Enable Javscript for better performance
கிராமப் பஞ்சாயத்துகளுக்கான செயல் திட்டம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோ- Dinamani

சுடச்சுட

  

  கிராமப் பஞ்சாயத்துகளுக்கான செயல் திட்டம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

  Published on : 14th January 2020 12:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pr

  மிச்சமெல்லாம் உச்சம் தொடு 51
  டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக ஜெனிவாவிற்கு மே 25-29, 2005 சென்றார். அவரோடு சென்ற அரசு முறை குழுவில் நானும் சென்று இருந்தேன். 
  அப்துல் கலாமின் வருகைத் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி அமைப்பு (CERN), ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆஃப் லொசேன் (EPFL) மற்றும் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆஃப் சூரிச் (ETH)) ஆகியவை இருந்தன. ஜெனீவாவின் CERN -இல் "இணைந்து பணியாற்றும் அறிக்கை' கையெழுத்திடப்பட்டது. 
  புகழ்பெற்ற விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான விஞ்ஞானி டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வீட்டிற்குச் சென்று கலாம் பார்வையிட்டார். அவர் மிகவும் குறுகிய படிக்கட்டில் ஏறினார். அந்த தளத்தில் இருந்து தான் ஐன்ஸ்டீன் தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். ஐன்ஸ்டீனின் ஆறு இயற்பியல் படைப்புகளுக்கு இந்த வீடு பிரபலமானது. இந்த படைப்புகள்தாம் உலகின் புதிய கருத்தாக்கத்தின் அடிப்படையாகும். ஐன்ஸ்டீனின் வீட்டிற்கு வந்ததை தனது புனித யாத்திரை என்று கலாம் வர்ணித்தார். 
  இதைத் தாண்டி கலாமை ஈர்த்தது, சுவிட்சர்லாந்தின் கிராமங்கள். ஏனென்றால் தனது புரா திட்டத்திற்கும் சுவிட்சர்லாந்து கிராமங்களில் இருந்து கற்றுக் கொள்ள ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று கண்டறிய விரும்பினார். 
  சுவிட்சர்லாந்தில் பிரீன்ஸ் ஏரியின் கரையோர மீன்பிடி கிராமமாகிய இùஸல்ட்வால்ட் என்ற கிராமத்திற்கு சென்றோம். புகழ்பெற்ற அக்கிராமத்தில் ஏரிக் கரையோரம் பல ஹோட்டல்கள் அமைந்துள்ளன.
  இùஸல்ட்வால்ட் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 500 பேருக்கும் குறைவு தான். பரப்பளவு ஒரு சதுர கி.மீ. கிராமத்தின் முக்கியத் தொழில்கள் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புக்களும், மீன்பிடி தொழிலும். கிராமத்தின் நடுவில் ஒரு பள்ளியும் விளையாட்டு மைதானமும் உள்ளன. அங்குள்ள மக்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவனித்துக் கொள்வது, ஹோட்டல்கள் நடத்துவது, திராட்சைத் தொழில், பீர் தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலைகளைச் செய்தனர். 5% - 10% மக்கள் மட்டுமே பக்கத்து ஊருக்குச் சென்று வேலை பார்த்தனர். அந்த கிராமத்தில் அனைவரும் வேலை பார்க்கின்றனர்; அவர்களது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மதிப்பு கூட்டப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்க்கைத்தரம் நகர மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் போல் இருக்கிறது. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அனைத்துச் சேவைகளும் துரிதமாகக் கிடைப்பதால் அது கிட்டத்தட்ட நகரம் போல இருக்கிறது. நாம் "புரா' மாதிரியான கிராமத்தில் எதிர்பார்த்தது போல் கல்வி வசதி, சுகாதார நல மையங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவை அந்த கிராமத்திலேயே கிடைக்கின்றன. 
  500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் கூட அனைத்து வசதிகளும் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் 1000 பேருக்கும் மேல் வாழும் ஆயிரக்கணக்கான கிராமங்களில், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிய பின்பும், தமிழகத்தில் ரூ. 34,000 கோடி செலவளிக்கப்பட்ட பின்பும் மக்களுக்கு தேவையான எவ்வித வசதிகளும் இன்று கூட உருவாக்கப்பட வில்லை என்பதுதான் பஞ்சாயத்து முறையில் நாம் காணும் உண்மை. இப்போது அதிக அளவில் படித்த இளைஞர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேர்மையோடு போட்டி போட்டு தங்கள் ஊர் பஞ்சாயத்தில் மாற்றம் கொண்டு வருவேன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 
