெமினி கணேசனைப் பதற வைத்த வாக்கியம் "மகாகனம் பொருந்திய ஸ்ரீமான்')

திருமுருக கிருபானந்த வாரியார் மிகச் சிறு வயதிலேயே அபார நினைவாற்றலின் மூலம் சொற்பொழிவுத் திறமையை வெளிப்படுத்தினார். இப்போது அவருடைய சீடர் எனக் கருதப்படும் தேச மங்கையர்க்கரசியும் ஆன்மிகச் சொற்பொழிவில் ஈடுபடுகிறார். பல மாணவர்கள் திருக்குறள் மொத்தமும் ஒப்பிப்பதைக் கேள்விப்படுகிறோம்.

ஓவியத்தை எடுத்துக் கொண்டாலோ, ஆர்.கே. லஷ்மண் பள்ளியில் படிக்கும் போதே, தன் வகுப்பு ஆசிரியரைச் சித்திரமாக வரைந்திருக்கிறார். போகப் போக அவர் அபாரமாக முன்னேறி, பல விருதுகள் பெற்று இந்தியா முழுதும் பிரபலமானார். அவருடைய சாதாரண மனிதன் என்றும் நினைவிலிருப்பான். (You Sad It).

மேற்சொன்ன அனைத்து கலைகளுக்கும் முற்றும் வேறுபட்டது "எழுத்து'. மற்றவையெல்லாம் "பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ்' வகையைச் சேர்ந்தவை. பார்வையாளர்கள் நேரில் தங்களது திறமையை நிருபிக்கலாம். ஓவியத்தையும் இந்த வகையில் சேர்ப்பதற்கு ஒரு காரணமுண்டு.

பல ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. 1998 -ஆம் வாக்கில், கோவைக்கு வந்திருந்த ஆர்ட்டிஸ்ட் மதன், பார்வையாளர்கள் முன் ஒரு பலகையில் சட்சட்டென்று, சில சித்திரங்களை வரைந்து பிரமிக்க வைத்தார். கேள்வி&பதில் பகுதியில் சுவையாகப் பதிலளித்தார். (திரை அனுபவமும் அவருக்குக் கொஞ்சம் இருந்தது).

ஆக, எழுத்தைத் தவிர, பிற கலைகள் யாவற்றுக்கும் நேர்முகத் தேர்வு போல் ஒன்று வைத்து குறிப்பிட்ட நபரின் திறமையை இனம் காண முடியும். எழுத்து அது போலில்லை. கண்ணுக்குப் புலப்படாத பல வாசகர்களை அது ஈர்க்க வேண்டியது அவசியம்.

மேலும் சில வித்தியாசங்கள்:

நடிப்பிலிருந்து இசை வரை, ஓவியம் உள்பட, சொல்லிக் கொடுக்க பள்ளிகள், மையங்கள் பல உள்ளன. (அதுவும் இந்த லாக் டவுன் காலத்தில் கேட்கவே வேண்டாம்). எழுத்தாளன் ஆவதற்கு அது இல்லை. ரா.கி. ரங்கராஜனைத் தவிர வேறு யாரும் பயிற்சிப் பள்ளிநடத்தினதில்லை.

கொலு, வைபவங்கள், சின்னத்திரை, பள்ளிக்கூடங்கள், பொது மேடை என்று பிறவற்றுக்குத் தளங்கள் உள்ளன.

ஆனால் எழுத்துக்குப் பத்திரிகை ஒன்றுதான் தளம். பத்திரிகை அல்லாத தனி புத்தகமாக வெளியிட்டு பிரபலமானவர்கள் உண்டு. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், மேதாவி, சிரஞ்சீவி போன்ற சிலர். ஆனால் இவை எல்லாம் துப்பறியும் கதை ரகங்கள்தாம்.
வாசன் விகடன் ஆரம்பிப்பதற்கு முன், குடியிருந்த காமகோடி ஐயர் வேண்டுகோளுக்கு இணங்க "சதி சுலோசனா' என்ற நாடகத்தை எழுதினார். துப்பறியும் நாவல்
களையும், இன்ப நூல்களையும் தாமே எழுதி விற்றார்.
குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை பத்திரிகை தொடங்கும் முன் பிரசண்ட விகடனில் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆக, பத்திரிகை ஒன்றுதான் ஆரம்ப எழுத்தாளனின் திறமைக்கு அடித்தளம்.
பிற துறைகளில் உள்ள நம்பகத் தன்மை என்பது எழுத்திலில்லை. பத்து வயசுப் பையன் எழுதினது என்று ஒரு ஏடு பிரசுரித்தாலும், யார் நம்புவார்கள்? நிருபிப்பது கடினம். ஏன், ஒரு பிரபல எழுத்தாளரே ஆரம்ப நாளில் "பரிசோதனை' என்ற பத்திரிகைக்கு எழுதி, அது தொலைந்து விட்டது. மீண்டும் மீண்டும் போய்க் கேட்ட போது கூட பிரதி கிடைக்கவில்லை. மறுபடி எழுதினார்.
""ஒரு முறை எழுதி முடித்த கதையை மீண்டும் எழுதுவது எளிதில்லை. எல்லா நயங்களும் கிடைக்குமா என்பது சந்தேகம்'' என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
எழுதுவது எப்படி ஒரு தனிமை உணர்வுள்ள அனுபவமோ, அது போலத்தான் வாசகர்களின் வாசிப்பு அனுபவமும். சில நயங்களை மனத்தில் உள் வாங்கித்தான் ரசிக்க முடியும். கல்கியின் வர்ணனைகள், அ. முத்துலிங்கத்தின் நயமான சொற்றொடர்கள், நாஞ்சில் நாடன் அரசியல் கிண்டல்கள்... இவற்றைத் தனியாகத்தான் ரசிக்க முடியுமே தவிர, பிறருடன் பகிர்ந்து கொள்வது கடினம்தான்.
ஆக, எவ்வகையில் பார்த்தாலும், எந்தக் கோணத்தில் அலசினாலும், இள மேதைகள் எழுத்துலகில் தோன்றுவது அரிது.
பி.கு: நான் சொல்வது தமிழில் மட்டும். இந்திய மொழிகள் வேறு ஏதாவதிலோ, ஆங்கிலத்திலோ இள மேதைகள் இருந்தால் தெரிவிக்கலாம்
- வாதூலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com