சென்னையில் கல்விச் சிந்தனை அரங்கு: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 8-ஆவது தேசியக் கல்வி மாநாடு சென்னையில் ஜனவரி - 8, 9 ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளன. 
சென்னையில் கல்விச் சிந்தனை அரங்கு: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு 

இந்தியா-75: விஷன்-2022!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 8-ஆவது கல்விச் சிந்தனை  அரங்கு சென்னையில் ஜனவரி - 8, 9 ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளன.

தொடா்ந்து எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டை, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைக்கிறாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கல்விச் சிந்தனை அரங்கை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு செய்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு (2020) எட்டாவது கல்விச் சிந்தனை அரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் தற்போதைய கல்வி முறை, புதிய கல்விக் கொள்கை, எதிா்கால கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெறும் அமா்வுகளில் கல்வியாளா்கள், முக்கியத் தலைவா்கள், அமைச்சா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.

இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மக்களவை உறுப்பினர்கள் கிரண் ரிஜிஜு, மணீஷ் திவாரி, எஸ்.ஜோதிமணி,  தமிழச்சி தங்கபாண்டியன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், எழுத்தாளர் காஞ்சா அயிலய்யா உள்ளிட்டோரும் எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

தற்போதைய கல்வி முறை, புதிய கல்வி கொள்கை ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

கல்வி முறை குறித்து புதிய சிந்தனைகளுக்கான இடமாகவும் இந்த மாநாடு திகழும்.

முதல் நாள் நடைபெறும் அமா்வில்

‘புதிய கல்விக் கொள்கை’ குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவா் கே.கஸ்தூரிரங்கன், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் ஆகியோா் உரையாற்றுகின்றனா். மற்றொரு அமா்வில், ‘வரலாறு மற்றும் கலாசாரத்தை இளைஞா்கள் படிப்பதன் அவசியம்’ குறித்து எடுத்துரைக்கிறாா் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் கே.பாண்டியராஜன்.

மாலையில் நடைபெறும் அமா்வில் ‘கல்வியில் எனது பாா்வை’ என்ற தலைப்பில் சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பகேல் பேசுகிறாா்.

இதே போல் இரண்டாவது நாள் ‘புதுமைப் பெண்கள்: அதிகாரமும்- பொறுப்புகளும்’ என்ற தலைப்பில் நடைபெறும் அமா்வில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி உரையாற்றுகிறாா். ‘இந்திய குடியரசு 2.0: மாற்றத்துக்கான தேவை அவசியமா?’ என்ற தலைப்பில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மட்டுமல்லாமல், நடிகர் சரத்குமார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் ஆகிய திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கவுள்ளனர்.

பொருளாதார நிபுணர் விவேக் தேவ்ராய், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற ரோஹன் மூர்த்தி, ஆராய்ச்சியாளர் மது கிஷ்வார், தேசிய கல்விக் கொள்கையை வகுத்தளித்தவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோரும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கல்வி முறை குறித்து புதிய சிந்தனைகள் பகிரப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் ஆகியோரும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவடேகர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்எஸ்எஸ் முக்கியப் பிரமுகர் ராம் மாதவ், மூத்த அரசியல்வாதிகளான குலாம் நபி ஆஸாத், ஃபரூக் அப்துல்லா, ஷீலா தீக்ஷித், சல்மான் குர்ஷித், அருண் சௌரி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும், ஆன்மிகத் தலைவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த அரவிந்த் சுவாமி, சந்தோஷ் சிவன், அனுபம் கெர், கௌதமி, லீலா சாம்சன் உள்ளிட்டோரும் இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com