சுட்டுரை தந்த வாய்ப்பு!

மும்பை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஷால் சம்ஜிஸ்கர். இவர், அங்குள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓவியக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.
சுட்டுரை தந்த வாய்ப்பு!

மும்பை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஷால் சம்ஜிஸ்கர். இவர், அங்குள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓவியக் கலைஞராகப் பணியாற்றுகிறார். பிறகு, இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை தனியார் உணவு விநியோக நிறுவனத்தில், உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
விளம்பர நிறுவனத்தில் பெறும் பணிகள் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால், கடந்த 2 ஆண்டுகளாக உணவு விநியோகிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். விளம்பர நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தில் 5 பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றுவது எளிதானது அல்ல என்பதால், பிற பணிகளிலும் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.
விஷால் சம்ஜிஸ்கர் ஒரு வண்ணப்பூச்சுத் தூரிகையால், வெற்று கேன்வாஸில் மென்மையான ஓவியங்களை எளிதில் வரைகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வரும் இவர், அண்மைக்காலம் வரை இதை முழுநேரமாகச் செய்ய முடியவில்லை. 

விஷால், ஓவியப் பணிகள் மூலம் பொருளீட்ட தொடங்கியபோது 12 - ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். பிறகு, வணிகக்கலையில் டிப்ளமா முடித்தார். 
உருவப்படங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் வால்பேப்பர்களை வரைவதற்கு அவருக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஓவியம் வரையும் தொழிலில் இருந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துவது மிகப்பெரிய சவால் என்பதால், அவர் உணவு விநியோகப் பணியிலும் ஈடுபட்டார்.
உணவு விநியோகத்தின் போது, சார்வி கோலேச்சா என்ற வாடிக்கையாளர்களுடன் விஷால் ஓவியம் பற்றி சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். அது அவருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 
அப்போது, அவர் தனது செல்லிடப்பேசியை எடுத்து அதிலிருந்த அவரது ஓவியங்கள் சிலவற்றை சார்வி கோலாச்சாவிடம் காட்டினார். கடந்த ஜூன் 2019 இல் விஷாலுக்காக ஓர் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார் சார்வி. 
வங்கி ஊழியர் நிகிலுடனான விஷாலின் சந்திப்பு மிக அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 6 - ஆம் தேதி விஷால் குறித்தும், அவரது திறமை குறித்தும் தனது சுட்டுரையில் பதிவு செய்தார் நிகில். இந்தப் பதிவு அவரே ஆச்சரியப்படும் அளவிற்கு வைரலாகியது. 

இதுகுறித்து நிகில் கூறுகையில், "நிறைய கலைத் துறை நண்பர்கள் வேலை பெற ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இதையடுத்தே விஷாலுக்கு நான் உதவ முடியும் என்று நினைத்தேன். முதல் நாள் என்னுடைய பதிவுக்கு அதிக பதில் இல்லை. 10 அல்லது 15 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், அடுத்த நாள், என் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. நான் விஷாலின் அனுமதி பெற்று, அவரின் செல்லிடப்பேசி எண்ணை சுட்டுரையில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். மூன்றாவது நாளில், விஷாலுக்கு 12 ஆயிரம் லைக்குகள் கிடைத்ததுடன், கிட்டத்தட்ட 6 ஆயிரம் முறை மறு ட்வீட் செய்யப்பட்டார். நண்பர்களிடையே இருக்கும் முகநூல், வாட்ஸ்அப், சுட்டுரை வலைத்தொடர்பு இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை'' என்கிறார். 
சுட்டுரை பதிவுக்குப் பிறகு, விஷாலுக்கு தனி நபர்களிடமிருந்து ஓவியங்கள் வரைவதற்கான பணி ஆணைகள் கிடைக்கின்றன. பெரிய நிறுவனங்களின் ஆதரவையும் அவர் பெறத் தொடங்கியுள்ளார்.
லக்னெளவைத் தளமாகக் கொண்ட ஒரு கலைக் கண்காட்சி நிறுவனம், விஷாலின் படைப்புகளைக் காட்சிப்படுத்த முன்வந்துள்ளது. பல பெருநிறுவனங்களின் உரிமையாளர்கள், புகழ்பெற்ற நடிகர்கள் அவரது கலைப்படைப்புகளை வாங்குவதற்கும், தொடர்புகொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, மகாராஷ்டிர மாநில அதிகாரி, மனிதவள மென்பொருள் நிறுவனமான sumHR நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் தாக்கர், வீடியோ அனலிட்டிக்ஸ் Vidooly தளத்தின் சுப்ரத் கார், பாலிவுட் நடிகர் பூஜா பட் உள்ளிட்டோர் அவருக்கு பணி வழங்கவும், உதவவும் முன்வந்துள்ளனர். அவர் பணியாற்றிய தனியார் உணவு விநியோகநிறுவனமும் அவருக்கு உதவ விரும்புவதாகக் கூறியுள்ளது. 
இதுகுறித்து விஷால் கூறுகையில், "சவாலான ஒன்றை வரைவது மகிழ்ச்சிக்குரியது. அதைச் செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். என் கலையில் அதிக கவனம் செலுத்துவேன். அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. எனது முழுநேர வேலையாக இதைத் தொடரும்போது, அதை நான் எவ்வாறு நிர்வகிப்பது, அதில் பயணிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்'' என்கிறார்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com