சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! 81 - தா.நெடுஞ்செழியன்

ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் இணையதளத்தில் அடுத்ததாக உள்ள THE SKILLS PASSPORT என்ற பிரிவில் தொல்லியல்துறையில் தனது பணியைத் தொடர விரும்புபவர்களுக்கான தகவல்கள் தொகுத்துத்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! 81 -  தா.நெடுஞ்செழியன்

ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் இணையதளத்தில் அடுத்ததாக உள்ள THE SKILLS PASSPORT என்ற பிரிவில் தொல்லியல்துறையில் தனது பணியைத் தொடர விரும்புபவர்களுக்கான தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்லியல்துறையில் எந்தப் பணி செய்ய விரும்புகிறார்களோ அந்தப் பணியைச் செய்யத் தேவையான திறன்கள் எவை? அவற்றை எப்படிப் பெறுவது, வளர்த்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. நீண்ட காலப் பணிகளினால் அனுபவங்கள் கிடைக்கும் என்றாலும் அந்த அனுபவங்கள் தொல்லியல் பணிக்குத் தேவையான அனுபவங்களாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால், இத்தகைய வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ஒருவர் தொல்லியல்துறையில் ஈடுபடுவதற்குத் தேவையான திறனைத் தெரிவு செய்து கொள்ள இந்த THE SKILLS PASSPORT உதவுகிறது. 
ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் இணையதளத்தில் உள்ள TEACHING 
SKILLS  என்ற பிரிவில் தொல்லியல்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைப்பது முக்கியமானதாக உள்ளது. ஏற்கெனவே செய்த பணிகளில் இருந்து கிடைத்த திறன்கள், தன்னார்வத்துடன் செய்த பணிகள், பொழுதுபோக்குகள், ஆர்வத்துடன் ஈடுபட்டவை என எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவற்றில் கிடைத்த திறன்களை தற்போதைய பணிக்குப் பயன்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். இன்னும் சொல்லப் போனால், தொல்லியல்துறை சார்ந்த பணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருப்பது, முதலுதவி செய்வதற்கான பயிற்சி பெற்றிருப்பது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருப்பது ஆகியவை கூட தேவைப்படுகின்றன. இவ்வாறு தொல்லியல்துறை சார்ந்த பணிகளுக்கான திறன்களைப் பற்றிய முழுமையான தெளிவை இந்த ஆர்க்கியாலஜி ஸ்கில்ஸ் பாஸ்போர்ட் இணையதளம் தருகிறது. 
தொல்லியல்துறையில் ஆராய்ச்சிகள் நிறைய உள்ளன. ஆனால் இதைப் பற்றி படிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இத்துறையில் விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கூறிய இணையதளங்களுக்குச் சென்று தேவையான விவரங்களை அறிந்து கொள்வது நல்லது. தொல்லியல்துறை சார்ந்த பணிகளில் சேர்வதற்குத் தேவையான தகுதித் தேர்வுகளை எழுத வேண்டும். இது தொடர்பாக அவர்கள் ஏதாவது NPTEL கோர்ஸ் ஒன்றினைச் செய்தால் உயர்கல்விக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
குறிப்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் துறைசார்ந்த திறமையான மாணவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் ஒருதுறையில் ஏதேனும் புதிய முயற்சிகளோ, சாதனைகளோ செய்யப்பட்டால் அத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே அவற்றைத் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் மட்டுமே அது தொடர்பான படிப்புகளையும் படித்திருப்பார்கள். அத்தகைய ஆர்வமுள்ள மாணவர்களால் மட்டுமே எந்தவொரு பணியிலும் சிறப்பாக ஈடுபட முடியும். எனவே துறைசார்ந்த ஆர்வத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும். 
வேலை கிடைக்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்கள் முயற்சியில் இறங்கினால் அந்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிவடையும். 
ஏனெனில் மாணவர்களின் ஆர்வத்தை எளிதில் கண்டறியும் அறிவும் முதிர்ச்சியும் இத்துறை சார்ந்த வல்லுநர்களுக்கு இருப்பதால், மாணவர்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், உலகின் தலைசிறந்த தொல்லியல்துறை ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபட முடியும். 
துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அருங்காட்சியகங்களில் ஆவணப்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது. நமது பள்ளிகளும் கல்லூரிகளும் இத்துறையினை ஆழமாகப் புரிந்து கொள்ள வில்லை. உதாரணமாக தமிழகத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்கள் மிக அதிக அளவில் உள்ளன. நாம் கண்டுபிடித்தவை மிகவும் குறைவு. நாம் கண்டுபிடிக்க வேண்டிய தகவல்கள் பாரம்பரியச் சின்னங்களில் மறைந்துள்ளன. நாம் ஒருமுகப்படுத்தி ஆர்வத்துடன் தேடினால் நம்மால் எண்ணற்ற அதிசயங்களை இத்துறையில் நிகழ்த்த முடியும். தொல்லியல் வரலாறு என்பது சமூகத்தின் மாற்றங்களையும் சமூகங்களின் வளர்ச்சிகளையும் பண்டைய கால மனிதர்களின் வாழ்வியல்முறைகளை ஆராய்வதாகும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி அதன் மூலமாக உலகில் ஒன்றைச் சாதித்தோம் என்ற மனநிறைவு ஏற்படும். இதுபோன்ற முயற்சிகளில் மாணவர்கள் தங்களை ஒருமுகப்படுத்தி அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். அப்போது பணம் என்பது தானாக வந்து சேரும். பணத்துக்காக இத்துறையில் ஈடுபடக் கூடாது.
பல மேலைநாடுகளில் அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதை மிகப்பெருமையாக நினைக்கிறார்கள். அங்குள்ள அருங்காட்சியகங்களில் அவ்வாறு கிடைக்கக் கூடிய சான்றுகளை ஆவணப்படுத்தி, அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, மேன்மேலும் இதுபோன்ற ஆராய்ச்சிகளை உருவாக்கவும் அந்த அருங்காட்சியகங்களைப் பராமரிக்கவும் அதில் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக அந்நகருக்கு அப்பாலுள்ள மனிதர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து அந்த அருங்காட்சியகங்களைப் பார்க்கிறார்கள். எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்து அருங்காட்சியகங்களை காட்டுகிறார்கள். அதன் மூலம் மாணவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு அத்துறையில் ஆர்வம் கொள்வது மேலைநாடுகளில் ஓர் இயல்பான நிகழ்வாக உள்ளது. நமதுநாட்டில் இதுபோன்ற அருங்காட்சியகங்களின் அமைப்பு மிகக் குறைவாக உள்ளது. 
நேஷனல் ஜியாகரபி உலகின் தலைசிறந்த பத்து அருங்காட்சியகங்களைத் தர வரிசைப் படுத்தி உள்ளது. அவற்றில் ஒன்று ஸ்மித் சோனியன் என்ற உலகின் மிகப் பெரிய ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகங்கள். ஸ்மித் சோனியன் வாஷிங்டன் டிசியில் உள்ளது. இதில் 19 மியூசியங்களும், கலைக்காட்சிக் கூடங்களும் உள்ளன. அவை தவிர நேஷனல் ஜுவாலஜிகல் பார்க் இங்கு உள்ளது. இவற்றில் ஏறத்தாழ 137 மில்லியன் அருங்காட்சிப் பொருள்கள் உள்ளன. அவை அமெரிக்காவைப் பற்றிய முழுமையான தகவல்களை அளிக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகத் தேவைப்படும். ஒரு நிமிஷத்துக்கு ஒரு பொருளைப் பார்த்தாலும் பத்து ஆண்டுகளில் 10 சதவீதம் பொருள்களையே பார்க்க முடியும். இதில் முக்கியமாக கவனத்தைக் கவர்பவை ஆதிப் பெண்களின் உடைகள், ரூபி ரெட் சிலிப்பர்ஸ், ஜெம் ஹால், நேச்சுரல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி, ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்த முதல் விமானம் (1903), அப்பல்லோ 11 விண்கலம் ஆகியவை ஆகும். 

