முயற்சிகள் என்றும் வெல்லும்!

'ஒரு மனிதனை அவனது பலவீனம் அல்லது செயலால் தீர்மானிப்பது என்பது கடலின் சக்தியை ஓர் அலையின் மூலமாகத் தீர்மானிப்பதைப் போன்றது. 
முயற்சிகள் என்றும் வெல்லும்!

'ஒரு மனிதனை அவனது பலவீனம் அல்லது செயலால் தீர்மானிப்பது என்பது கடலின் சக்தியை ஓர் அலையின் மூலமாகத் தீர்மானிப்பதைப் போன்றது.
- எல்விஸ் பிரெஸ்லி
உலகெங்கும் உள்ள எல்லா நாட்டு மக்களையும், இந்தியா உட்பட, அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது "கரோனா வைரஸ்'. தமிழ்நாட்டிலோ வேலை தேடிக் காத்திருக்கும் எண்ணற்ற படித்த பட்டாதாரி இளைஞர்ளுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேடுகளும், அது தொடர்பான விசாரணைகளும், கைதுகளும் கரோனா வைரஸ் பீதிகளைவிட பெரியதோர் அச்சத்தையும், உழைப்பின், முயற்சியின் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்னையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 99 தேர்வர்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மட்டுமல்லாமல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட சிலரை சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கைது செய்துள்ளனர். 
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் பல குற்றச்சாட்டுகள் இந்தத் தேர்வாணையத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளன. துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட உயர்ந்த பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஏற்கெனவே புகார்கள் உள்ளன.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை, இந்தியாவையே உலுக்கிய "வியாபம்' முறைகேட்டுடன் பலரும் இப்போது ஒப்பிடுகிறார்கள்."வியாபம்'என்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கு அலுவலர்களைத் தேர்வு செய்கிற அமைப்பு. அங்கு 2008 முதல் 2018 வரை, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றதிலும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழலும் நடைபெற்றது உண்மை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. 
வியாபம் நடத்திய போட்டித் தேர்வுகளின் மூலமாக முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளுக்கு ஏராளமானோர் நியமிக்கப்பட்டனர். ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையும் வழக்கும் சி.பி.ஐ., வசம் போன பிறகுதான், குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
வியாபம் முறைகேடும் தொடக்கத்தில் ஒரு சிறிய அளவிலான முறைகேடு போலத்தான் பேசப்பட்டது. பிறகு, மிகப்பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தபோது, தேசமே அதிர்ந்துபோனது. தற்போது, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டின் வீச்சும், ஆழமும், அதிகாரப் பாய்ச்சலும் எந்த அளவிற்கு சாமானியப் போட்டித் தேர்வர்களைப் பாதித்திருக்கிறது என்பதை உற்றுநோக்கி, அதைச் சரி செய்ய வேண்டிய கடமையுணர்ச்சியோடு செயல்படவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 
இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்தத் தேர்வில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புஉள்ளது. இதன் மூலம் நேர்மையாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். 
வறுமையின் கடைநிலையில் இருந்துகொண்டு, நடைபாதை மற்றும் சாலையோரங்களில் வசித்துக்கொண்டு, வீட்டில் மின்வசதிகூட இல்லாமல்... தெருவிளக்கு வெளிச்சங்களில் படித்து சாதித்தவர்களின் எண்ணற்ற கதைகளை, வரலாறுகளாக நாம் இன்றும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வந்த குரூப் - ஐ இறுதித் தேர்ச்சி பட்டியலில்கூட முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களுள் உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்து வெற்றி பெற்றவர்களை நாம் சென்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஊழல் உழைப்பவர்களை நிரந்தரமாக ஒழித்துவிடமுடியாது. ஊழலை... உழைப்பு விரட்டியடித்ததே வரலாறு. 
எந்தவொரு நிர்வாக அமைப்பிலும், உயிரியியல் இயக்கத்திலும் முற்றிலும் பாழ்பட்டுப்போன கூறுகள், உறுப்புகள், பாகங்கள் தொடர்ந்து செயல்பட முடியாது. உயிருள்ள ஓர் உடலில் ஏதாவது ஒரு சில பகுதிகளில் நோய்த்தொற்றோ, நோய்களோ இருக்கலாம். அவற்றைச் சரி செய்யலாம்; அவை சரி செய்யப்படும். ஓர் அமைப்பில், ஓர் உயிரில் எல்லாமே கெட்டுப்போய் விட்டால், அங்கு உயிர் இருக்காது. உயிர் இல்லாது போனால், உயிர் தாங்கிய அந்த உடல் இயங்காது, இருக்காது. அதேபோல ஒரு தேசத்தில், ஓர் அமைப்பில் எல்லாமே முறைகேடான செயலாகவும், ஊழலாகவும் மாறிவிட்டால் அந்த அமைப்பும், தேசமும் இருக்காது. தொன்மையான நம் தேசமும், அது சார்ந்த அமைப்புகளும், நிறுவனங்களும் அவைகளுள் வந்து குடியேறும் நோய்களையும், ஊழல்களையும் விரட்டியடித்து தங்களை உயிர்பித்துக்கொள்கின்ற ஆற்றல் படைத்தவை. எனவே, மாணவர்கள் அச்சப்படவோ, சந்தேகக்கண்ணோடு துயரப்படவோ தேவையில்லை. போட்டித்தேர்வுகளுக்கான அவர்களது முயற்சியை மேலும் சீராக நம்பிக்கையோடு செய்யலாம்.
"முயற்சிகள் என்றென்றும் வெல்லும். முறைகேடுகள்... நின்று மெதுவாக கொல்லும்', என்கிற இந்தப் பிரபஞ்ச பேருண்மையை நெஞ்சில் நிறுத்தி, அவநம்பிக்கைகளை நீக்கி, மனம் தளராது உழைத்து வெற்றி பெறுவோம்.
- கே. பி. மாரிக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com