வளர்ச்சியின் முதல் தடைக்கல்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

இந்தியா, பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடம் அடிமையானதற்கு காரணம் என்ன? நம் நாட்டில் உள்ள சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட பிரிவினைகள்தாம் காரணம் என்பது வெள்ளிடை மலை.
வளர்ச்சியின் முதல் தடைக்கல்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 55
இந்தியா, பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடம் அடிமையானதற்கு காரணம் என்ன? 
நம் நாட்டில் உள்ள சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாட்டால் ஏற்பட்ட பிரிவினைகள்தாம் காரணம் என்பது வெள்ளிடை மலை. இந்த வேறுபாடுகளால் ஏற்பட்ட பிரிவினைகளை, ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பலர் பாடுபட்டாலும் இன்னமும் நமது நாட்டில் இந்த பிரிவினைகள், வேற்றுமைகள் தொடர்கின்றன. சமுதாயத்தில் மேடு பள்ளங்கள் தொடர்கின்றன. 2020 -இல் கூட இந்த வேற்றுமைகளும் அதனால் ஏற்படும் பிரிவினைகளும் மக்களை சமூக மற்றும் பொருளாதார மேடு பள்ளத்தில் பரிதவிக்க வைத்திருக்கிறது.
அமெரிக்காவில், ஜெர்மனியில், தென்ஆப்பிரிக்காவில், இஸ்லாமிய நாடுகளில் இங்குள்ளதைப் போன்ற வேற்றுமைகள் இருந்தன. வேற்றுமைகளை ஒதுக்கி, தங்களது அறிவால் ஒற்றுமையோடு உழைத்தவர்கள் உயர்ந்தார்கள் என்பது வரலாறு. 
"யூத இனம் ஜெர்மனிய மக்களின் எதிரி' என்று இன துவேஷத்தைக் கையில் எடுத்தார் மிகப்பெரிய வல்லமை பெற்ற பேச்சாளர் என்று பெயரெடுத்த இராணுவ வீரர் ஹிட்லர். "யூதர்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே நாங்கள் எங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்' என்றார் ஹிட்லர். இதேபோல், ஜூலை 1941 - இல் ஒரு கூட்டத்தில், "நமது மக்களைச் சமாதானப்படுத்தும் விரைவான எளிதான வழி, யூதர்கள் என்று தோன்றும் அனைவரையும் சுட்டுக்கொள்வதுதான்'' என்று ஹிட்லர் கூறினார். வெகுஜனக் கொலைகளுக்கு அங்கீகாரம் அளித்ததான ஹிட்லரின் நேரடி உத்தரவு எதுவும் வெளிவரவில்லை என்றாலும், அவரது பொது உரைகள், அவரது தளபதிகளுக்கான உத்தரவுகள் மற்றும் நாஜி அதிகாரிகளின் நாட்குறிப்புகள் ஐரோப்பிய யூதர்களை அழிப்பதற்கான உத்தரவுகள் இடப்பட்டதை நிரூபிக்கின்றன. போரின் போது, 1939 - ஆம் ஆண்டின் தனது தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதாக ஹிட்லர் மீண்டும் மீண்டும் கூறினார். அதாவது, ஓர் உலகப் போர் யூத இனத்தை நிர்மூலமாக்கும் என்று நம்பினார். பேச்சால் மக்களை மயக்கிய ஹிட்லர், வெறுப்பால் இன துவேஷத்தால் இரண்டாம் உலகப்போரை உருவாக்கினார். ஜெர்மனி அழிந்தது, பெர்லின் சுவர் எழுந்தது. ஹிட்லருக்கு பின் யூத இன வெறுப்பை, வேற்றுமையை ஒதுக்கி, அறிவைக் கையில் எடுத்த ஜெர்மனி இன்றைக்கு அனைத்து தொழில் துறைகளிலும் வல்லமை பெற்ற வளர்ந்த நாடாக, அங்கு வாழும் அனைத்து மக்களும் அமைதியாக, வளமாக வாழும் நாடாக மாறியிருக்கிறது. 
