குற்றம் பார்க்கின்... சுற்றமும் ஏற்றமும் உண்டு!

உங்கள் முடிவுகளில் உறுதியாகஇருங்கள். ஆனால், உங்கள்அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள்.
குற்றம் பார்க்கின்... சுற்றமும் ஏற்றமும் உண்டு!


உங்கள் முடிவுகளில் உறுதியாக
இருங்கள். ஆனால், உங்கள்
அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள்.

- டோனி ராபின்ஸ்

இளைஞன் ஒருவன், ஓர் அவசர வேலை நிமித்தமாக பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து பக்கத்திலிருந்தவரை முறைத்துப் பார்த்தான். அவ்விடத்தில் துர்நாற்றம் வீசி கொண்டிருந்ததுதான் அவன் முறைத்ததற்குக் காரணம். முகம் சுளித்த அந்த இளைஞன் அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தான். அங்கேயும் அதே நாற்றம். மிகவும் வெறுப்படைந்தவனாக அந்த இளைஞன், "நாற்றம் பிடித்த பயல்கள்' என்று திட்டிகொண்டே அந்தப் பேருந்திலிருந்து இறங்கிப் போய் விட்டான்.

உண்மையில் துர்நாற்றம் அவனிடமிருந்து வீசியதென்பதை அந்த இளைஞன் உணரவில்லை. ஏனெனில் பேருந்தில் ஏறும்போது அவனது செருப்பில் அசிங்கம் ஒட்டியிருந்தது. அதனால் கெட்ட நாற்றம் உண்டாயிருந்தது. அதை உணராத அவன் மற்றவர்களிடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நினைத்தான்.

பல வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்கிறோம்.

பிறரைக் குற்றம் சொல்வதில் நமது நாவு விரைவாய் செயல்படுகிறது. பிறரைக் குறை கூறும் முன்பு நம்மிடம் அந்த குறையோ அல்லது வேறு குறைகளோ இருக்கிறதா என எண்ணிப் பார்ப்பதில்லை. நாம் குறை கூறும் மனிதர்களை விட நம் குணத்தில் அநேக குறைகள் இருக்கலாம். எப்போதுமே நமது குறைகளைத் துரும்பாகவும் பிறரது குற்றங்களைத் தூணாகவுமே பார்த்துப் பழகி விடுவோமானால் அவை வெகுவிரைவில் நமக்கருகில் தோல்வியின் பாதையாக நமக்காக உருவாக்கியிருக்கும்.

ஒருநாள் சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சாக்ரட்டீஸின் நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , ""என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் மூன்று கேள்விகளைக் கேட்பேன். மூன்று கேள்விக்கும் "ஆம்' என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றிக் கூறலாம்'' என்றார்.

""அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?'' என்று சாக்ரட்டீஸ் தன் முதல் கேள்வியைக் கேட்டார்.

""இல்லை'' என பதில் சொன்னார் வந்தவர்.

""அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?'' என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார் சாக்ரட்டீஸ். இதற்கும் ""இல்லை'' என்பதே வந்தவரின் பதில்.

""அந்த நண்பரைப் பற்றி நீங்கள் என்னிடம் கூறப்போகும் செய்தியால் யாராவது பயனடைவார்களா?''என்று மூன்றாவது கேள்வியையும் கேட்டு முடிக்க, இதற்கும் வந்தவரிடமிருந்து ""இல்லை'' என்றே பதில் வர, ""யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்'' என்று பொட்டில் அறைந்தாற்போல சொல்லி முடித்தார் சாக்ரட்டீஸ்.

நல்ல நட்பானது ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொண்டு, நேர்மறையான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் என்கிற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. நமது குறைகளையும் குற்றங்களையும் அபத்தமான தன்மைகளையும் நன்றாக நாம் அறிந்திருந்தோமானால், ஒருவருடைய வீழ்ச்சி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவரை அற்பமாய் நம்மால் நினைக்கவே முடியாது. நடக்கிற பிரச்னைகளுக்கு எடுத்தவுடன் மற்றவர்களைச் சுட்டிக்காட்டாமல், "இப்பிரச்னைக்கு நான் எவ்விதத்திலும் காரணமாக இருக்கிறேனா? என்னுடைய தவறான அணுகுமுறை காரணமாயிருக்குமோ?' என எண்ணிப் பார்க்க வேண்டும். துர்நாற்றம் பக்கத்திலிருப்பவரிடமிருந்து தான் வருகிறதா என்று முடிவுக்கு வரும் முன் என்னிடமிருந்து அந்த நாற்றம் வராமலிக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களாக நாம் வாழ்கிறோமா என்பதே தலையாயக் கேள்வி.

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பது முதுமொழி. குறிப்பாக, குடும்பத்திலே பிறரது குற்றங்களையே கண்டுபிடித்து, அதைப் பிறரிடம் தூற்றி, அவரைக் குறித்த தவறான எண்ணத்தை பிறர் மனதில் பதிய வைப்போமேயானால், வெகு விரைவில் சுற்றத்தார் அனைவரது நட்பையும் இழந்து நாம் தனியனாய் நிற்க வேண்டிய நிலை எற்படும்.

அதற்காக பிறரது தவறுகளையும், குறைகளையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டுமென்று என்பதல்ல இதற்கு அர்த்தம். நம்முடைய கண்களில் உள்ள தூசிகளை அகற்றாமல், பிறர் கண்களிலுள்ள அழுக்குகளை ஆராய்வது சரியல்ல என்பதே தர்க்கம்.

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை. மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எதுவுமில்லை. எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்க வேண்டாம். வசவுகளால் இதயங்களைக் கிழிக்க வேண்டாம்.

நல்லுறவுகளை வன்மையான நாவினால் இழக்க வேண்டாம். மென்மையான நட்புறவை இழிமொழியால் துளைக்க வேண்டாம்.

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உயிரூட்டப்பட்டவர்கள். நம்மைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்கிற மனப்பான்மையிலிருந்து மீள்வதே வளர்ச்சிக்கான முதல்படி. எனவே, மற்றவர்
களிடம் குற்றம் பார்த்து அனைவரையும் இழப்பதற்குப் பதிலாக, குற்றம் பார்க்கின்ற பழக்கத்தை, இயல்பை விடவே முடியவில்லை என்றால்... நம்மிடம் குவிந்துகிடக்கின்ற குறைகளை, கறைகளை குற்றமாகப் பார்த்து... அவற்றை உடனுக்குடன் சரிசெய்து பயணிப்போமேயானால் நம் ஒவ்வொருவருக்கும் சுற்றத்தோடு, ஏற்றமும் வெற்றியும் உண்டு.

எனவே நம்மிடம் உள்ள குற்றங்களை மட்டுமே அவசியம் சீர்தூக்கிப் பார்ப்போம். திருத்திக் கொள்வோம்... ஏற்றம் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com