  பெரும்பாலான முக்கிய ஊரக வளர்ச்சித் திட்டங்கள் நீடித்த வளர்ச்சி என்ற இலக்குடன் இருப்பதில்லை. விவசாய வளர்ச்சி, நீடித்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் (ஏரிகள்/குளங்களைத் தூர்வாருதல்) ஆகியவற்றுக்கான நீடித்து நிலைக்கும் கட்டமைப்பு அத்திட்டங்களில் இருப்பது கிடையாது. ஆனால் நீடித்து நிலைக்கும் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது, 
  மக்கள் இடம் பெயர்வதைத் தடுப்பது போன்றவை புரா நீடித்த வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 
  உயிரி தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பத்துடன் தகவல்-தொடர்பு தொழில்நுட்பமும் நம் வியூகத்தில் பெரும்பங்காற்ற வேண்டும். வேலைவாய்ப்பைப் பொறுத்தமட்டில் நமது சவால் என்னவெனில் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களை - விவசாயிகளைத் தவிர - தொழிலுற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் ஈடுபட வைக்க வேண்டும். இம்மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வாறு? தொழிலுற்பத்தி மற்றும் சேவைத்துறைகளை நாட்டின் கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் இதற்கு ஒரே வழி. எனவேதான், இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது அடிப்படையில் சேவைத்துறை போன்றவற்றில் சமூக மாற்றத்துடன் இணைந்தே உள்ளது. இதனால் விவசாயமும் தொழிலுற்பத்தியும் வலுவடைகின்றன.
  இவ்வாறான நடவடிக்கைகளால் கடைநிலை மட்டத்தில் சுமார் 1.5 கோடி சுய வேலைவாய்ப்பு/பிற வேலைவாய்ப்புக்கள் கிராமப்புறத்தில் உருவாகும். இதனால், 5 ஆண்டுகளில் நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் 4 மடங்காக அதிகரித்து விடும். 
  நீடித்த வளர்ச்சியை அடைய நமக்கு உதவும் முக்கிய அம்சங்கள் எவை? நல்ல நிர்வாகம், முதலீட்டாளர்களின் தேவையைத் தடையற்ற, துரித வழியில் செய்து முடிக்கும் கட்டமைப்பு, நன்கு வரையறுக்கப்பட்ட தொழிலாளர் விதிகள், மக்கள்/சொத்துக்களின் உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பு, அனைத்துத் துறைகளிலும் ஒளிவு-மறைவின்மை, திறமையான/பாரபட்சமற்ற துயர்துடைக்கும் நிகழ்முறை, சட்டங்கள்/கொள்கைகள்/பெரும் திட்டங்கள் ஆகியவற்றில் உறுதித்தன்மை காட்டுதல் ஆகியவை புரா திட்டத்தில் இருக்கின்றன. 
  நீடித்த நகர்ப்புற வளர்ச்சியை மையமாக்கியுள்ள இச்சூழலில் 30-50 கிராமங்கள் கொண்ட புரா குழுமத்திற்கான அடிப்படை அங்கமான கிராமப் பஞ்சாயத்துக்கான செயல்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது பஞ்சாயத்துக் கட்டமைப்பை நாம் கவனத்தில் கொண்டால் ஒவ்வொரு ஒன்றியமும் புரா குழுமத்திற்கு சமமாகும். 
  அப்துல் கலாம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களைச் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு 2002-ஆம்ஆண்டு முதல் பலமுறை கிடைத்துள்ளது. 2012 - ஆகஸ்ட் 10 -ஆம் தேதி, வேலூர் தங்கக் கோவிலின் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஏற்பாடு செய்த "பசுமைச் சக்தி' என்னும் விழாவில் மரம் நடும் நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவின்போது அம்மாவட்டத்தைச் சேர்ந்த 1600 பஞ்சாயத்துத் தலைவர்களை டாக்டர் கலாம் சந்தித்தார். 
  1638 -க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் மரக்கன்றுகளையும், ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் 500 பழங்களைத் தரும் மரக்கன்றுகளையும் விநியோகித்தார். இந்த மாவட்டங்களில் ஓர் ஆண்டுக்குள் 6,00,000 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய இந்த திட்டம் வழிவகுத்தது.
  பஞ்சாயத்துக்களின் வளர்ச்சி அம்சங்கள் தொடர்பாக அவர்களுடன் பேசிய கலாம் அவர்களனைவரையும் கிராம வளர்ச்சிக்கு எப்படி உழைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுக்க வைத்தார். அப்பிரமாணத்திலிருந்து சிலவற்றை எடுத்து ஊரக நீடித்த வளர்ச்சித் திட்டங்களைப் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மூன்றடுக்குக் கட்டமைப்புடன் சேர்த்து, கிராமப் பஞ்சாயத்துகளுக்கான பின்வரும் செயல்திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இது ஒரு "மாதிரி' செயல் திட்டமே; கிராமங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்த பஞ்சாயத்து போர்டு தேர்தல்களில் போட்டியிட்டு அதன்மூலம் கிராம மாற்றத்துக்கு அடிபோடும் தலைவர்களின் ஆக்கபூர்வ அணுகுமுறையைப் பொறுத்து, தேவைப்படும் மாற்றங்களை இதில் நாம் கொண்டு வரலாம். அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்: 
