கூட்டிக் கழிச்சுப் பாருங்க...கணக்கு தப்பா வரும்!

ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 28/- ரூபாய். ஐந்து பாக்கெட்டுக்கு மொத்தம் ரூபாய் 140 என்று கணக்கிட்டு சரியான சில்லரையாக கடையின் கல்லாவில் இருந்த பணிப்பெண்ணிடம் கொடுத்தேன்.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க...கணக்கு தப்பா வரும்!

எது நமது கவனத்தை திசை திருப்புகிறதோ, 
அதுவே தீமை.
- ஃபிரான்ஸ் காஃப்கா
ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 28/- ரூபாய். ஐந்து பாக்கெட்டுக்கு மொத்தம் ரூபாய் 140 என்று கணக்கிட்டு சரியான சில்லரையாக கடையின் கல்லாவில் இருந்த பணிப்பெண்ணிடம் கொடுத்தேன். என்ன பொருள்? எத்தனை? என்ன விலை என்பதை பார்த்துக்கொண்டே , என்னிடமிருந்து பணத்தையும் வாங்கிக்கொண்டு, கால்குலேட்டரில் 28 x 5 என்று தட்டிக்கொண்டிருந்தாள் அந்தப்பெண். ஏறக்குறைய அனைத்து வியாபார, வணிக நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.
எல்லாவிதமான கூட்டல், கழித்தலுக்கும்... கணக்கு வழக்குகளுக்கும், படித்தவர்கள் எல்லோருமே சார்ந்திருக்கும் ஒரே கருவி இந்த கால்குலேட்டர். ஆனால், இன்றும் பெரிய அளவிற்கு கல்வி அறிவினைப் பெறாத நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகள், நடைச்சுமையாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்கள் இந்தக் கால்குலேட்டரை பயன்படுத்துவதில்லை. 
படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் பலரும் படிக்கின்ற வயதில் கணிதத்தை, அடிப்படை வாய்பாட்டை சரியாக, முறையாகப் படிக்காததால் இன்று பலவீனப்பட்டு நிற்கிறார்கள் - வணிக நிறுவனங்களில் ஊழியர்களாக, பெருந்தொழில் மற்றும் நுகர்வு பொருட்கள் விற்பனையாளர்களாக. இந்த இளைஞர்கள் பலர் ஏதோ வசியத்திற்கு ஆளானவர்களைப் போல 1 + 1 என்று கூட்டுவதற்குக் கூட கருவிகளைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? இது எந்தவகையில் அறிவு அல்லது வளர்ச்சி?
கணிதம் மிகவும் சிக்கலானது என்ற அச்சத்துடன் பலரும் விலகிச் சென்றது நம் சமூகத்தில் சாதாரணமாக நடந்திருக்கிறது. பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கணிதம் பற்றிய ஆர்வம் இன்றி நம்மில் பலரும் ஒதுங்கிவிடுவதற்குக் காரணம், கணிதம் அன்றாட வாழ்க்கைக்கு வெகு தூரத்தில் இருப்பதாக நாம் நினைப்பதால்தான். வாழ்க்கையை ஓட்ட அடிப்படையான கூட்டலும் கழித்தலும் போதுமானது என்பது பலரின் தவறான புரிதலாக இருந்தாலும், அந்த அடிப்படைகளைக் கூடத் தெரிந்துகொள்ளாதவர்களை உருவாக்கியிருக்கிறது நமது நாகரிகக் கல்வி.
கணிதத்தின் அவசியத்தை மாண்பை மிகத் தெளிவாக நமக்கு புரியவைக்கிறது இரா.நடராசன் எழுதிய "கணிதத்தின் கதை'. தமிழக அரசின் பரிசு பெற்ற இது பாடநூல் அல்ல. குறைந்தது நான்காயிரம் ஆண்டு கணித வரலாற்றை மிக சுருக்கமாக சொல்லும் நூல் இது. 
இன்று நாம் அனுபவிக்கும் வசதிகளும் நாகரிக வாழ்க்கையும் நம்மை ஒரு நாளில் வந்தடைந்தவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் போராடி உருவாக்கிய உலகில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழிநுட்ப வளர்ச்சி என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளின் மொத்தம். 
