புத்திசாலித்தனம்... வாய்ப்புகள்... வெற்றி!

எந்தவொரு மனிதனும் மற்றவர்களைக் கீழே இழுப்பதன் மூலமாக ஒருபோதும் உயர்ந்ததில்லை
புத்திசாலித்தனம்... வாய்ப்புகள்... வெற்றி!

எந்தவொரு மனிதனும் மற்றவர்களைக் கீழே இழுப்பதன் மூலமாக ஒருபோதும் உயர்ந்ததில்லை
- ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் 
பத்து ஆண்டுகளுக்கு முன், அவ்வாண்டிற்கான இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது முதன்மைத் தேர்வை எழுதிவிட்டு, நேர்காணலையும் முடித்துவிட்டு தனக்கு இந்திய ஆட்சிப் பணி கிடைத்து
விடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த இளைஞர் ஒருவருக்கு தரப்பட்டியலைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. அகில இந்திய அளவில் முதல் இருபத்தைந்து இடத்திற்குள் அவர் வந்திருந்தாலும் அவருக்கான இட ஒதுக்கீடு வகைமையின்படி அவருக்கு இந்திய காவல் பணியே கிடைக்கும் என்கிற நிலை. 
வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள் பொதுவாகவே தற்காலிக வீழ்ச்சி, அதிர்ச்சிகளால் எப்போதுமே துவண்டு போவதில்லை. நம் இளைஞரும் அப்படித்தான். அந்த வருட தேர்வு முடிவுகளின்படி அவருக்கு கிடைத்த அந்த நல்ல வாய்ப்பை... இந்திய காவல்பணி பணியை நிராகரித்துவிட்டு அடுத்த ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணித் தேர்வுக்குத் தன்னை ஆயத்தப்படுத்தத் தொடங்கினார். மறுபடியும் தேர்வு எழுதியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், பேரதிர்ச்சி உங்களுக்கும் எனக்கும்தான். காரணம், இம்முறை எழுதிய தேர்வில் முதல் நிலையிலேயே அவர் தேர்ச்சி பெறவில்லை. பின்னர், அதே இளைஞர் அவரது நான்காவது முயற்சியில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து இந்திய குடிமைப் பணி அதிகாரியானார். வெற்றி, தோல்விகளுடன் திருப்புமுனைகள் வாழ்க்கைப் பாடத்தில் பிரதானமானவை.
ஒவ்வொரு துறையிலும் பெரிதாக ஏதாவது சாதித்தவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெரும்பாலானோர் அவர்களது பயணத்தை அவர்கள் இன்றிருக்கும் துறையை, நிலையை நோக்கி தொடங்கியிருக்க மாட்டார்கள். இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு உழைத்து குறிப்பிட்ட அந்நிலையை அடைந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. 
"உங்களது இந்த ஒட்டுமொத்த பயணத்திலும் திருப்புமுனையாக அமைந்த ஒரு விஷயம் என்று எதை குறிப்பிடுவீர்கள்?'' என்று தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினியிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி சொல்கிறார்:" "இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்திருந்தாலும் ஒரு ஹீரோ ஆவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. பாலசந்தர்தான் என்னை அடையாளம் கண்டு கொண்டார். அப்போது எனக்கு தமிழ் கூட தெரியாது. அவர்தான் என்னிடம், "நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கே கொண்டு செல்கிறேன் பார்'' என்றார். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனாக என்னை உருவாக்க அவர் விரும்பினார். நான் ஒரு ஹீரோ ஆவேன் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை. என் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் அவர்தான். ஹீரோவாக எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கலைஞானம். அதிர்ஷ்டவசமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமுதல், அந்தத் திசையிலேயே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது'' என்று மறைக்காமல் உண்மையைப் பதிவு செய்திருக்கிறார். 
பிரியங்கா சோப்ரா - இன்று உலகப் பிரபலம் ஆகியுள்ள இவர் ஓர் இரவில் இந்த இடத்தை அடைந்திடவில்லை. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவத் தம்பதிக்கு மகளாகப் பிறந்து, தனது குழந்தைப்பருவத்தை பல மாநிலங்களில் கழித்தவர் பிரியங்கா. ஓர் என்ஜினியராக அல்லது மனநல ஆலோசகராக ஆகவேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்திருக்கிறது. இருப்பினும் ஒரு நடிகராக ஆவார் என அவர் நினைத்ததில்லை.
"நான் விதியை நம்புகிறேன். அதனுடன் கடுமையான உழைப்பும் இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன். நான் ஓர் என்ஜினியர் ஆக வேண்டும் என்று என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் என் அம்மாவும் என் சகோதரனும் என்னுடைய புகைப்படத்தை "மிஸ் இந்தியா' போட்டிக்கு அனுப்பி வைத்தனர். எனக்கு அது பற்றி தெரியாது. ஆனால் அதுதான் விதி அல்லவா?'' என்று பிரியங்கா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார். 
மார்லன் பிராண்டோ, அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் ஏப்ரல்-3-1924 - இல் பிறந்து, ஜூலை-1-2004- இல் மறைந்த இவர் "த காட்ஃபாதர்', "அப்போகலிப்ஸ் நவ்', "ஆன் த வாட்டர் பிரண்ட்' உட்பட பல படங்களில் நடித்து இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். இரு தடவை ஆஸ்கார் விருதினை வென்ற இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கினார். அவர் இறக்கும் போது ஒரு மிகப்பெரிய எஸ்டேட்டை விட்டுச் சென்றிருக்கிறார். அதன் மதிப்பு 21.6 மில்லியன் டாலர். பிராண்டோவின் அந்த எஸ்டேட் இன்றும் வருடத்திற்கு 9 மில்லியன் டாலர் வருமானமாகப் பெற்றுத் தருகிறது என்று போர்பஸ் நிறுவனம் நமக்கு ஆதாரத்துடன் செய்தி சொல்கிறது. இறந்த பிறகும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவரான இவர், இப்படியொரு வளர்ச்சிக்கு... தான் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு உழைக்கவில்லை என்பதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அப்படியென்றால் திட்டமிடல், உழைப்பு, புத்திசாலித்தனம் என்பனவற்றுடன் கூடவே வேறு முக்கிய காரணிகளும் ஒரு மனிதரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பது தெரிய வருகிறது. 
-கே. பி. மாரிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com