வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 274

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 274


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. 
தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் வந்து மன்னர் வீரபரகேசரியிடம் முழந்தாளிட்டு வணங்கி தன் வாளை கீழே வைத்து மன்னரின் கால் வைத்த இடத்தில் முத்தமிடுகிறார். 
வீரபரகேசரி: இதென்ன புதுப் பழக்கமய்யா?  
ராஜராஜ கம்பீர சேதிராயன்: மரியாதையைக் காட்டுவதற்காக மன்னா! 
வீரபரகேசரி: I detest such obsequiousness. 
புரியுதா?
ராஜராஜ கம்பீர சேதிராயன்: யான் பெருந்தொற்றுக்கான டெஸ்ட் எடுத்து விட்டே இங்கு வந்திருக்கிறேன்... மன்னர் மன்னா?
வீரபரகேசரி: உன் அறிவைத் தீயில் வைக்க. அது detest. Test  இல்ல. 
ஜூலி: என்ன ஓர் அழகான குழப்பம்.
கணேஷ்: ஏன் ஜூலி?
ஜூலி: டெஸ்ட் என்றால் இன்று தேர்வு, பரிசோதனை எனும் பொருளைக் கொள்கிறோம். ஆனால் ஆதியில் இது சாட்சி சொல்வது எனும் பொருளில் வழங்கியது. Detestari என ஒரு பழைய லத்தீன் சொல் உள்ளது. அதன் பொருள் பொதுமன்றத்தில் சாத்தானைத் தூற்றுவது, அதைக் காண தெய்வங்களை அழைப்பது. இச்சொல்லில் இருந்தே கடுமையாக ஒருவரை அல்லது ஒன்றை வெறுப்பது எனும் பொருளில் detest எனும் சொல் தோன்றியது. Test எனும் சொல்லின் மூலமும் இப்படி சாட்சியம் சொல்ல வருவிப்பது எனும் பொருளில் இருந்தே தோன்றியது. ஆனால் இப்போது இரண்டு சொற்களும் சம்பந்தமில்லாமல் தனித்தனியான தளங்களில் புழங்குகின்றன. ஒன்று புறவயமான சோதனைகளுக்கும், இன்னொன்று உணர்வுரீதியான வெளிப்பாடுகளுக்கும் பயன்படுகிறது. ஆனால் இவற்றின் தோற்றுவாய் ஒன்று தான். அதனால் தான் அதிகம் ஆங்கிலம் தெரியாத சேதிராயன் குழம்பி விட்டார். 
கணேஷ்: சினிமாவில் ஹீரோயினுக்கு கோபம் வரும் போது ஹீரோவை நோக்கி ஐ ஹேட் யு, ஐ ஹேட் யூ என கத்துவாங்களே அந்த மாதிரியான வெறுப்பா?
ஜூலி: ம்ம்ம்... அப்படிச் சொல்ல முடியாது. 
கணேஷ்: ஏன்? 
ஜூலி: ரெண்டும் ஒண்ணில்ல. யோசிச்சுப் பாரேன் - I detest you, get lost என ஹீரோயின் சொன்னால் ஹீரோ வெறுத்துப் போய் ஓடி விடுவார். ஆனால் I hate you, I hate என திரும்பத் திரும்ப சொன்னால் கொஞ்ச நேரம் கொஞ்சி மன்றாடி மீண்டும் நெருங்கி விடலாம் என நம்பிக்கையுடன் இளித்துக் கொண்டு நிற்பார். நம் சினிமாவில் அதானே வரலாறு? இரண்டுக்கும் இப்படி வித்தியாசம் பயன்பாட்டில் உள்ளது. 
கணேஷ்: அதான் எப்படி? 
ஜுலி: உனக்கு வேறேதும் இல்லையா 
கேட்குறதுக்கு? 
புரொபஸர்: டேய் கணேஷ், இங்கே வா நானே சொல்றேன். 
கணேஷ்: சார், மேடம் உங்களிடம் ஹேட் யூ சொல்லி இருக்காங்களா? 
புரொபஸர்: ஓ! பலமுறை பல தொனிகளில். ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள். சீண்டல், பொருமல், கடுப்பு, பாசம் என. Love மாதிரியே hate எனும் சொல்லும் இயல்பாக்கம் பெற்றதில் அதன் இனிப்பு, காரம் குறைந்து விட்டது. எது சொல்லப்படலையோ அது முக்கியமாயிற்று. ஆனால் detest எனும் சொல் அதிகம் புழக்கத்தில் இல்லை. நாம மிக அரிதாகத்தான் ஒருவரை, ஒன்றை detest பண்ணுவோம். To detest is to intensely hate. அந்த ண்ய்ற்ங்ய்ள்ண்ற்ஹ் ஒரு தடவை ஏற்பட்டால் சீக்கிரம் போகாது. அதுதான் வித்தியாசம்.
கணேஷ்: சார், நீங்க காதலுக்கு ஓர் இலக்கணமே 
எழுதலாம்.
புரொபஸர்: என்ன எழுதி எதுக்கு? அவளுக்கு 
என்னைப் புரியலையே. 
கணேஷ்: சார்... அதை விடுங்க. அதென்ன obsequious? 
புரொபஸர்: To be ingratiating. To be servile and sycophantic.

கணேஷ்: என்ன? 
புரொபஸர்: ஒருவரின்  காலைத் தொட்டு மிகப் பணிவோடு வணங்குவாங்களே அதுதான்  obsequious. மிகையாக மரியாதை காட்டுவது. ஜால்ரா அடிப்பதுதான் to ingratiate. Servile என்றால் அடிமைத்தனம். Sycophantic என்றால் ஜால்ரா அடித்தே பிழைப்பை ஓட்டுவது. 
ஜூலி: இந்த sycophant எனும் சொல்லின் பொருளும் கடந்த சில நூற்றாண்டுகளில் தலைகீழாக மாறி விட்டது.  
கணேஷ்: அதென்ன சார் மேட்டர்?
 புரொபஸர்: சொல்றேன் இரு.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com