  1. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான செயல்திட்டம் மற்றும் இலக்கை உருவாக்கி கிராமசபை மூலம் வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி, கிராமபுறக் கட்டமைப்பை நீடித்த தன்னிறைவு பெற்ற கட்டமைப்பாக மாற்றுவோம். 
  2. கிராமத்திலுள்ள குளம்/குட்டை/ஏரிகள் போக்குவரத்துக் கால்வாய்களை தூர்வாரி, புதுப்பித்து சுத்தம் செய்வோம். அனைத்து வீடுகளிலும், தெருவிலும் மழைநீர் சேகரிப்பு முறையை அமல்படுத்தி, நிலத்தடி நீரின் அளவை அதிகரித்து, நீடித்த நீர் கட்டமைப்பை ஏற்படுத்தி சுத்தமான குடிதண்ணீர் கிடைக்க செய்வோம். 
  3.அழியாத நெகிழி பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம்; மக்கி அழியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவோம். குப்பைத்தொட்டி இல்லாத தெருக்களை உருவாக்குவோம். 
  4. சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டிலேயே உரமாக்குவோம், அதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும், வீட்டு மாடியிலும் இயற்கை காய்கறித் தோட்டங்களை உருவாக்குவோம். பூச்சிக்கொல்லியில்லா ஆரோக்கியமான காய்கறிகளை மக்களுக்கு மக்கள் சந்தைகள் மூலம் கொடுப்போம். மக்காத குப்பைகளைத் தனித்தனியே பிரித்து, அதை மறு சுழற்சிக்கு அனுப்பி அந்த குப்பை மூலம் சந்தையில் பணமாக்கக்கூடிய நுகர்வோர் பொருட்களைத் தயாரிப்போம்.
  5.கிராமத்தில் குழிக்கழிப்பறையில்லாமல், மையக் கழிப்பிடக் கால்வாயுடன் வீட்டுக் கழிப்பறைகளை ஒருங்கிணைத்து மின்சாரம் உற்பத்தி செய்வோம். தெரு விளக்குகள், வீட்டு விளக்குகள் எரிவதற்கு சமூக சூரிய ஒளிப் பேனல்கள் நிறுவி கிராமத்தைச் சுய சார்புடையதாக ஆக்குவோம்.
  6.பழங்கள் தரும் மரங்களை நட்டு, பேணி, பராமரித்துக் காப்போம். அடர்த்தியான காடு வளர்ச்சித் திட்டத்தை வீடுகள், பள்ளிகள், ஏரிகள், ஆற்றுப் படுகைகள், தெருக்களிலும் அமல்படுத்தி சுத்தமான சுற்றுப்புறச் சூழலை உருவாக்குவோம்.
  7.தரமான கல்வி கட்டமைப்புகளை உருவாக்கி தரமான பள்ளிக் கல்வி, திறன் வளர்ப்பு ஆகியவற்றைப் பள்ளிகளில் ஊக்குவிப்போம். புத்தகங்களைத் தானம் கொடுத்து வீடுகளில் நூலகம் அமைக்க ஊக்குவிப்பதுடன், பள்ளிகளிலும் நூலகங்களை அமைப்போம்.
  8.விளையாட்டுத் திடல்களைப் பள்ளிகளில் அமைத்து திறமையானவர்களை அடையாளம் கண்டு, விளையாட்டு வசதிகள் செய்து கொடுத்து, அவர்களது திறமையை மேம்படுத்தி அவர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுமாறு ஊக்கப்படுத்துவோம்.
  9.சிக்கலில்லா சாக்கடை, சாக்கடை கலக்காத மழை நீர் வடிகால் கால்வாய்கள் தனியாக அமைத்து நீர் நிலைகள் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவோம். அனைவருக்கும் தரமான சுகாதார நல வசதிகள் கிடைக்கச் செய்வோம்.
  10.ஆற்றுப்படுகை, மலைகள், காடுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புக்களை அகற்றி மரங்களை நட்டு அதனால் ஆறுகள், மலைத்தொடர்கள், காட்டுச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாத்து, மரங்கள் சூழலையும், நீர் நிர்வாகத்தையும் காப்போம்.
  11. திருந்திய நெல் சாகுபடி, SSI, Precision Farming போன்ற மேம்பட்ட விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாயம் செழிக்க உழைப்போம்; கிராமங்களில் உணவுப்பதனிட்டு மதிப்பு கூட்டும் வேலைகளை ஊக்கப்படுத்தி, குளிரூட்டப்பட்ட உணவு கிடங்கு மற்றும் மக்கள் சந்தை கட்டமைப்பு வசதிகள் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். விவசாய உற்பத்தி கம்பெனிகளை உருவாக்கி அதை சந்தைப்படுத்துவோம். 
  12. பண்ணை விவசாயம், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, குறிப்பிட்ட சிலரகப் பயிர்களுக்கான கூட்டு விவசாயம் வளர்ப்போம். சுய உதவிக் குழுக்கள் மூலம் விவசாயத்து தீவனப் பண்ணை ஆகியவற்றை உருவாக்குவோம். கூட்டாக வேலை செய்து, கூட்டாகச் சம்பாதித்து, கூட்டாக வளம் பெறுவோம்.
  13. பாரம்பரியத் திறன் வளர்ப்பையும் கிராமத்து இளைஞர்களின் புது கண்டுபிடிப்புகளையும் ஊக்குவித்து, தொழில்துறை, சேவைத்துறை ஊக்குவித்து, அரசு, வங்கிகளுடன் பணிபுரிந்து தொழில் முனைவோர்களை உருவாக்குவோம். கிராமப்புற தற்சார்பு பொருளாதரத்தை உருவாக்கி, வேலைவாய்ப்புக்களை உருவாக்கி தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்.
  14.இறுதியாக கரியமில வாயு இல்லா கிராமங்களை உருவாக்கி, சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுப்புறச் சூழலை கிராமத்தில் ஏற்படுத்துவோம். 

