முந்தி இருப்பச் செயல் - 29: சமரசப் பேச்சுத் திறன் - 2

முந்தி இருப்பச் செயல் - 29: சமரசப் பேச்சுத் திறன் - 2

சமரசப் பேச்சில் இருவேறு அணுகுமுறைகள் உள்ளன. முதலாவது, சிக்கல் தீர்க்கும் வழிமுறை.

சமரசப் பேச்சில் இருவேறு அணுகுமுறைகள் உள்ளன. முதலாவது, சிக்கல் தீர்க்கும் வழிமுறை. அதாவது இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி, பரஸ்பரம் ஏற்புடைய  தெரிவுகளை உருவாக்கி, பிரச்னையை  தீர்வை நோக்கிச் செலுத்தும், வழிகாட்டும் முறை. இதுதான் இன்று உலகெங்கும் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்னொரு அணுகுமுறை, பிரச்னைக்குத் தீர்வு காண்பதை விட, தகராறு கட்சிகளை அங்கீகரித்து, அதிகாரப்படுத்தி, அவர்களுக்கு இடையேயான உறவை மாற்றியமைப்பதை இலக்குகளாகக் கொண்டியங்குவது.

நியூயார்க் நகரில் சட்ட நிறுவனம் ஒன்றை இணைந்து நடத்திக் கொண்டிருந்த இரண்டு புகழ்பெற்ற வழக்கறிஞர்களுக்கிடையே ஒரு மனமாச்சரியம் எழுந்து, 1997-ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தைக் கலைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். ஆனால் தீரா கோபம், கசப்புணர்வு, பகைமை போன்றவற்றால், பிரச்னை நீதிமன்ற வழக்காகி நீண்டகாலம் நீடித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்ல்ஸ் ஹைட் ஜூனியர் மேற்படி வழக்கறிஞர்கள் இருவரிடமும் சொன்னார்:

""வெறும் பணத்தை மட்டும் பார்க்காதீர்கள். வாழ்க்கைத் தரம் என்றும் ஒன்று இருக்கிறது. உங்கள் பகைமையைக் கடந்துசென்றால், அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்; உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய நிம்மதியை அது உருவாக்கும்; உங்கள் வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயரும் என்பதையெல்லாம் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இந்த வழக்கு இப்படியே நீண்டு கொண்டிருந்தால், நீங்கள் இருவருமே வெற்றி பெற முடியாது'' வழக்கறிஞர்கள் இருவரும் ஓர் உடன்பாட்டை அடைய ஒத்துக் கொண்டார்கள்.

கடந்த 2006-ஆம் ஆண்டு மதுரையில் நீதிபதி தினகரன் மற்றும் நீதிபதி பத்ருடு ஆகியோரின் முன்னால் ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் ஆறு வயதுச் சிறுவனும், மூன்று வயதுச் சிறுமியும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கமான நீதிமன்ற வழிமுறைகளையும், வழக்குக்கட்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதிகள் இரண்டு குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தனர்.

அந்த இரண்டு அமெரிக்கக் குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்தனர் நீதிபதிகள். கதை இதுதான்:

அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த தம்பதியருக்கிடையே ஒரு தகராறு எழ, மனைவி அந்தக் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துவந்து தன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, வேலைக்குத் திரும்பிச் சென்று விட்டார். கணவர் திருச்சியில் வாழ்ந்த தனது மாமனார்-மாமியாரை நேரில் அணுகி, குழந்தைகளைத் தரும்படி கேட்க, அவர்கள் மறுத்துவிட்டனர். தங்கள் மகளைக் கொடுமைப்படுத்துகிறார் என்று அவர்கள் குற்றம்சாட்ட, இவரோ தன்னுடைய மனைவி திமிரோடு நடப்பதாக முறையிட்டார்.

குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி கவலையுறுவதாகச் சொன்ன நீதிபதிகள், மனுதாரரிடம் தன்னுடைய மனைவியை தொலைபேசியில் அழைத்து, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும்படி பணித்தார்கள். ""இருதரப்பிலுமே தவறுகள் இருக்கலாம்; ஆனால் நீங்கள் மன்னிப்புக் கேட்பதால் எதையும் இழக்கப் போவதில்லை, மாறாக எல்லாவற்றையும் பெறப் போகிறீர்கள்'' என்று அறிவுரைத்தார்கள்.

மனுதாரரும், அவரது பெற்றோரும், மாமனார், மாமியாரும், குழந்தைகளும் அன்றிரவு ஒன்றாகத் தங்கியிருந்து, மனைவியோடு தொலைபேசியில் பேசிவிட்டு, மறுநாள் வரும்படி ஆணையிட்டார்கள். பிரச்னை தீர்ந்ததும், மனைவியை இந்தியாவுக்கு வரவழைத்து, இங்கேயே அனைவரும் சமாதானமாக வாழுங்கள் என்று அறிவுரைத்து அனுப்பினார்கள்.

பிணக்குகளைத்  தீர்ப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், உறவுகளை மேம்படுத்துவதும் சமரசப்பேச்சின் சாரமாக இருப்பது சிறந்தது. இது தனிமனித உறவுகளுக்கு மட்டுமல்ல, பன்னாட்டு உறவுகளுக்கும் பொருந்தும்.

பன்னெடுங்காலமாக நடந்துவரும் நுண்மங்களும், சிக்கல்களும் நிறைந்த மத்திய-கிழக்குப் பெருந்தகராறில் சமரசம் ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (1977-1981) தலைப்பட்டார். இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்களுடன் பல மாதங்களாகப் பேசி, மனமிளகச் செய்து, மனமாற்றம் கொணர்ந்து, பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேரிலான்ட் மாநிலத்திலுள்ள கேம்ப் டேவிட் எனும் அதிபரின் ஓய்விடத்தில் சமரசப் பேச்சுவார்த்தையை நடத்தினார் கார்ட்டர்.

கீரியும் பாம்புமாக அடித்துக் கொண்டிருந்த இஸ்ரேலிய  பிரதமர் மேனாக்கம் பெகின் மற்றும் எகிப்து நாட்டின் அதிபர் அன்வர் சதாத் இருவருக்குமிடையே 
சமரசப்பேச்சு நடத்துவதற்கு முன்னர், கார்ட்டர் ஓர் ஓய்வுப் பயணம் சென்றார். அவர் சொல்கிறார்:

""அப்போது பெகின் மற்றும் சதாத் பற்றி அமெரிக்க உளவுத்துறையிலுள்ள மனோதத்துவ நிபுணர்கள் தயாரித்தளித்திருந்த இரண்டு விரிவான விவரக் குறிப்புக் கையேடுகளை உடன் எடுத்துச் சென்றிருந்தேன். அவை நான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் இரண்டு தலைவர்களின் குணநலன்கள், குடும்பப் பின்னணி, அரசியல் பின்புலம், கடமைகள், நண்பர்கள், எதிரிகள், சமரசப் பேச்சின் வெற்றியால் அவர்களுக்கு எழவிருக்கும் விளைவுகள் பற்றியெல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தன. கேம்ப் டேவிட் சென்றடையும்போது, அவர்களே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெகின் மற்றும் சதாத் பற்றி நான் ஆழமாக அறிந்திருந்தேன். இருவேறுபட்ட மனிதர்களை ஒரு பேச்சுவார்த்தையில் இணைத்து வழிநடத்துவதற்கு அது எனக்கு மிகவும் உதவிற்று''

கார்ட்டர் முதலில் பெகினை சந்தித்துப் பேசினார். பின்னர் சதாத்துடன் பேசினார். எவ்வளவு நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க முடியுமோ, எவ்வளவு படைப்புத்திறனுடன் தீர்வுகள் பற்றி சிந்திக்க முடியுமோ, அப்படிச் செய்யும்படி இருவரையும் கேட்டுக் கொண்டார்.

சதாத்தைப் பொறுத்தவரை, இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் எகிப்தின் பகுதிகளைத் திரும்பப் பெறுவது, பாலஸ்தீனியர்களுக்கு இறையாண்மை வழங்குவது, பிற அரபு நாடுகளுடனான இஸ்ரேலிய உறவை மேம்படுத்துவது போன்றவை முக்கியமான விடயங்களாக இருந்தன. பெகினுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு ஒன்றே பெரும் சிரத்தையாக இருந்தது.

கார்ட்டர் இரண்டு தலைவர்களையும் மாறி மாறி சந்தித்து, பேச்சுவார்த்தையின் பொதுவான கொள்கைகளையும், கடினமான நுணுக்கங்களையும் பற்றி விலாவாரியாக விவாதித்தார். இருவரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று, பரந்துபட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தார். பேச்சுவார்த்தையின் இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பெகினும், சதாத்தும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.

இரு தலைவர்களோடும் தனிப்பட்ட முறையில் உறவாடுவதுதான் கார்ட்டரின் சக்திமிக்க அணுகுமுறையாக இருந்தது. ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தடைகளையும், அவர்கள் இதுவரை எடுத்திருக்கும் முயற்சிகளையும், நல்லெண்ண நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். உடன்பாடு ஏற்படாமல் போனால் எழும் விபரீதமான விளைவுகள் பற்றியும் இருவருக்கும் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.

சமரசப்பேச்சின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை கார்ட்டரும் அவரது குழுவினரும் 23 முறை மாற்றி எழுதினர். ஆனால் பேச்சுவார்த்தையின் பதின்மூன்றாவது நாள் ஜெருசலேம் குறித்த மொழி ஏற்புடையதாக இல்லையென்று இஸ்ரேல் எதிர்ப்புத் தெரிவித்தது. சமரசப் பேச்சு ஸ்தம்பித்து நின்றது.

கார்ட்டர் தொடர்கிறார்: ""எனது உதவியாளர் சூசன் நாங்கள் மூன்று தலைவர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றைக் கொண்டு வந்தார். அவற்றில் பிரதமர் பெகின் எனது கையெழுத்தைப் பெற்றுத் தரும்படிக் கேட்டுக்கொண்டதாகச் சொன்னார். பேச்சுவார்த்தைத் தரைத்தட்டி நின்ற நிலையில், பெகினின் பேரக்குழந்தைகள் பெயர்களைக் கேட்டு வருகிறேன், அந்தப் பெயர்களோடு கையெழுத்திடுங்கள் என்று சூசன் எனக்கு அறிவுரைத்தார். நானும் ஆமோதித்தேன். பின்னர் அந்தப் படங்களை எடுத்துக் கொண்டு, பெகின் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றேன். அவர் மிகுந்த சோகத்தோடும், பதற்றத்தோடும் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார்.

புகைப்படங்களை அவரிடம் கொடுத்தேன். அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு படமாகப் பார்த்து, ஒவ்வொரு பேரக் குழந்தையின் பெயரையும் உரக்க உச்சரித்தார். அவரது உதடுகள் துடித்தன; கண்களில் கண்ணீர் ததும்பியது. ஒவ்வொரு பேரக் குழந்தையைப் பற்றியும் என்னிடம் சுருக்கமாக விவரித்தார். அவருக்கு மிகவும் நேசமான பேத்தி பற்றி மிகவும் வாஞ்சையோடுப் பேசினார். எங்களுடைய பேரக் குழந்தைகள் பற்றியும், குழந்தைகளைப் போர்கள் எப்படி பாதிக்கின்றன என்பது குறித்தும் பேசியவுடன், நாங்கள் இருவருமே உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினோம்.''

இந்த தனிமனித அளவிலான, உணர்ச்சிகரமான உறவாடலுக்குப் பிறகு, பெகினும், சதாத்தும் மனமிளகினார்கள். புகழ்பெற்ற கேம்ப் டேவிட் உடன்பாடு உடனே கையெழுத்தாயிற்று.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com