குரூப் - 1 தேர்வு: மாற்றங்கள் அவசியம்!

உத்தரபிரதேச மாநிலத்தின் தமிழக குரூப் - 1 தேர்வுக்கு இணையான தேர்வைப் (Combined State / Upper Subordinate Services Exam - 2020) பற்றி பார்ப்போம்
குரூப் - 1 தேர்வு: மாற்றங்கள் அவசியம்!

சென்ற இதழ் தொடர்ச்சி...
ஓய்வு பெற்ற பாராளுமன்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் என்.எம்.பெருமாள் தொடர்ந்து நம்மிடம் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலத்தின் தமிழக குரூப் - 1 தேர்வுக்கு இணையான தேர்வைப் (Combined State / Upper Subordinate Services Exam - 2020) பற்றி பார்ப்போம். இத்தேர்வு முதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
முதல் நிலைத்தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல்தாள் பொது அறிவும், இரண்டாம் தாள் புத்திக்கூர்மை பற்றியதும் ஆகும். ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. முதல்தாள் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், இரண்டாம் தாள் 100 கேள்விகளைக் கொண்டதாகவும் இருக்கும். தவறான விடைகளுக்கு 0.33% மதிப்பெண்கள் கழிக்கப்படும். இரண்டாம் தாள் தகுதித்தேர்வு மட்டுமே. ஐ.ஏ.எஸ் தேர்வை ஒட்டி, இத்தாளிலும் குறைந்தது 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
இரண்டாம் நிலைத் தேர்வில் மொத்தம் எட்டு தாள்கள் உள்ளன. பொது இந்தி, கட்டுரை, நான்கு பொது அறிவுத் தாள்கள், ஏதாவது ஒரு விருப்பப்பாடத்தில் இரண்டு தாள்கள் ஆகியன ஆகும்.
பொது இந்திக்கும், கட்டுரைக்கும் தலா 150 மதிப்பெண்கள், மற்ற நான்கு பொது அறிவு தாள்களுக்கும், ஒரு விருப்பப் பாட இரு தாள்களுக்கும் தலா 200 மதிப்பெண்கள் ஆக முதன்மைத் தேர்வின் எட்டுத் தாள்களுக்கும் சேர்ந்து 1500 மதிப்பெண்கள்.
முதன்மைத் தேர்வின் விருப்பப்பாடப் பகுதிக்கு 30-க்கும் மேற்பட்ட பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஐ.ஏ.எஸ் தேர்விலும் இதைப் போன்று 30-க்கும் மேற்பட்ட விருப்பப் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்களே கொடுக்கப்பட்டுள்ளது. 
மேலே கூறப்பட்ட தேர்வுகளுடன் இப்பொழுது தமிழ்நாடு தேர்வாணையத்தின் குரூப் - 1 தேர்வை ஒப்பிடலாம்.
குரூப் - 1 தேர்வும் மற்ற இரு தேர்வுகளை ஒட்டி முதல் நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளையும் கொண்டது. மற்ற இரு தேர்வுகளைப் போல அல்லாமல்
முதல் நிலைத்தேர்வு ஒரே ஒரு தாளைக் கொண்டது. கொள்குறி வகையில் அமைந்துள்ள இத்தேர்வு மூன்று மணி நேரமும், 300 மதிப்பெண்களையும் கொண்டுள்ளது. முதன்மைத் தேர்வு மூன்று தாள்களைக் கொண்டுள்ளது. மூன்று தாள்களும் பொது அறிவுத் தாள்களாகும். ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களைக் கொண்டதாகும். 
தமிழ்நாட்டின் குரூப் - 1 தேர்வை மேலே கூறப்பட்ட இரண்டு தேர்வுகளுடன் ஒப்பிடும் போது ஒரு மிகப்பெரிய வித்தியாசம் தென்படுகிறது.
அடிப்படை ஆங்கிலம், அடிப்படை தமிழ், கட்டுரைத் தாள், விருப்பப்பாடம் ஆகிய நான்கும் குரூப் - 1 முதன்மைத் தேர்வில் இல்லாததால் தமிழக இளைஞர்களுக்கு இவற்றில் புலமை பெறுவதற்கு அது வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆதலால் மத்திய அரசு வேலைகளைத் தகுந்த அளவில் தமிழக இளைஞர்கள் பெறுவதற்கு அது ஒரு தடையாக இருக்கிறது.
