காற்று மாசிலிருந்து மாற்றம்!

இந்தியாவில் காற்று மாசு ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் குறைந்தது
காற்று மாசிலிருந்து மாற்றம்!

புகைப்படப் போட்டி...
இந்தியாவில் காற்று மாசு ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. 
ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் குறைந்தது 14 கோடிப் பேர் பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகம் மாசுபட்ட காற்றை சுவாசிக்கின்றனர். தொழில்துறையால் 51%, வாகனங்களால் 27%, விவசாயக் கழிவுகளை எரிப்பதால் 8%, தீபாவளி பட்டாசுகளால் 5% காற்று மாசு ஏற்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களின் இறப்புக்கும் காற்று மாசு காரணமாக அமைகிறது.
இந்நிலையில், தில்லியில் செயல்படும் Collaborative Clean Air Policy Centre என்ற அமைப்பு இந்தியாவின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபாடு சிக்கல்களைக் கையாள்வதைப் பற்றி ஆராய்ந்து, மதிப்பீடு மற்றும் ஒப்பீடு செய்கிறது. 
இந்த அமைப்புடன் India Habitat Centre (IHC), Centre for Science and Environment (CSE) ஆகிய அமைப்புகள் இணைந்து Clean Air India A Photo Contest என்ற ஒரு புகைப்படப் போட்டியை அண்மையில் அறிவித்துள்ளன.

இந்தப் போட்டி குறித்து அந்த அமைப்புகள் கூறுகையில், "காற்று மாசுபாடு அதிகரித்து வருவதுகுறித்து நாம் தீவிரமாக கவலைப்படுகிறோம். மாசுபாட்டை நம் மனதில் காட்சிப்படுத்தலாம். வார்த்தைகளால் விவரிக்கலாம். நல்ல காற்றை சுவாசிக்க வைக்க நமது நாடு மேற்கொண்ட முயற்சிகளால் ஏற்பட்ட மாற்றத்தின் உண்மைகளை நாம் படம் பிடிக்க முடியுமா? முடியுமென்றால், இந்த போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம். உங்கள் புகைப்படங்கள் மூலம் மாற்றத்தின் படிவத்தை உருவாக்க எங்களுக்கு உதவலாம். இந்தியாவின் தேசிய காற்று மாசு கட்டுப்பாட்டு கொள்கைகள் மற்றும் செயல்களின் விளைவாக நாடு எதை விரும்புகிறது, எது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் புகைப்படங்களுடன், நம்பிக்கையைத் தூண்ட எங்களுக்கு உதவுங்கள்' என கேட்டுக் கொண்டுள்ளன.


இந்தப் போட்டியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் (Overseas Citizenship of India) மட்டும் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் 2 தொழில்நுட்பக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 
முதலாவது, பொது புகைப்படக் கலைஞர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் எந்த உபகரணத்தையும் பயன்படுத்தலாம். 2 ஆவது மொபைல் போன் கேமராவைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கானது. ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவிலும் 3 பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும், ரன்னர்அப்-க்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
வெற்றியாளர்கள் மற்றும் ரன்னர்அப் ஆகியோரின் படங்கள் தில்லியில் உள்ள India Habitat Centre- இல் காட்சிக்கு வைக்கப்படும். அதோடு, இந்த புகைப்படங்கள் Down To Earth இதழில் பிரசுரிக்கப்படலாம்.

போட்டிக்கான படங்கள் 
1. மாசுபடுதல் மற்றும் மாசுபாடு இல்லாமல் இந்தியாவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம் (இந்த 2 படங்களும் ஒற்றை நுழைவாகக் கருதப்படும்),
2. ஓர் இந்திய நகரத்திற்குள் சுத்தமான காற்றில் கிடைத்த அனுபவம், 3. இந்திய நகரங்களுக்கு வெளியே சுத்தமான காற்றால் கிடைத்த அனுபவம் ஆகியவை எழுச்சியூட்டும் புகைப்படங்களாக இருக்க வேண்டும். 
சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் இந்த போட்டிக்காக மட்டுமே எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். போட்டி முடியும் வரை அவற்றை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. மாணவர் பிரிவில் பங்கேற்பவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற சான்றிதழின் நகலை அனுப்ப வேண்டும். பிற கேமராக்களைப் பயன்படுத்தும் மாணவர்கள் முதல் பிரிவிலும் விண்ணப்பிக்கலாம். அனைத்துப் புகைப்படங்களும் இந்திய நகரங்கள் அல்லது அதற்கு நகரங்களுக்கு வெளியே எடுக்கப்பட வேண்டும். தில்லிக்கு வெளியே புகைப்படம் எடுப்பது ஊக்குவிக்கப்படுகிறது. புகைப்படங்கள் பெரிய கூட்டத்தைத் தவிர, அடையாளம் காணக் கூடிய நபர்களைக் காட்டக்கூடாது. அவ்வாறு காட்டப்பட்டால், அந்த நபர்களிடமிருந்து கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் காற்று மாசு தொடர்பான நிபுணர்களின் 4 பேர் கொண்ட நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். 
விண்ணப்பிக்கக் கட்டணம் இல்லை. புகைப்படங்களை அனுப்பும்போது அவை எங்கு, எப்போது படம்பிடிக்கப்பட்டவை மற்றும் பயன்படுத்தப்பட்ட சாதனத்தின் விவரங்களை ஏ4 தாளில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் தெரிவிக்க வேண்டும். செல்லிடப்பேசி எண், அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் உள்ளிட்ட விண்ணப்பதாரரின் தொடர்பு விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை Clean Air Photo Contest c/o Shivani Sharma Collaborative Clean Air Policy Centre Darbari Seth Block (TERI), India 
Habitat Centre Lodhi Road, New Delhi-110003 என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
வெற்றி பெற்றவர்களின் விவரம் மே மாதம் போட்டி அமைப்பாளர்களால் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் India Habitat Centre - இல் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் வெற்றியாளர்களுக்கு பயணச் செலவு வழங்கப்படும்.
போட்டி அமைப்பாளர்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களை விளம்பர மற்றும் வணிகரீதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவர். மேலும், தங்கள் சொந்த வெளியீடுகள் மற்றும் வலைதளங்களிலும் பயன்படுத்தலாம். போட்டி குறித்த மேலும் விவரங்களை www.Indiahabitat.org என்ற வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com