குளிர்ப் பெட்டி தந்த ஜான் கொர்ரி! - மு.கலியபெருமாள்

1844- ஆம் ஆண்டு. ஒரு நாள் காலை டிரினிடி எபிஸ்கோபால் (TRINITTY EPISCOPAL) மாதா கோயில் முன் ஒரே கொண்டாட்டம்.
குளிர்ப் பெட்டி தந்த ஜான் கொர்ரி! - மு.கலியபெருமாள்

1844- ஆம் ஆண்டு. ஒரு நாள் காலை டிரினிடி எபிஸ்கோபால் (TRINITTY EPISCOPAL) மாதா கோயில் முன் ஒரே கொண்டாட்டம். அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் அம்மாதா கோயிலை அழகு படுத்தியது. விழாக்கோலம் கொண்டிருந்த அந்தக் கோயில், மக்கள் அன்று கொண்டாடப்போகும் பனிக்கட்டி விழாவை எல்லாருக்கும் நினைவூட்டியது. ஒரு நிதி திரட்டும் பொருட்டுக் கொண்டாடப்பட்டது அந்த விழா. பனிக்கட்டி விழா என்றால் நாம் நினைப்பதுபோல் " ஐஸ் க்ரீம்' விழாதான். என்றாலும் அன்று அவர்கள் கொண்டாடியது அத்தகையதன்று. வெளிநாட்டிலிருந்து பனிக்கட்டியை வரவழைத்து அதனை மற்ற நாட்களைப் போலல்லாமல் அன்றைய தினம் நிறையக் கிடைக்கும்படி செய்வதே அவ்விழாவின் நோக்கமாகும். எனவே விழா நாளன்று வெளிநாட்டிலிருந்து பனிக்கட்டியைச் சுமந்து கொண்டு வரும் கப்பலை மக்கள் மிக்க ஆவலோடு எதிர்நோக்கி நின்றனர். காலையும் போய் மதியம் வரும் நேரமாகியும் வர வேண்டிய அக்கப்பல் வரவில்லை. இதனால் அந்த விழாவை முன்னின்று நடத்திய பெண்கள் பெரிதும் வருத்தமுற்றனர். இந்த நேரத்தில்தான் ஒருவர் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தோடு வந்தார். அதில் வைரமென ஒளியிட்ட பனிக்கட்டியைக் கண்ட அந்த மக்களனைவரும் வியப்படைந்தனர். அந்தப் பனிக்கட்டியின் வெண்ணொளி பரவியதும் அவர்களின் துக்கம், துயரம் எல்லாம் பறந்து சென்றன. மகிழ்ச்சி பொங்க அவ்விழாவைக் கொண்டாடினர் அம் மக்கள்.
கண்ணாடிப் பாத்திரத்தோடு வந்தவர் யார் தெரியுமா? அவர்தான் குளிர்முறைப் பாதுகாப்புக்கு வித்திட்ட குரிசில் ஜான் கொர்ரி (JOHN GORRIE) என்பவர். கொர்ரியின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய வரலாறு சரியாகத் தெரியவில்லை எனினும், இவர் மேற்கிந்தியத் தீவுகளுள் ஒன்றாகிய நெவிஸ் என்றதீவில் 1802- இல் பிறந்தவர் என்றும், 1803 - இல் இவருடைய பெற்றோர் இவருடன் சார்லெஸ்டனுக்கு வந்து சேர்ந்தனர் என்றும் தெரிகிறது. கொர்ரி சிறுவயதில் சார்லெஸ்டனிலுள்ள பள்ளியில் கல்வி பயின்றார். நியூயார்க்கில் பேர் பீல்டில்(FAIR FIELD) மருத்துவக் கல்வியை அளித்து வந்த மேற்கத்தியக் கல்லூரியில் (WESTERN COLLEGE) பயின்று 1829 - இல் அத்துறையில் பட்டமும் பெற்றார். அப்பெவெல்லி (ABBEVELLI) என்ற இடத்தில் நான்கு ஆண்டுகள் தங்கி மருத்துவத்துறையில் மேலும் பயிற்சி பெற்றார். அதன் பின் 1833 - ஆம் ஆண்டில் அபலாச்சிகோலா என்ற ஊருக்கு வந்தார், இந்த ஊர் மேற்கு வளைகுடா கடற்கரையில் உள்ள பிளோரிடாவின் (FLORIDA) ஒரு பகுதியாகும். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் மீன் பிடித்தே பிழைத்தனர். மஞ்சள் காய்ச்சலும் மலேரியாவும் இங்குள்ள மக்களின் வாழ்வைப் பாதித்தன. எனினும், இயற்கைக் காட்சிகள் நிறைந்த இந்த ஊர் எழிலோடு விளங்கியது. அப்பெவெல்லியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும்போதே, மலேரியாவைப் பற்றி ஆராய்வதில் கொர்ரி மிகுந்த கவனம் செலுத்தினார். இதில் இவருக்கு மிக்க ஆர்வமும் இருந்தது. எனவே 1833- இல் அபலோச்சிகோலாவிலுள்ள சுரங்க மருத்துமனையின் குழுவிற்குத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டபோது அதனை ஏற்றுத் தமது பணியை மேலும் வளர்த்தார். அங்கு வந்த பிறகு அவருடைய ஆராய்ச்சி பன்மடங்கு வளம் பெற்றது. 
