சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 84 - தா.நெடுஞ்செழியன்

மருத்துவத்துறையைப் பொருத்தவரை செவிலியர் பணி என்பது மிக மிக முக்கியமான பணியாகும். வளர்ந்த நாடுகளில் ஒரு மருத்துவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ,
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 84 - தா.நெடுஞ்செழியன்

மருத்துவத்துறையைப் பொருத்தவரை செவிலியர் பணி என்பது மிக மிக முக்கியமான பணியாகும். வளர்ந்த நாடுகளில் ஒரு மருத்துவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு இணையாக செவிலியருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 
நோயாளிகள் நலம் பெறுவதற்கான சிகிச்சை சார்ந்த அனைத்துப் பணிகளையும் செய்வதோடு, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மிகவும் பணிவாகவும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தக் கூடிய வகையிலும் பேசி அவர்கள் முற்றிலும் நலமாகி மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் வரை நேரம் காலம் பார்க்காமல் நோயாளியைக் குணப்படுத்துவதை மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்கள் செவிலியர்கள்.
தற்போது இந்தத் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. 
பொது மருத்துவம் மட்டுமல்லாமல், உயிருக்கு அபாயகரமான நோய்களின் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படும்போது செவிலியர்களின் தேவை மிகுந்த முக்கியத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது.
மனமும் அறிவும் இணைந்து செயலாற்றுகிற பணிகளில் செவிலியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். மனித உயிர்களின் அருமையை உணர்ந்து, நோயாளிகளிடம் அன்பு, பொறுமை, மரியாதையுடன் நடந்து, நேரம், காலம் பார்க்காமல், தேவையான மருத்துவப் பணிகளைச் செய்வதே செவிலியர் பணியின் சிறப்பாகும். 
தினம்தோறும் மருத்துவத்துறை சார்ந்த எண்ணற்ற தகவல்களைப் புதிது புதிதாக தங்களுடைய பணியினூடே தெரிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். 
இவர்களது பணிகளின் எல்லைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் குறுக்கி விட முடியாது. தீவிர சிகிச்சைகளுக்கான (ACUTE TREATMENT) பணிகளைச் செய்வது முதல், பள்ளிகளுக்கும், பொது இடங்களுக்கும் சென்று இளம் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் அளிப்பது வரை பல்வேறு பணிகளைச் செய்பவர்கள் செவிலியர்களே. 
நோயாளிகளின் மனநிலையை அறிந்து அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் உறவினர்களிடம் நோயின் உண்மையான நிலையை விளக்கிக் கூறி, நோயாளிகளை எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்று செவிலியர்கள் வழிகாட்டுகிறார்கள்.
ஏழை, பணக் காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் நோயாளின் உடலைக் குணப்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே இவர்களின் பணியின் சிறப்பு. 
செவிலியர் பணியின்போது மருத்துவமனைகளில் நிகழும் எவ்வளவோ துக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் ஒன்றுபோல் கருதி, அடுத்தடுத்து வரக் கூடிய நோயாளிகளுக்குச் ஓய்வில்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சையளிப்பதே செவிலியர்களின் நல்ல இயல்பாகஇருக்கிறது.
செவிலியர்களின் சொந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நோயாளிகளின் உடல் நிலையை மேம்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். 
ஒரு நாட்டின் மருத்துவரீதியான வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் செவிலியர்கள் ஆற்றும் பணி, அளவிடப்பட முடியாததாகும். அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள செவிலியர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த செவிலியர்களின் பணி செய்யும் முறையை புதிதாகப் பணிக்குச் சேர்ந்துள்ள செவிலியர்கள் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். 
கிராமங்களில், நகர்ப்புறத்தின் சேரிப்பகுதிகளில் வாழும் ஏழை மக்களிடம் சென்று, தொற்றுநோய்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை விளக்குகிறார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன என்ன மருத்துவங்கள் செய்யப்பட வேண்டும், என்னென்ன தடுப்பு ஊசிகள் போட வேண்டும், சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் எளிய மக்களுக்குச் சொல்பவர்களும், அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பணிகளைச் செய்பவர்களும் செவிலியர்களே.