அறிவியல் என்பது கணிதத்தை உள்ளீடாகக் கொண்ட ஆய்வுத் துறை. 
மனித உடலில் ஐம்புலன்களின் ஆற்றல்கள் எல்லைகள் உள்ளவை. தொழில்நுட்பம் அந்த எல்லைகளைத் தாண்ட உதவுகிறது. ஆகவே கணிதத்தின் வழியேதான் அறிவியலும் தொழிநுட்பமும் முன்னேறிச் செல்கின்றன என்பதை ஓர் இலக்கிய படைப்புக்குரிய தேர்ந்த மொழியில் இரா.நடராசன் இப்புத்தகத்தில் சொல்லியுள்ளார். 
பள்ளியில் கணிதப்பாடம் மனனம் மற்றும் வலுப்படுத்துதல் வழி ஆசிரியர்களால் போதிக்கப்படுவது பெரும்பாலான மாணவர்களைச் சலிப்படையச் செய்துவிடுகிறது. கணிதத்தில் வெற்றிபெற நினைவாற்றலும் அறிவுக் கூர்மையும் மட்டும் போதும் என்பது பலரின் கருத்து. ஆனால் "கணிதத் துறைக்கு தேவை அதீத கற்பனை, கொஞ்சம் புத்திசாலித்தனம் ஏராளமான தன்னம்பிக்கை அவ்வளவுதான்" என்பது நூலாசிரியர் இரா. நடராசனின் கருத்து. அந்தக் கருத்தை மெய்ப்பிக்க கணித வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை நூல் முழுவதும் தொகுத்தளித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிசரவணக்குமார் சொல்கிறார்:""கணக்குப் பாடத்தை எளிமையாகவும், மிக வேகப்படுத்தியும் கணக்கிடக்கூடிய திறன் வேத கணிதத்தில் மட்டுமே உண்டு. வேத கணிதம் கற்பதற்கு வயது வரம்பு எதுவுமில்லை. வேத கணிதம் 20 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்ரீபாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமிகள் என்ற அறிஞர் மற்றும் கணிதவியலாளரால் உருவாக்கப்பட்டது. இம்முறையானது 16 முதன்மை வாய்ப்பாடுகளையும் 13 துணை வாய்ப்பாடுகளையும் கொண்டுள்ளது. இக்கணிதப் பயிற்சியால் மனித மூளை ஒரே சீராகவும், எந்த ஒரு விஷயத்தையும் உன்னிப்பாகவும், எளிமையாகவும் மனதில் பதிய வைக்கும் சக்தி உடையது. மனதை ஒருமுகப்படுத்தி எந்தக்காரியத்தயையும் எளிதாகசெய்திட உதவிடும்'' என்று. இவர் சொல்கிற உண்மையை, தகுதியை நாம் எந்தவித சிறப்பு கணித முறைகளுக்குள் ஆட்படுத்திக்கொள்ளாமலே... தொடக்க கல்வியிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை கணிதத்தை, வாய்ப்பாட்டை, கூட்டல், கழித்தலை முறையாகப் பயின்றாலே பெற்றுவிடலாம் என்பது திண்ணம். 
ஆனால், என்ன செய்வது? வாய்ப்பாட்டை வேப்பங்காயை கண்டு முகம் சுளிக்கும் குழந்தையைப் போல ஒதுக்கி வைத்துவிட்ட நம் மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வித்திட்டமும் அதற்கான விலையை பெரிய அளவில் கொடுத்துக்கொண்டிருக்கிறது. நினைவாற்றலே முற்றிலும் வற்றிப்போன ஒரு சந்ததியினரை நாம் உருவாக்கிவிட்டோமோ என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. கால்குலேட்டரை, கணினியை மட்டுமே நம்பி நாம் அடிப்படை கணிதத்தையும், வாய்ப்பாட்டையும் முறையாகப் படிக்காமல் இனியும் விலக்கிவைத்தால்... நாம் என்னதான் தெளிவாகக் கூட்டி கழித்துப் பார்த்தாலும் ஒட்டுமொத்த வாழ்க்கைக் கணக்குமே தப்பாகவே போய்விடும். அடிப்படை கணிதத்தை, வாய்ப்பாட்டை... இருகரம் கூப்பி வரவேற்போம்.
- கே.பி. மாரிக்குமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com