மருத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் பொது வாழ்வில் இவர் பல சிறந்த பொறுப்புகளை ஏற்றுவந்தார். அபலாச்சிகோலா என்ற இடத்தில் இருந்தபோது ஓரிரு ஆண்டுகள் இவர் அஞ்சல் நிலையத் தலைவராகவும் நகரக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நகரத்தின் கருவூலக் காப்பாளர் பொறுப்பினை ஏற்று அந்தப் பகுதியினை நடத்தும் சிறப்பையும் பெற்றார். பின்பு இரண்டு பொருளகங்களுக்கு நெறியாளராகவும் இருந்து பணியாற்றினார். இத்தகைய பெரும் பொறுப்புகளில் பணியாற்றிய இவருக்குக் குளிர்முறையைப் பற்றிச் சிந்திக்க எப்படித்தான் காலம் கிடைத்ததோ? அவருக்குக் கிடைத்த சிறிய ஓய்வு நேரங்களில் எல்லாம் செயற்கை முறையில் எப்படிக் குளிர்ச்சியை உண்டாக்குவது என்று சிந்தித்து வந்தார். 
காய்ச்சலைப் பற்றி ஆராய்ந்து வந்த கொர்ரி, அதனை நீக்கும் முறையாக ஒன்றினைக் கண்டார். நோயாளிகளின் உடல் வெப்பநிலையைக் குறைத்தால் நோய் குணமாகிவிடும் என்று கொர்ரி நம்பினார். எனவே நோயாளிகள் இருந்த அறையைக் குளிர வைத்தால் அவர்களின் உடல் வெப்பநிலை குறையும் என்றும், அதன் வழி நோய் குணப்படும் என்றும் எண்ணினார். அவருடைய வீட்டில் நோயாளிகள் இருந்த அறையில் பனிக்கட்டியை வைத்து அதன்மீது காற்றோட்டத்தைச் செலுத்தினார். அறையும் குளிர்ந்தது. நோயாளிகளின உடல் வெப்பநிலையும் குறைந்தது. ஆனால் நோய் முற்றிலும் குணமாகவில்லை. எனவே இந்த முறை கொர்ரிக்கு முற்றிலும் மனநிறைவு அளிக்கவில்லை. காரணம், இம்முறையில் பயன்படும் பனிக்கட்டிகள் தூர நாடுகளிலிருநது கப்பலில் வந்தன. எனவே அவற்றின் விலையும் மிகுதியாக இருந்தது. ஒரு இராத்தல் பனிக்கட்டியின் விலை ஒரு டாலருக்கும் மேலாகும். 
இவ்வாறு மிகுதியான விலை கொடுத்துப் பனிக்கட்டி பெறுவதைத் தவிர்க்க வேறு எந்திர முறைகளினாலோ அல்லது இயற்பியல் முறைகளினாலோ குளிர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்று எண்ணினார்.
1755 - இல் இங்கிலாந்தில் வில்லியம் கல்லன் என்பவர் " நீர்ப்பொருள்களை ஆவியாக்கியும், வேறு சில இயற்பியல் முறைகளினாலும் குளிர்ச்சியை உண்டாக்குதல்' பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார். 1824 -இல் ஜான் வாலன்ஸ் என்பவர் குளிர்ச்சியை உற்பத்தி செய்யும் ஒரு பொறி(முறை) யைக் கண்டார். இந்த முறை நீர்ப்பொருளை ஆவியாக்கிக் குளிர்விக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டது. என்றாலும் நடைமுறையில் இது செயல்படவில்லை. 

டாக்டர் ஜான் கொர்ரி தன்னுடைய ஆய்வுகளை மிகவும் மறைவாகவே நடத்தி வந்தார். காரணம், அக்காலச் சூழ்நிலை அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாயிருக்கவில்லை. அறிவியல் பற்றி ஆராய்வது ஆண்டவனுக்குப் பொறுக்காத ஒரு செயலாகக் கருதப்பட்டது. அப்படிச் செய்வது பாவம், அப்படிச் செய்பவன் கடவுளின் பகைவன் என்றும் கருதப்பட்ட காலம் அது. கடவுள்தான் குளிர்ச்சியைக் கொடுக்கும் பனிக்கட்டியை உண்டாக்கினார். மனிதன் அம்முயற்சியில் ஈடுபடுவது ஆகாது என்று மக்கள் தடுப்பர். பல கற்றும் கல்லாராக ஆகக் கூடாதல்லவா? அதற்காகவே கொர்ரி தனது ஆராய்ச்சியைத் திரை மறைவிலேயே நடத்தி வந்தார். 