  நம் நாட்டின் கிராமப்புறத் துறையை மேம்படுத்துவதற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் இந்திய அரசு ஆகியவை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நில வளத் துறையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தத் திட்டங்கள் கிராமப்புற இந்தியாவின் குடிமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை இறுதியில் நீண்ட காலத்திற்கு இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக மாறும்.
  இந்திய அரசு தொடங்கிய ஊரக வளர்ச்சிக்கான சில முக்கியமான திட்டங்கள் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா, தீன தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா, ஸ்வர்ணஜயந்தி கிராம் ஸ்வரோஸ்கர் யோஜனா (எஸ்ஜிஎஸ்ஒய்) / தேசிய கிராமப்புற வாழ்வாதார பணி, பிரதமர் ஊரக வளர்ச்சி உறுப்பினர்கள் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் (NREGA), சம்பூர்ணா கிராமீன் ரோஸ்கர் யோஜனா (எஸ்ஜிஎஸ்ஒய்), சர்வ சிக்ஷô அபியான், சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY), தேசிய சமூக உதவித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) / இந்திரா அவாஸ் யோஜனா, அந்தோதயா அண்ணா யோஜனா (AAY), கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (புரா) போன்ற திட்டங்களை தங்கள் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் பயன் படுத்தி மக்களை இத்திட்டங்களின் பயன்கள் சென்றடைய வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையாக வெற்றி பெற்ற தலைவர்கள் உழைக்க வேண்டும்.
  மார்ச் 5, 2019-இல் தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றத் திட்டத்திற்கான The National Rural Economic Transformation Project 
  (NRETP) உலக வங்கியும் இந்திய அரசும் இன்று 250 மில்லியன் டாலர் (ரூ 1750 கோடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது கிராமப்புற வீடுகளில் உள்ள பெண்களை புதிய தலைமுறை பொருளாதார முயற்சிகளுக்கு மாற்றுவதற்கு உதவும். வேளாண்மை மற்றும் வேளாண்மை சாராத தயாரிப்புகளுக்கான நிறுவனங்கள் உருவாக்க உதவும். இப்படிப்பட்ட வாய்ப்புகளை கிராமப்புற ஊராட்சிகளுக்கு நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் மட்டுமே உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை பயன்படுத்துங்கள். மிச்சமெல்லாம் உச்சம் தொடுங்கள்.
  உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
  பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
  vponraj@live.com 
  (தொடரும்)


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai