இளம் வயது சாதனையாளர்கள்!

பட்டப் படிப்பு படித்தவர்கள்தாம், ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்கள்தாம் சாதிக்க முடியும் என்பதில்லை.
இளம் வயது சாதனையாளர்கள்!

பட்டப் படிப்பு படித்தவர்கள்தாம், ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்கள்தாம் சாதிக்க முடியும் என்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த அறிவுத்தளத்தை விரிவுபடுத்தும் யாருமே சாதனையாளர்களாக சரித்திரம் படைக்க முடியும். மேலும் சாதனை படைக்க வயது தடை இல்லை என்பதை பலர் நிருபித்துள்ளனர். 
அந்த வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஆகியோர் கணினி மென்பொருள் துறையில் சாதனை படைத்து வயது ஒரு தடையல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். 
கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சமைரா மேத்தா. ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த 11 வயது சிறுமி Corder Bunnyz என்ற STEM கோடிங் போர்ட்கேம் என்ற விளையாட்டைக் கண்டுபிடித்துள்ளார். இது குழந்தைகளுக்கான சாதாரண விளையாட்டல்ல. நான்கு முதல் 104 வயது வரையுள்ளவர்களுக்கு மென்பொருள் கோடிங்கை விளையாட்டாக கற்றுக் கொடுக்க உதவும் பிரத்யேக விளையாட்டாகும் என குறிப்பிட்டுளளார் இவர். 
இவரது போர்ட்கேம் பற்றி எடுத்துரைக்கும் வகையில் 40 பயிற்சி பட்டறைகளை நடத்தியதோடு, 1400- க்கும் அதிகமான குழந்தைகளுக்கு போர்ட்கேம் பயிற்சியும் அளித்துள்ளார். சிறுவயதிலேயே ஜொலிக்கும் இவரது திறனைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் இருந்து பாராட்டுக் கடிதம் வந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அங்கே பேசியும் வருகிறார். 
இதுபற்றி சமைரா மேத்தா பேசும்போது, "2015- ஆம் ஆண்டு போர்ட் கேம் கோடிங் செய்யக் கற்றுக் கொண்டேன். 2017- ஆம் ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவிலேயே, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மேலும் பல விளையாட்டுக்களை உருவாக்கி வருகிறேன். இதன் மூலம் ஏராளமான குழந்தைகள் கோடிங் குறித்து தெரிந்து வருகின்றனர் என்பது எனக்கு மகிழ்ச்சி. ஒரு பில்லியன் குழந்தைகள் கோடிங் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்'' என்கிறார். 
CoderBunnyz என்ற தனது கோடிங் போர்டு விளையாட்டு, ஸ்டேக், அல்காரிதம் எழுதுதல், பட்டியலிடுதல், வரிசைப்படுத்துதல் போன்ற கம்ப்யூட்டர் புரோக்ராமிங்குகளை எளிதாக்குகிறது. இந்த போர்டு விளையாட்டு தற்போதைய காலகட்டத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. கோடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து கோட்பாடுகளையும் இந்த விளையாட்டு வேடிக்கையாகவும், எளிதாக இண்டர்ஆக்ட் செய்யும் வகையிலும் கற்றுக்கொடுக்கிறது'' என கூறும் சமைரா தற்போது, குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவுக் கோட்பாடுகளை கற்றுக்கொடுக்கும் CoderMindz என்கிற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். தனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை வீடில்லாதோருக்கு வழங்குகிறார் என்பது கூடுதல் சிறப்பு. 
அது போல், ஹைதராபாத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் சித்தார்த்ஸ்ரீவஸ்தவின் கோடிங் திறமையைப் பார்த்து, ஒரு மென்பொருள் நிறுவனம் அவருக்கு பணி வழங்கியுள்ளது. சிறு வயதில் மென்பொருள் மற்றும் கோடிங் எழுதுவதில் தனது மகனுக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை அவருக்கு கோடிங் கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் சித்தார்த் கற்று, அதனைப் பயன்படுத்தி பல கோடிங்குகளை எழுதியுள்ளார்.
இவரின் திறமையைப் பார்த்த மென்பொருள் நிறுவனம் அவரை தனது நிறுவனத்தில் தரவு விஞ்ஞானியாக்கி இருக்கிறது. 
சிந்திக்கும் திறனும், முயற்சியும் இருந்தால் வெற்றி எட்டும் உயரத்தில்தான் என்பதை உலகிற்கு உணர்த்திய இவர்களின் சாதனைகள், மாணவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்றால் அது மிகையில்லை.
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com