விஷுவல் டிசைனிங்: சில அடிப்படைகள்!

மனிதர்கள் நாகரிக வாழ்க்கை தொடங்கியதில் இருந்தே, படம் மற்றும் உருவத்தைக் கொண்டு தகவல் பரிமாற்றம் செய்யும் முறை தொடங்கிவிட்டது.
விஷுவல் டிசைனிங்: சில அடிப்படைகள்!

மனிதர்கள் நாகரிக வாழ்க்கை தொடங்கியதில் இருந்தே, படம் மற்றும் உருவத்தைக் கொண்டு தகவல் பரிமாற்றம் செய்யும் முறை தொடங்கிவிட்டது. அதன் ஒரு பரிணாம வளர்ச்சியாக விஷுவல் டிசைனிங் (Visual Designing) உள்ளது. ஒரு காட்சியைக் கண்டதும், அதில் உள்ள தகவல்களை படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் காட்சியை வடிவமைப்பதுதான் விஷுவல் டிசைனிங் கலை. 
அச்சுக்கலை வடிவமப்பு (Typography), வண்ணம், படம், இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவையே விஷுவல் டிசைனிங் கலைக்கு அடிப்படையாக உள்ளன. 
திரைத்துறை, ஊடகம் என பல்வேறு துறைகளில் Visual designer களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. எனினும், ஒருசிலரே வெற்றியாளர்களாக திகழ்கின்றனர். சிறந்த Visual designer ஆக...
அடிப்படை அவசியம்
மொழி என்பது ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கருவியாகவே உள்ளது. அதுபோல விஷுவல் டிசைனிங் என்பது ஒருவகை காட்சி மொழியாகும். 
ஒரு புதிய மொழியைக் கற்கும்போது, முதலில் அடிப்படையில் இருந்து நாம் தொடங்குவோம். பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்கள் ஆகியவை ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான அடிப்படையாக அமைகின்றன. புதிய மொழியை நாம் எவ்வாறு கற்றுக் கொள்கிறோமோ அதுபோல விஷுவல் மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். 
அச்சுக் கலை (Typography) 
ஒரு வடிவமைப்பாளரின் அச்சுக்கலை திறமையே அனைத்திலும் முதன்மையானது. ஒரு காட்சியை வடிவமைக்கும்போது அதில் எந்த எழுத்துகள் இருக்க வேண்டும்; அந்த எழுத்துகள் எந்த வரிசையில் இருக்க வேண்டும்; எத்தகைய அளவில் (FONT SIZE) இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம்.
TRACKING, KERNING (இரு எழுத்துகளுக்கிடையே உள்ள இடைவெளி குறித்தது), LEADING (இரண்டு வரிகளுக்கிடையே உள்ள இடைவெளி) ஆகியவை குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்சுக்கலையில் பல நுட்பமான விஷயங்களைக் கொண்டு வர இயலும். 
மேலும், இவையனைத்தையும் தனியே வகுப்புகளுக்குச் சென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இணையத்தில் இல்லாதது எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து தகவல்களும் எளிதாக கிடைக்கின்றன. அங்கு அச்சுக்கலை குறித்த பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மற்ற விஷுவல் டிசைனர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் கொள்ளலாம். 
படம்
ஸ்மார்ட் போன் யுகத்தில் வாழும் நம் மக்கள் ஒரு வலைதளத்துக்குள் சென்று பார்த்தால் அனைத்தும் பார்த்ததும் புரிய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். உதாரணமாக நமது செல்லிடப்பேசியில் உள்ள யூ டியூப், முகநூல் ஆகியவற்றை குறிப்பதற்கு குறியீடுகள் உள்ளன. அந்த குறியீடுகளை வைத்து அந்த செயலிக்குள் சென்றால் எதை பயன்படுத்த முடியும் என்று அனைவரும் புரிந்து கொள்கின்றனர். அதுபோல, கூற வேண்டியவற்றை எளிதான குறியீடுகள் மூலமாக, படங்கள் மூலமாக பயனர்களுக்கு கூற வேண்டும். அத்தகைய டிசைனர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. 
இடைவெளி 
காட்சி வடிவமைப்புகளில் செங்குத்து மற்றும் கிடைமட்ட வடிவமைப்பில் இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது. எழுத்துகளின் வரிசைமுறையை அழகாக்குவதற்கும், வார்த்தைகளுக்கு இடையில் உள்ள தொடர்பை கூறுவதற்கும் இடைவெளி முக்கியமானது.
ஒரு விஷயத்தை காட்சி வழியாக நாம் கூற விரும்புகையில், எழுத்துகளின் அர்த்தத்தை எளிதாக விளக்கும் வகையில் சரியான இடைவெளியை அளிக்க வேண்டும். அச்சுக்கலை படிக்கும்போது, இடைவெளியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள இயலும். 
அளவிடுதல்
ஒரு காட்சியின் வரிசைமுறையை உருவாக்கும்போது, அளவிடுதல் என்று தனியாக எதுவும் இல்லை. கூற விரும்பும் கருத்துகளுக்கு இடையிலான உறவுகளைத் தெரிவிக்க அளவைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்களுக்கு எளிதாகப் புரிய வைக்கலாம். இரண்டு வரிகளின் முதல் எழுத்தும் ஒன்றாக இருக்கும்போது, அந்த இரண்டு எழுத்துகளுக்கும் பொதுவாக முதல் எழுத்தை சரியான அளவில் எழுத வேண்டும். அப்போதுதான் கூற வந்த கருத்து எளிதாகப் பயனரை சென்றடையும். 
பொருளை வெளிப்படுத்த வண்ணம்
ஒரு விஷயத்தை குறிப்பால் உணர்த்த வண்ணங்கள் பயன்படுகின்றன. உணர்ச்சிரீதியான அதிர்வுகளை வண்ணங்கள் உருவாக்குகின்றன. சிலர் வருத்தத்தைத் தெரியப்படுத்த கறுப்பு நிற உடை அணிவதை வழக்கமாக கொண்டிருப்பர். வடிவமைப்பில் அர்த்தத்தை வெளிப்படுத்த வண்ணம் உதவுகிறது. 
பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் தனிப்பட்ட விருப்பம், கலாசார வளர்ப்பு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் நிறங்கள் உள்ளிட்டவற்றை டிசைனர்கள் அளிக்க வேண்டும். 
-க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com