கொர்ரி கண்டுபிடித்த எந்திரம் கீழ்க்கண்ட தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. காற்றை அமுக்கி, பின் அக்காற்றை விரியும்படி செய்தால் அமுங்கி விரியும் காற்று, ஆற்றலை அல்லது வெப்பத்தை இழுத்துக் கொள்கிறது. கொர்ரி தனது எந்திரத்தை இயக்குவதற்கு மரக்கட்டையால் எரியும் ஒரு நீராவி எந்திரத்தைப் பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய அந்த எந்திரத்தை வாஷிங்டனிலுள்ள ஸ்மித்சோனியன் ஆராய்ச்சிக் கழகத்தில் வைத்திருக்கின்றனர். அங்கு செல்வோர் இன்றும் அதனைக் காணலாம். 
கொர்ரி கண்டுபிடித்த முதல் எந்திரம் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், இதனைக் கொண்டு அவருடைய நோயாளிகள் இருந்த இரண்டு அறைகளையும் குளிரும்படி செய்தார். இதுவே எந்திரத்தின் மூலமாகச் செயற்கையில் அறைகளைக் குளிரும்படி செய்த முதல் முறையாகும். 
கொர்ரி கண்ட இந்த எந்திரம் பல ஆண்டுகள் வரை வெற்றிகரமாக இயங்கியது. ஆனால் 1844 - ஆம் ஆண்டில் கொர்ரியின் நோயாளிகளில் நால்வர் மிகவும் கடுமையான காய்ச்சலினால் இறக்கும் தறுவாயில் இருந்தனர். அவர்களுடைய காய்ச்சலைக் குறைப்பதற்குக் கொர்ரி தனது எந்திரத்தை அதனுடைய முழுவேகத்தில் செயல்படுத்தினார். ஒருநாள் காலை திடீரென்று அந்த எந்திரம் நின்றுவிட்டது. காரணத்தை ஆராய்ந்த கொர்ரி, எந்திரம் பனிக்கட்டியால் சூழப்பட்டுவிட்டது என்று கண்டார். எனவே, பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு புதுவகையான எந்திரத்தை அமைத்தார். அந்த எந்திரம் 10அங்குல நீளமும், 8 அங்குல அகலமும் உள்ள பனிக்கட்டிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. 
இந்த நேரத்தில்தான் முன்பு குறித்த பனிக்கட்டி விழா வந்தது. வறண்ட உள்ளத்தோடும் வெறுங்கையோடும் செல்ல இருந்த மக்களுக்கு வெண்ணொளி பரப்பும் பனிக்கட்டியைக் கொடுத்தார் கொர்ரி. அதனால் அவருக்குக் கிடைத்த பரிசுகள் பல. நாளிதழ் ஒன்று கொர்ரியின் இச்செயலைப் பற்றிச் சூட்டிய புகழ்மாலை "அபலாச்சிகோலாவிலுள்ள ஒரு பைத்தியக்காரன் கடவுளைப் போல் அவ்வளவு சிறந்த பனிக்கட்டியைத் தயாரிக்கிறானாம்' என்பது. இதுபோன்றவை பல!
பல எந்திரங்களைச் செய்வதற்கும், பின் அவற்றைச் சந்தைகளில் விற்பதற்கும் கொர்ரிக்குப் போதிய மூலதனமின்றிப் போய்விட்டது. அவர்தம் நிலை நாளுக்குநாள் மோசமாகியதே அதற்குக் காரணம். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை வளமாக்கும் இந்த எந்திரத்தைக் கண்டு உலகுக்கு அளித்த கொர்ரி தனது இறுதிக் காலத்தில் எந்திரத்தின் காரணமாகவே உயிரையும் நீத்தார். 1885 - ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16-ஆம் நாள் அன்னாரது பூத உடம்பு இம் மண்ணுலகை விட்டு மறைந்தது. 
நன்றி மறவாத உலகம் அவருக்கு 1914 - இல் வாஷிங்டனிலுள்ள நினைவு மண்டபத்தில் ஒரு சிலை எழுப்பியுள்ளது. 1957 -இல் பிளோரிடா மாநிலம் அவருடைய நினைவுச் சின்னமாக அபலாச்சிகோலாவில் ஒரு கட்டடத்தை அமைத்தது. அதில் அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கொர்ரி இவ்வுலகை விட்டு மறைந்தாலும் குளிர் அறைப் பெட்டிகளைப் பார்க்கும்போதும், அந்தப் பொறி(முறை)யோடு இயங்கும் புகை வண்டிகளையும் கட்டடங்களையும் வீடுகளையும் காணும்போதும், ஐஸ் கிரீம் என்ற சொல் நமது காதுகளில் விழும்போதும், அதனைச் சாப்பிடும்போதும் அவருடைய நினைவு நமது உடலைச் சிலிர்க்க வைக்காமலிராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com