அமெரிக்காவில் இனப் பிரித்தல் என்பது ஒரு பொதுவான வார்த்தையாக, வசதிகள், சேவைகள் மற்றும் வீடமைப்பு, மருத்துவப் பராமரிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து போன்ற வாய்ப்புகளை இன அடிப்படையில் பிரிப்பதைக் குறிக்கிறது. இந்த சொல் முக்கியமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளையர்களிடமிருந்து சட்டரீதியாக அல்லது சமூக ரீதியாகப் பிரிப்பதைக் குறிக்கிறது. ஆனால் பிற இன சிறுபான்மையினரைப் பெரும்பான்மை பிரதான சமூகங்களிலிருந்து பிரிப்பது தொடர்பாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 1950 - களில் அமெரிக்க ஆயுதப் படைகளில், கறுப்பு இராணுவப் படைகள் பொதுவாக வெள்ளை இராணுவப் படைகளிலிருந்து பிரிக்கப்பட்டன. இருப்பினும் அவை வெள்ளை அதிகாரிகளால் வழிநடத்தப்பட்டன. 

1938 - இல் ஓஹியோவின் லான்காஸ்டரில் உள்ள ஓர் உணவக சாளரத்தில் "நாங்கள் வெள்ளை வர்த்தகத்திற்கு மட்டுமே' என்று அடையாளப்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சட்டப்பூர்வமாக ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடக்கலாம்; பேசலாம்; குடிக்கலாம்; ஓய்வெடுக்கலாம் அல்லது சாப்பிடலாம் என்பதைக் குறிக்க அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன. கடன்களுக்கான விதிகள் "கறுப்பின மக்கள் கடன் பெற முடியாது' என்று கூறவில்லை; மாறாக, "இந்த தாழ்ந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்' கடன்களைப் பெற முடியாது என்று கருப்பின மக்கள் வாழ்ந்த இடங்களை அடையாளப்படுத்தி அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கினார்கள் வெள்ளை அமெரிக்கர்கள். இப்போது அமெரிக்காவில், உதாரணமாக, 2000 - ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் 1980 முதல் மேற்கு மற்றும் தெற்கில் குடியிருப்பு பிரித்தல் சராசரியாகக் குறைந்துவிட்டது என்று கண்டறிந்தது. ஆனால் வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்க நாடுகளில் குறைவாகவே உள்ளது.
சிவில் உரிமைகள் சகாப்தத்திற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்கா ஒரு குடியுரிமை பெற்ற பிரிக்கப்பட்ட சமூகமாகவே உள்ளது. இதில் கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் இன்னும் பெரும்பாலும் வேறுபட்ட சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர். இருந்தாலும், பிரிவினைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஒதுக்கி, 200 ஆண்டு கால சுதந்திர ஜனநாயகம் அங்கு அனைவரையும் உள்ளடக்கிய அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது. கல்வியால், புது கண்டுபிடிப்புகளால், தொழிலால், கருத்துச் சுதந்திரத்தால், திறமைக்கு மதிப்பளித்து, ஜனநாயகத்தால் கட்டமைக்கப்பட்டு உலகத்தின் பொருளாதார, இராணுவ வல்லரசாக அமெரிக்கா இன்றைக்குக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 
தென்ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களின் நிறவெறி பூர்வ குடிகளான கருப்பின ஆப்பிரிக்க மக்களை நிறவெறிக் கொள்கைகளால் நிராகரித்து அடிமைகளாக நடத்தியது. அதை எதிர்த்து தோன்றியது தான் நிறவெறி எதிர்ப்பு இயக்கம். நிறவெறி என்பது தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் மேற்கு ஆப்பிரிக்காவில் (இப்போது நமீபியா) 1948 முதல் 1990 -களின் ஆரம்பம் வரை இருந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட இனப் பிரிவினையின் ஓர் அமைப்பாகும். சமூக அடுக்கு முறையின்படி, வெள்ளை குடிமக்கள் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றனர். ஆசியர்கள், வண்ணவாதிகள் மற்றும் கறுப்பின ஆப்ரிக்கர்கள் இறங்கு வரிசையில் பின்பற்றப்பட்டனர். நிறவெறியின் பொருளாதார மரபு மற்றும் சமூக விளைவுகள் இன்றுவரை தொடர்கின்றன.
15 செப்டம்பர் 2004- இல் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமோடு ஜோகனஸ்பர்க் அருகில் உள்ள ராபின் தீவிற்கு ஹெலிகாப்டரில் எங்களை அழைத்துச் சென்றார்கள். இங்கு தான் 26 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நிறவெறி எதிர்ப்பு போராட்ட மாவீரர் நெல்சன் மண்டேலா. 
நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறையையும், அவர் கல் உடைத்த இடத்தையும், கற்களையும் பார்த்தோம். "ஒரு சிறிய அறையைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அங்கு தூக்கம் மற்றும் அனைத்து மனிதத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 6 அடி உயரமுள்ள நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகள் அந்த அறையில் சிறையில் அடைக்கப்பட்டார் - நிறவெறிக்கு எதிராகப் போராடுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்''" என்றார் கலாம். 

"ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திர இயக்கம் பிறந்த ராபின் தீவுக்கு வருகை தருவது ஓர் உற்சாகமான அனுபவமாகும். நிச்சயமாக தென் ஆப்பிரிக்காவை நிறவெறியில் இருந்து விடுவிப்பதற்கான பெரும் பணிக்காக போராடிய மாபெரும் வீரர்களுக்கு எனது மரியாதையும் வணக்கங்களும்'' என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவழித்த பின்னர் பார்வையாளர்களின் புத்தகத்தில் கலாம் எழுதினார். அவரோடு இருந்து மண்டேலாவின் சிறையைப் பார்த்தது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த பாக்கியம். அப்போது, நிறவெறிக்கு எதிராக போராடியவர்களின் நினைவாக ஜனாதிபதி கலாம் "மைட்டி சோல்ஸ்' என்ற கவிதையையும் இயற்றினார்.
1963 - ஆம் ஆண்டில் நிறவெறி எதிர்ப்புப் போராட்ட சதித்திட்டத்திற்காக மண்டேலாவுடன் தண்டனை பெற்று பின்னர் 26 ஆண்டுகளாக மண்டேலாவுடன் சிறிய சிறையில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏ.என்.சி) முன்னணி தலைவர் 75 வயதான அகமத் கத்ராடா, மண்டேலாவை வைத்திருந்த தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கு ஜனாதிபதி கலாமை அழைத்துச் சென்றார். 
மறுநாள், அப்போது 86 வயதாக இருந்த மண்டேலாவை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் கலாம் சந்தித்தார் . அவரோடு அளவளாவிய நேரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நேரமாக அமைந்தது. ""டாக்டர் மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடிகளைப் பற்றி தயவுசெய்து என்னிடம் சொல்ல முடியுமா?'' என்று கலாம் கேட்டார். அதற்கு நெல்சன் மண்டேலா பதிலளித்தார், ""நிச்சயமாக தென் ஆப்பிரிக்காவின் சுதந்திர இயக்கத்தின் சிறந்த முன்னோடிகளில் ஒருவர் எம்.கே. காந்தி ஆவார். இந்தியா எங்களுக்கு எம்.கே. காந்தியைக் கொடுத்தது, இரண்டு பத்தாண்டுகளுக்கு பிறகு நாங்கள் உங்களுக்கு மகாத்மா காந்தியைத் திருப்பித் தந்தோம். மகாத்மா காந்தி அகிம்சையின் அப்போஸ்தலன்'' என்று மண்டேலா கலாமிடம் தெரிவித்தார். 
நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் ஜனாதிபதியானவுடன் எந்த வெள்ளையர்கள் நிறவெறியால் கருப்பின ஆப்பிரிக்க மக்களை அடிமைப்படுத்தினார்களோ அவர்களை மன்னித்தார். வெள்ளையர்களை நாட்டை விட்டே துரத்தவேண்டும் என்ற வாதத்தை புறம்தள்ளினார். அவர்களுக்கு குடியுரிமை வழங்கினார். 
இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க நெல்சன் மண்டேலா மன்னித்தார்; மறந்தார். இன்றைக்கு தென்ஆப்பிரிக்கா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது. 
சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்களுக்குள் இன வேற்றுமை வளர்ந்தது, மதவாதம் முன்னெடுத்தது. இதைப் பயன்படுத்தி இந்த நாடுகளின் பெட்ரோல், டீசல், எண்ணெய் வளத்தை அபகரிக்க ஏதுவாக மேலை நாடுகளால் உருவாக்கப்பட்ட இன வேறுபாடுகளைப் பெரிது படுத்தி தீவிர வாதம் உருவாக்கப்பட்டு, போர்கள் உருவாக்கப்பட்டு, நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டு இன்றைக்கு இந்த நாடுகள் அமைதி இழந்து, தீவிரவாதத்தால், வறுமையால், நோயால், வேலையின்மையால் வாடுகின்றன. அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஹல்ப் கூட்டமைப்பு கவுன்சில் நாடுகள் மதத்தை மசூதியில் வைத்தது, அறிவை இறக்குமதி செய்தது. ஆயிலை ஏற்றுமதி செய்தது. இன்றைக்கு பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறது. 
இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவை? இந்தியா, கி.பி. 11 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை சாதி, இன, மொழி, மத, கலாச்சார வேறுபாடுகளால், அதன் பாதுகாப்பிற்கும், மீட்பிற்கும் இடையே நடந்த போரில் 700 ஆண்டுகளில் அடிமைப்பட்டுப் போனது. பிரிட்டீஷ் மற்றும் போர்ச்சு கீசியர்களால், பிரஞ்சு படைகளால் அடிமைப்படுத்தப்பட்டு, இந்த நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்பட்டு, நான்கு மிகப்பெரிய பஞ்சத்தால் அடிபட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசமானது. 
1947- இல் விடுதலை பெற்று கட்டமைக்கப்பட்ட நாட்டை, 1960 - களில் உருவாக்கப்பட்ட முதலாம் பசுமைப்புரட்சி தான் உணவு உற்பத்தியில் இன்றைக்கு தன்னிறைவு எய்தி உணவுப் பாதுகாப்பை அடையச் செய்திருக்கிறது. 1970 - களில் உருவாக்கப்பட்ட வெண்மைப்புரட்சி தான் சத்தான பாலை கொடுத்து மக்களை, குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு வாட்டத்தில் இருந்து போக்கியது. ஆனால் இந்த சாதனைகள் நம்மை பிழைக்க வைத்து வாழ வைத்தது. ஆனால் உலகம் நம்மை பஞ்சமான நாடு, பாராரியான நாடு, பாம்பாட்டி சித்தர்களை கொண்ட நாடு என்று எள்ளி நகையாடியது.
இந்த நேரத்தில் தான் 1980 இல் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் தலைமையில் இந்தியாவிலேயே சொந்தமாக வடிவமைக்கப்பட்ட SLV3 ராக்கெட்விண்ணிலே சீறிப் பாய்ந்தது; ரோகிணி செயற்கை கோள் விண்ணிலே நிலை நிறுத்தப்பட்டது. விண்ணை அளந்த நாடுகளில் இந்தியா 5-ஆவது நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. உலக நாடுகள் யார் இந்த அப்துல் கலாம் என்று கேட்டார்கள். 
அது மட்டுமா, இன்றைக்கு எதிரி நாடுகள் இந்தியாவின் மேல் ஏவுகணை என்ன, அதில் அணுகுண்டே வைத்து ஏவினாலும் அதை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை உருவாக்கியவர் அப்துல் கலாம். 1980-90-2000 ஆண்டுகளில் அக்னி, பிரிதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், பிரமோஸ் மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற ஏவுகணைகளை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார். 
1998- இல் இந்தியாவை அணுசக்தி வல்லமை கொண்ட நாடாக மாற்றி காண்பித்தார்கள். 
2000- ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் போர் விமானம் கலாம் தலைமையில், கோட்டா ஹரிநாராயணன் வடிவமைப்பில் முதல் முறையாகப் பறந்தது. இந்த திட்டத்தில் தான் நான் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தேன். 
1980 முதல் 2000 ஆம் ஆண்டிற்குள் ஓர் 20 ஆண்டுகளில் 1000 ஆண்டுகளில் நாம் பட்ட அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்கு வேறுபாடுகளை மறந்து, தொலைநோக்குப் பார்வையோடு, அறிவையும், ஆற்றலையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்கி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி ஒற்றுமையுடன் உழைத்தால் நாம் உலக நாடுகள் நம்மைத் திரும்பி பார்க்கும் அளவிற்கு முன்னேறலாம் என்று நிரூபித்தவர் கலாம். இது எப்படி சாத்தியமாயிற்று? தொடர்ந்து பார்ப்போம். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com