தானியங்கியில் இயங்கும் வீடு!

நாமக்கல், முதலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த நவீன் என்கிற 29 வயது இளைஞர், தான் கற்ற கணினி தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு தானியங்கியில் இயங்கும் வகையில் வீட்டை அமைத்திருக்கிறார்.
தானியங்கியில் இயங்கும் வீடு!

நாமக்கல், முதலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த நவீன் என்கிற 29 வயது இளைஞர், தான் கற்ற கணினி தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டுதானியங்கியில் இயங்கும் வகையில் வீட்டை அமைத்திருக்கிறார். இதற்கு அவருக்குஉதவியது தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியில் பொருத்தப்பட்டுள்ள "லினக்ஸ்' என்ற மென்பொருள்.

வீட்டுக்குள் நுழைந்தால் தானாகச்சுழலும் மின்விசிறி, தானாக ஒளிரும் மின்
விளக்கு, தானாக அடிக்கும் அலாரம்,

தொடாமல் இயங்கும் கணினி போன்ற பல சாதனங்கள் இங்கு உள்ளன.
இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகின? காலைப் பொழுதில் கணினி முன்பு காபியுடன் காத்திருந்த நவீனைச் சந்தித்த போது அவர் கூறியது:

"நான் பெரிதாகச் சாதித்து விட்டேன் என்று நினைக்கவில்லை. என் மன திருப்திக்காக முடிந்தவற்றைச் செய்திருக்கிறேன். நான் இதற்காகச் செலவழித்தது லட்சங்களை அல்ல. சனி, ஞாயிறு விடுமுறை நாள்களை மட்டுமே.

பிளஸ் 2-க்குப் பின் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினித் தொழில் நுட்பம் படித்தேன். இறுதி ஆண்டில் மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சித்தோம். தொடக்கத்தில் அமேசான், பிளிப்கார்ட் போல ஆன்லைன் விற்பனைக்கான மென் பொருளை உருவாக்க முயற்சித்தோம்; அது தோல்வியில் முடிந்தது.

அதன் பின் கூகுள் மேப்புக்குள் சென்று ஒரு மாவட்டத்தையோ, மாநிலத்தையோ "கிளிக்' செய்தால் தகவல்களைக் கொடுக்கும் மென்பொருளை உருவாக்கினோம். கூகுள் மேப்பில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என புள்ளிகள் காட்டும். குறிப்பிட்ட புள்ளியை "ஜூம்' செய்து பார்த்தால்
அங்குள்ள நிகழ்வுகள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அவை அரசியல் நிகழ்ச்சியாக இருக்கலாம்; அரசு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்;

குற்றச் சம்பவங்கள், காலண்டர் தகவல்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு நிறத்தைப் பொருத்தி மென்பொருளை தயாரித்தோம். அதனைப் பார்த்துவிட்டு 14 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்தன. இருந்தபோதும் அந்த வேலைக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை.

அரசு அலுவலகங்களில் கணினிபழுதுபார்த்தல், சாதனங்களைப் பொருத்திக் கொடுப்பது போன்ற சிறு வேலைகளைச் செய்து வந்தேன். இவை தவிர நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கான இணையதளம், ரசீது வழங்கும் மென்பொருளை உருவாக்கிக் கொடுத்துள்ளேன். கிடைத்த வருமானத்தை முதலீடாகக் கொண்டு தேவையான சாதனங்களை வாங்கினேன்.

கல்லூரியில் படித்தவற்றை மீண்டும் படித்ததன் மூலமும், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதன் மூலமும் சில தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக, அரசின் விலையில்லா மடிக்கணினியில் உள்ள மென்பொருளான "லினக்ஸ்' மென்பொருளைப் பயன்படுத்தி சாதிக்கலாம்என்பது தெரியவந்தது.

அவ்வாறு தோன்றியதுதான் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குவது, இணையதளம் மூலம் வீட்டில் தானாக இயங்கும் வகையிலான மின்விசிறி, கணினி போன்றவை. எனது வீட்டின் மேற்பகுதியில் சோலார் பேனல் பொருத்தியுள்ளேன். அதில் கிடைக்கும் மின்சாரம் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

என்னுடைய கணினிகளில் வீட்டில் உள்ளோருக்கென தனியாக யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு உருவாக்கியுள்ளேன். அவற்றை அவர்களுக்கான செல்லிடப்பேசியில் இணையதளம் வழியாக இணைத்துள்ளேன். அதன்மூலமாக, வீட்டு உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றவுடன், மின் சாதனங்கள் இயங்குவது தானாகவே நின்றுவிடும். அதேபோல வீட்டுக்குள் நுழையும்போது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

அமெரிக்காவில் இருந்து கொண்டும்கூட இங்குள்ள வீட்டின் சாதனங்களை "லினக்ஸ்' மென்பொருளைப் பயன்படுத்தி இயக்க முடியும். இதற்காக 12,000 ஜி.பி. கொண்ட 6 கணினிக்கு உரிய சாதனங்களை ஒரே கணினியாக உருவாக்கியுள்ளேன்.

இவை தவிர, மக்கும் பிளாஸ்டிக்கைக் கொண்டு நமது பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்கும் வகையில் தானியங்கிக் கருவி ஒன்றும் உள்ளது. கணினியில் வடிவமைத்துவிட்டு பட்டனைத் தட்டினால் தானாகவே அந்தப் பொருளை கருவி உருவாக்கித் தந்துவிடும். உதாரணமாக, விநாயகர் சிலையை வடிவமைக்க 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது அக்கருவி.

இவற்றுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை இணையதளம் மூலம் பதிவு செய்து மும்பை, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறேன்.
அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணியை சினிமா பார்ப்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் பயன்படுத்தாமல், அதில் உள்ள மென்பொருளைக் கொண்டு பல வகைகளில் இளைஞர்கள் சாதிக்கலாம்.

விலை கொடுத்து வாங்கும் மென்பொருளும் உள்ளது; விலையில்லா மென்பொருளும் உள்ளது. மென்பொருளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டால், வெளிச்சந்தையில் ரூ. 8 ஆயிரத்துக்கு வாங்குவதை, குறைந்தபட்சம் ரூ. 5ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். "லினக்ஸ்' மென்பொருளைக் கொண்டுதான், நான் விரும்பியவற்றைக் கண்டறிந்துள்ளேன். இளைஞர்கள்பலரும் கையில் இருக்கும் அற்புதமான அந்த மென்பொருளைப் பயன்படுத்தத் தவறுகின்றனர்.

கல்லூரிப் படிப்புக்கு பிந்தைய பத்து ஆண்டுகளை, நேரத்தை விரயமாக்காமல்
கண்டுபிடிப்புக்குரிய களமாக மாற்றிக் கொண்டுள்ளேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்கிறார் நவீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com