லட்சத்தில் முதலீடு...கோடியில் வருமானம்!
By DIN | Published On : 21st January 2020 12:32 PM | Last Updated : 21st January 2020 12:32 PM | அ+அ அ- |

உணவு விடுதிகளுக்குச் சென்று விருப்பமான உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்த விஷயம். ஓர் உணவகத்தில் கிடைக்கும் குறிப்பிட்ட ஒரு உணவு வகைக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிட்டு வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதே போல் உணவு வகை சரியில்லை என்றால் அந்த உணவகம் சரியில்லை என நிராகரித்து விட்டு வேறு உணவகத்துக்குச் செல்லும் பலரையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி நண்பர்கள் இருவர், தங்கள் கல்லூரி கேண்டீனில் குடித்த மில்ஷேக் குறைபாட்டால், நல்ல குளிர்பானம் தயாரிக்க வேண்டும் என்று சிந்தித்து வெற்றியை ஈட்டியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த நிஷாந்த்திரிபாதி மற்றும் அனில் பரேமல் என்ற இரண்டு இளைஞர்கள்தான் அவர்கள். 2008 -ஆம் வருடம் கல்லூரி காலத்தில் ரூம் மேட்களாக இருந்த இருவரும், கல்லூரி வளாகத்திலிருந்த கேண்டீனில் மில்க் ஷேக் குடித்திருக்கிறார்கள். அப்போது அந்த பானம் குடிப்பதற்கு தகுதியில்லாமல் இருந்திருக்கிறது. இரண்டு இளைஞர்களுக்குமே அப்போது நல்ல தரமான மில்க் ஷேக்கை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை தோன்றியிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்ற அவர்களுக்கு அப்போது வாய்ப்பில்லை. இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்ட பின்பும் கூட தரமான மில்க் ஷேக் குறித்த அவர்களின் எண்ணம் என்னவோ அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
துபாயில் வேலை செய்து வந்த அனிலை 2015 -ஆம் ஆண்டு திரிபாதி சந்தித்த போதுதான் அவர்களின் மில்க்ஷேக் கனவிற்கு மீண்டும் உயிர்வந்துள்ளது. அங்குள்ள சில கடைகளில் அவர்கள் குடித்த மில்க்ஷேக்கின் சுவை அவர்களுக்கு நாமும் தரமான மில்க்ஷேக் தயாரித்து விற்பனை செய்தால் என்ன? என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. இதையடுத்து இருவரும் இணைந்து 2016- இல் முதல் கட்டமாக பத்து லட்சம் ரூபாயைக் கொண்டு Shake It Off என்ற மில்க்ஷேக் பிராண்டை தொடங்கினர்.
முதன்முதலில் ஒரு விற்பனை நிலையத்துடன் தொடங்கிய இந்த நிறுவனம், சென்னை, டில்லி என தனது கிளைகளைப் பரப்பி பல விற்பனை நிலையங்களுடன் விரிவடைந்துள்ளது. மேலும் ஹைதராபாத், புனே, நொய்டா போன்ற இடங்களிலிலும் தங்களுடைய கிளையை உருவாக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அமைதியான, வண்ணமயமான பின்னணியில், கடந்த காலத்தை நினைவு படுத்தும் போர்ட்கேம்களை கொண்ட இடமாக தங்கள் விற்பனை மையங்களை அமைப்பது வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது எனக் கூறும் அவர்கள், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத் தேர்வையும் மனதில் கொண்டு எங்களது தயாரிப்புகள் அமைந்துள்ளன என்கின்றனர். தொடக்கத்தில் 2 ஊழியர்கள் என்ற நிலையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 40 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 50,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த நிதியாண்டில் 3,00,000 வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர் திரிபாதி மற்றும் அனில்.
"மிகப்பெரிய உணவுச் சந்தையில் போட்டி என்பது சாதாரணமானதல்ல. மக்களின் மனமறிந்து தரமான பொருள்களைச் சந்தைப்படுத்தினால் மட்டுமே இதில் காலூன்ற முடியும் என்பதை உணர்ந்து மக்களின் மனநிலையை நாள்தோறும் கற்று மாற்றங்களைப் புகுத்தி வருகிறோம்'' என கூறும் இருவரும், ஆரம்ப காலத்தில் நிறுவனத்திற்காக கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் பிராண்டை பிரபலப்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.
நிறுவனம் மேலும் வளர்ச்சி பெற பிரான்சைஸ் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம் என கூறும் இருவரின் லட்சியமும், தங்களின் மில்க்ஷேக்கை எல்லாரும் அருந்தும் வண்ணம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே.
- வி.குமாரமுருகன்