Le Louvre அருங்காட்சியகம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசரின் அரண்மனையாக இருந்தது.
லியானார்டோ டாவின்சியின் மோனலிசா ஓவியம் இங்கு உள்ளது. இது உலகிலேயே மிகப் பெரிய ஆர்ட் மியூசியம் ஆகும். 38 ஆயிரம் கலைப்பொருட்கள் உள்ளன. நகரத்தின் நடுவில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இதனுடைய பரப்பளவு 72, 735 சதுர மீட்டர். ஒரு வருஷத்துக்கு 10. 2 மில்லியன் மக்கள் பார்க்க வருகிறார்கள். 12 - 13 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1793 - ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது. முதலில் 537 வண்ணப் படங்களுடன் தொடங்கப்பட்டது. அரச குடும்பத்தினருக்கு, சர்ச்களுக்குச் சொந்தமான பொருள்கள் முதலில் இருந்தன. 1796 முதல் 1801 வரை கட்டட வடிவமைப்பின் காரணமாக மூடப்பட்டது. நெப்போலியன் மன்னராக இருந்தபோது அவர் கைப்பற்றிய பொருள்களை இங்கு கொண்டு வந்து காட்சிக்கு வைத்தார். 
THE State Hermitage, St. Petersburg, Russia ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய மியூசியம். 2,33,345 சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. மேற்கு ஐரோப்பிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அருங்காட்சியகம் நான்கு கட்டடங்களைக் கொண்டது. 120 அறைகள் உள்ளன. மத்திய காலம் முதல் நவீன காலம் வரையிலான கட்டட வடிவமைப்புகளைக் கொண்டது இந்த மியூசியம். 
1764 ஆம் ஆண்டு கேத்தரின் என்ற அரசியால் உருவாக்கப்பட்டது. அவர் பெர்லினிலிருந்து 255 பெயிண்டிங்ûஸ வாங்கி இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற ஓவியர்களான டாவின்ஸி, பிகாஸோ உள்ளிட்ட பல ஓவியர்களின் ஓவியங்கள் இங்குள்ளன. இரண்டாம் நிக்கோலஸ் அரசனின் தனிப்பட்ட சேகரிப்புகள் பெயிண்டிங்ஸ், டிராயிங்ஸ் உள்ளன. அவன் பட்டம் சூட்டப்படும் போது அதற்காக உருவாக்கப்பட்ட மெடல்களும் இங்குள்ளன. 10, 13653 ஓவியங்கள் இங்கு உள்ளன. 11, 25, 623 நாணயவியல் பொருள்கள் உள்ளன. 1852 - ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com