கிராமப்புற மாணவர்களின் போட்டித் திறமையைப் பற்றி பெரும்பாலானவர்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் தமிழ் வழியில் மட்டுமே கற்பவர்கள். நகர்ப்புற மாணவர்களை விட திறமை குறைந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு தேர்வு நிலைகள் எல்லாமே எளிதாக இருக்க வேண்டும். 
அப்பொழுது தான் அவர்கள் சிறந்து விளங்க முடியும் என்பது. மற்றொரு கருத்து அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது என்பது. இந்த இரண்டு கருத்துக்களும் சரியல்ல. 
நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைத்தற்கரிய ஓர் அருமையான வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு அமைந்துள்ளது. 
ஆற்றுப்படுகைகளிலும், குளத்தங்கரைகளிலும், ஆலமரத்தடிகளிலும் அமர்ந்து அமைதியான சூழ்நிலைகளில் நூல்களைப் படித்து தங்களது அறிவாற்றலைப் பெருக்கிடும் வாய்ப்பு கிராமப் புற மாணவர்களுக்கே உரித்தானது. ஆரவாரம் மிக்க சூழ்நிலையில் வாழும் நகர்ப்புற மாணவர்களுக்கு இவ்வரிய சூழ்நிலை கிடைப்பது மிகவும் கடினம்.
எனவே எந்தவித போட்டித் தேர்வுகளையும் கிராமப்புற மாணவர்களுக்கென்று மிகமிக எளிதாக வைக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு காலத்தில் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைகளில் இந்தியா முழுமைக்கும் நிறைந்து இருந்தார்கள். ஆனால் இன்றோ தமிழகத்திலுள்ள மத்திய அரசு வேலைகளில் குறிப்பாக ரயில்வே, வங்கிகள் போன்றவற்றில் தமிழக இளைஞர்கள் முழுமையாக வருவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருந்த போதிலும் தமிழ்நாடு தேர்வாணையம் ஆங்கிலத்துக்குத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும். எனவே குரூப்-1 தேர்வுக்கு ஓர் ஆங்கிலத்தாள் கொண்டு வருவது இன்றையச் சூழலில் இன்றியமையாதது. இத்தாள் 10 அல்லது 12- ஆவது வகுப்பு ஆங்கிலப் பாடநிலையில் கொண்டு வரலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் அமைந்துள்ளது போல, ஆங்கிலத் தாளை ஒரு தகுதித் தேர்வாக வைக்கலாம். இப்பாடத்தில் 33 அல்லது 35 விழுக்காடு அடிப்படைத் தகுதியாக வைக்கலாம். தரவரிசைப் பட்டியலுக்கு இத்தாளின் மதிப்பெண்ணைச் சேர்க்க வேண்டாம்.
ஆங்கிலத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பள்ளியில் உண்டான பாடங்களை ஒட்டி அமையாமல் இருத்தல் நலம். ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தாளரின் குறிப்பிட்ட கவிதை அல்லது கட்டுரையை ஒட்டி இல்லாமல் இருக்க வேண்டும். மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பிளஸ்-2 நிலைத்தேர்வு அல்லது 10-ஆம் வகுப்பு நிலைத் தேர்வு - இவற்றின் பாடத்திட்டத்தை ஒட்டி அமையலாம்.
ஆங்கிலம் ஒரு தகுதிப் பாட அளவிலாவது வைப்பது தமிழக இளைஞர்களுக்கு பெரும் பயன் விளைவிக்கும். 2019- இல் நடந்த குரூப்-1 தேர்வில் இரண்டே கால் இலட்சம் பேர் முதல் கட்டத்தேர்வு எழுதினார்கள். இருந்த பதவிகளோ 181 மட்டுமே. இரண்டு லட்சம் பேருக்கு மேலே தேர்வில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான அளவில் வரும் மத்திய அரசு வேலைகளைப் பெறுவதிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அது தமிழகத்துக்கே நல்லது. குறிப்பாக பின் தங்கிய வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தமிழகத்திலுள்ள மத்திய அரசு வங்கி வேலைகளில் நிறைந்த அளவில் வருவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கிலப் புலமை வழிவகுக்கும். இந்த ஆண்டிலும் குரூப்-1 தேர்வினால் நிரப்பப்பட வேண்டிய பதவிகள் 69 மட்டுமே.
(அடுத்த இதழில்)
வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com