தற்போது உலகிலேயே மிக அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ள பணி செவிலியர் பணியே ஆகும். கடந்த ஆண்டில் 12 லட்சத்து 19 ஆயிரம் செவிலியர் பணி காலியிடங்களை நிரப்புவதற்காக அமெரிக்காவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறையிலோ 8 லட்சத்து 97 ஆயிரம் காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டன. 
உலக அளவில் வளர்ந்த நாடுகளில் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஐ.நா.சபையின் 2017 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 962 மில்லியன் மக்கள் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இது 2050 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் ஆக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
இந்தியாவில் 60 வயதுக்கும் மேலாக 104 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். "ஹெல்ப் ஏஜ்' இந்தியா என்று நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி தற்போதுள்ள 104 மில்லியன் முதியவர்களின் எண்ணிக்கை 2026 - இல் 173 மில்லியனாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, முதியவர்களுக்கான மருத்துவப் பணிகளுக்கான தேவைகளும் அதிகரிக்கவே செய்யும். நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களிடம் கனிவுடன் பேசி, பொறுமையாக அவர்களைக் கையாண்டு மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படாதவாறு மருத்துவச் சிகிச்சைகளுக்குத் துணை நிற்கும் செவிலியர்களின் தேவையும் உலக அளவில் அதிகமாகும் என்பதே உண்மை. 
தற்போது இந்தியாவில் இரண்டு மில்லியன் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 14 நோயாளிகளுக்கு 1.475 நர்சுகள் மட்டுமே உள்ளார்கள். கிராமப்புறங்களில் இது மிகவும் குறைவு. 
இந்தத் துறையில் நல்ல அனுபவம் உள்ள செவிலியர்களுக்கு மாதம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவருடன் இணைந்து அறுவைச் சிகிச்சை செய்யும்போதும், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும், அபாயகரமான நோய்களுக்குச் சிகிச்சை செய்யும்போதும் செவிலியர்களின் பணி, மிகவும் அர்ப்பணிப்புத்தன்மை உடையதாக இருக்கிறது. எவ்வளவு நோயாளிகளை மிக நன்கு கவனித்து செவிலியர்கள் நலம் பெறச் செய்கிறார்களோ, அதை வைத்துத்தான் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவது அதிகரிக்கும். எனவே திறமையும் அர்ப்பணிப்பும் உள்ள செவிலியர்களுக்கு அதிகச் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
நிறையத் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக, வரக் கூடிய புதிய புதிய கருவிகளை, புதிய சிகிச்சைமுறைகளை செவிலியர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக இதயநோய்க்கு நிறைய புதிய தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கருவிகளில் அடுத்தடுத்த மாறுதல்கள் நிகழ்கின்றன. செவிலியர்கள் தங்களுடைய பணி அனுபவம் காரணமாக இவற்றை நன்கு கையாளும் திறமை பெற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். 
மருத்துவர் இல்லாத நேரங்களில் ஒரு நோயாளியின் உடல்நிலை மிக அபாயகரமானநிலையை எட்டும்போது செவிலியர்கள்தாம் தேவையான முதல் உதவிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகளைச் செய்து மருத்துவருக்கு இணையாக நோயாளிகளைக் காப்பாற்றுகிறார்கள். நிறைய மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகளின் உடல்நிலை எதிர்பாராத விதமாக அபாயநிலைக்குச் செல்லும்போது, செவிலியர்களே அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. எனவே செவிலியர்களுக்கு நிறையப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
செவிலியர் பணிக்கு நம்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிறையப் பெற்றோர்களுக்கு, மாணவர்களுக்கு செவிலியர் படிப்பு பற்றி தேவையான தகவல்கள் தெரிந்திருப்பதில்லை. மேலும் அதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. இதன் காரணமாக, தரமற்ற -அங்கீகாரம் பெறாத - நர்சிங் பயிற்சி நிறுவனங்களில் பல மாணவர்கள் சேர்ந்து படித்துவிட்டு, படிப்பை முடித்த பிறகு, அவர்களுடைய படிப்பிற்கான அங்கீகாரத்தை தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில்,இந்திய நர்சிங் கவுன்சிலில் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அவர்கள் செவிலியர் பணியைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்
சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com