வாங்க இங்கிலீஷ் பேசலாம் 226

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 226

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் ஒரு போக்குவரத்துக் காவலரிடம் உதவி பெற்று அவர்களின் வாகனத்தில் புரொபஸரின் நண்பர் வீட்டுக்குப் பயணிக்கிறார்கள். அவர்கள் உரையாடும் போது panic என்ற சொல்லின் வரலாற்றைப் பற்றி புரொபஸரிடம் கேட்கிறார்கள். அவர் சொல்லத் தொடங்குகிறார்.
புரொபஸர்: Pan என்றொரு கிரேக்கக் கடவுள் இருந்தார். அவர் ஒரு காதல் மன்னன். குறும்புக்காரர். அவர் விசித்திரமாக ஒலிகளை எழுப்பி மக்களை அச்சுறுத்தி விரட்டுவதிலும் வல்லவர். இப்படித் தான் pan என்பதில் இருந்து panic எனும் சொல் தோன்றி அது fear, fright, terror ஆகிய அர்த்தங்களை இது பெற்றது. இது மற்றொரு விசயத்தையும் நாம கவனிக்கணும்.
காவலர்: என்ன சார்?
புரொபஸர்: பயம் என்றால் fear. ஆனால் மிகையான ஆதாரமற்ற பயமே panic. சிலருக்கு மன வியாதி காரணமாகவும் மிகையான பயம் ஏற்படும். தன்னை யாரோ கொல்ல வருகிறார்கள்; தன்னை பிறர் வெறுக்கிறார்கள்; தன் மீது அடுத்தவர்களுக்கு சந்தேகம் என்றெல்லாம் நினைக்கிறவர்கள் உண்டு. இவர்களுக்கு panic 
attack ஏற்படும். எப்படி pan எனும் கிரேக்க கடவுள் இல்லாத ஒன்றைக் கொண்டு அச்சுறுத்தி தன் எதிரிகளிடத்து சேட்டை செய்தாரோ அப்படியே இன்று நவீன உலகில் பல விசயங்களின் மீது நமக்கு அச்சம் ஏற்படுகிறது. அது panic என அறியப்படுகிறது.
காவலர்: சார் உங்க நண்பரோட வீடு வந்திருச்சு.
(புரொபஸரும் கணேஷும் ஜுலியும் இறங்குகிறார்கள்)
காவலர்: உங்களோட பேசினது சுவாரஸ்யமா இருந்துது. நிறைய கத்துக்கிட்டேன். சொல்லப் போனா உங்களை விடவே மனசில்ல.
ஜூலி: அரெஸ்ட் பண்ணி கூடவே வச்சுக்கலாமே
காவலர்: ஹா... ஹா... அதெல்லாம் வேண்டாம். வயித்தில என் பையன் நீங்க சொன்னதெல்லாம் கேட்டு கத்துக்கிட்டிருப்பான் இல்ல.
புரொபஸர்: பெற்றோர்கள் நிறையப் படிக்கணும். பிள்ளைங்க படிக்கும் முதல் புத்தகமே தங்களோட பெற்றோர்கள் தானே?
கணேஷ்: இதை ஆட்டோ பின்னாடி எழுதலாம் சார்.
ஜூலி: இந்த போலீஸ் ஜீப் பின்னாடி கூட எழுதலாம்.
புரொபஸர்: ஒண்ணும் வேணாம். நாம கிளம்புவோம். பார்க்கலாம்மா.
காவலர்: சரிங்க சார்.
(அவர்கள் விஜய பரகேசரியின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வீட்டின் வாயிற்கதவு அருகில் ஒரு காவலாளி பழைய மன்னர் காலத்து காவலாளி போல கேடயம் அணிந்து பொம்மை வேலுடன் நிற்கிறான்)
கணேஷ்: சார்... நாம என்ன நாடக கம்பனிக்கு வந்துட்டோமா?
புரொபஸர்: இல்லடா... இது தான் விஜய பரகேசரியோட வீடு.
காவலாளி நின்ற நிலையில் தூங்கி வழிவது பக்கத்தில் வந்தால் தெரிகிறது.
ஜூலி: He is snoring.
கணேஷ்: அதென்ன ஸ்னோரிங்?
ஜூலி: குறட்டை விடுவது. 
(அவர்களைக் கவனிக்கும் காவலாளி தன் தலைக்கு மேல் தொங்கும் மணியை முழக்குகிறார். அவர் தொடர்ந்து தூங்குகிறார்.)
ஜூலி: இவர் தூங்குறதா தெரியல. தூங்குற மாதிரி நடிக்கிறார்.
காவலாளி கண்ணை மூடிய நிலையில்: Yes the potter sleeps soundly for no one would steal clay.
ஜுலி: ஹா... ஹா...
கணேஷ்: என்ன இந்த செக்யூரிட்டி சொல்றார்?
ஜூலி: அவர் சொன்னது தூக்கம் பற்றின ஒரு இந்தியப் பழமொழி. ஒரு பொற்கொல்லனால் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஆனால் பானை செய்யக்கூடியவர் நன்றாகத் தூங்குவார்; ஏனென்றால் அவர் பயன்படுத்தும் களிமண்ணை யாரும் திருடப் போவதில்லை.
கணேஷ்: அட செம. அப்போ இந்த வீட்டுக்குள்ள இருக்கிறது களிமண்ணா.
காவலாளி: மன்னியுங்கள் நண்பரே... நான் அவ்வாறு சொல்லவில்லை. பழமொழியை ஆராய்வது ஒரு ராஜ-விசுவாசமிக்க குடிமகனுக்கு நல்லதல்ல. By the by நான் செக்யூரிட்டி அல்ல.
கணேஷ்: பிறகு?
காவலாளி: நான் மன்னர் விஜய பரகேசரியின் மெய்காவல் படையின் உபதளபதி. அப்படித் தான் சொல்லச் சொல்லியிருக்கிறார் மன்னர்.
புரொபஸர்: வெரி குட்.
கணேஷ்: சார், இவருக்கு உண்மையைச் சொல்லி விளங்க வைக்கக் கூடாதா?
புரொபஸர்: If bad luck is asleep you must not awaken it.
கணேஷ்: அப்படீன்னா?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com