பிஸ்கெட் குவளையில் தேநீர்!

​மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆர்.எஸ். பதி டீக்கடையில் வித்தியாசமான முறையில் டீ மற்றும் காபி வழங்கப்படுகிறது.
பிஸ்கெட் குவளையில் தேநீர்!


மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆர்.எஸ். பதி டீக்கடையில் வித்தியாசமான முறையில் டீ மற்றும் காபி வழங்கப்படுகிறது. இதில் என்ன வித்தியாசம் என்றால் நீங்கள் டீ சாப்பிடும் குவளையை திருப்பித் தர வேண்டாம்; மாறாக அதை நீங்களே சாப்பிட்டு விடலாம் என்பது தான் சுவாரஸ்யம்.

நெகிழி ஒழிப்புக்காக பலரும் பலவித முயற்சிகளில் ஈடுபட்டு வரும்போது அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நிறுவன உரிமையாளர் புதுமையாக யோசித்து எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.

"அது என்ன டீ சாப்பிடும் குவளையைத் திருப்பித் தரவும் வேண்டாம்... தூக்கி எறியவும் வேண்டாம்... குப்பையில் போட வேண்டாம்...

டீ சாப்பிடும் போது பிஸ்கெட் சாப்பிடுவது போல அப்படியே சாப்பிட்டு விடலாம்' என்கிறார்களே... அது என்ன புதிய கண்டுபிடிப்பு  என்பதை அறிவதற்காக டீக்கடை உரிமையாளர் விவேக் சபாபதியிடம் பேசினோம். அவர் நம்மிடம் 
கூறியது:

""எங்களது ஆர்.எஸ்.பதி தைலம் நிறுவனம் 1909--ஆம் ஆண்டு எங்களது கொள்ளுத்தாத்தா டாக்டர் சபாபதியால் தொடங்கப்பட்டது. எங்கள் தாத்தா, அப்பா, நான் அடுத்து என் மகன் என 5 தலைமுறைகளைக் கண்ட நிறுவனம் இது. 

சுமார் 110 ஆண்டுகளைக் கடந்து இந்த நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பதி நீலகிரி டீத்தூள் நிறுவனத்தை ஏற்படுத்தினோம். இந்த டீத்தூளைப் பிரபலப்படுத்துவதற்காக அலுவலகத்திற்குக் கீழேயே ஒரு  டீக்கடையை உருவாக்கினோம்.

இந்த டீ கடையில் ஆர்.எஸ். பதி டீ நல்ல முறையில் வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டு வந்தது.இந்த நிலையில் அரசாங்கம் நெகிழி ஒழிப்புப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியது. அப்போது டீ குடிக்கும் முறையிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய சூழல் உருவானது. கண்ணாடி கிளாசில் டீ குடிப்பவர்களுக்கு அது சுகாதாரமாக கழுவப்பட்டுள்ளதா என்ற ஐயம் ஏற்படுகிறது. காகித டம்ளரில் டீ குடிப்பவர்களுக்கு அதில் மெழுகு தடவப்பட்டுள்ளதா என்ற ஐயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மண் குவளையில் தேநீர் குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினோம்.

இதற்காக டீ விலை பத்து ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒருவர் டீ குடிக்கும் மண்குவளையை ஒருமுறை பயன்படுத்தியவுடன் உடைத்துப் போட்டுவிடுவோம். அல்லது வாடிக்கையாளர்களே டீ குடித்துவிட்டு உடைத்து விடுவார்கள். இது சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் மண்குவளைக் கழிவுகள் ஒருபுறம் சேர்ந்துகொண்டு வந்தது. இந்தக் கழிவுகளால் உரிமையாளர்களுக்கும் பயனில்லை; வாடிக்கையாளர்களுக்கும் பயனில்லை.

கொடுக்கும் காசுக்கு வாடிக்கையாளர்களும் பயனடையும் வகையில் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது எங்கள் சிந்தனையில் உருவானது தான் "பிஸ்கட் குவளை'யில் டீ, காபி வழங்கும் முறை.

இதில் தேநீரைக் குடித்தவுடன் அந்தக் குவளையை சாப்பிட்டு விடலாம். இதன் மூலம் 3 பிஸ்கட் சாப்பிட்டு டீ குடித்த திருப்தி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறது.


ஒரு டீ 20 ரூபாய். சுமார் 60 மில்லி கிராம் அளவு கொடுக்கிறோம். எவ்வளவு சூடாக சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு சூடாக இதில் டீ விநியோகம் செய்யலாம். சுமார் 10 நிமிடங்கள் வரை குவளை தாங்கும். அதற்குள் டீயை குடித்துவிடவேண்டும். இல்லையென்றால் குவளை நெகிழ்ச்சியடைந்து விடும். கோன் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது கோனையும் சேர்த்து சாப்பிடுவது போல... டீ சாப்பிடும் போது டீ குவளையும் சேர்ந்து உணவாகி விடுகிறது. குப்பைகள் சேராததால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையாமல் காப்பாற்றப்படுகிறது.

லாப--நஷ்டம் என்று கணக்குப் பார்த்தால் இதைச் செய்ய முடியாது.

ஹைதராபாத்தில் உள்ள எட்கோ நிறுவனத்திடமிருந்து பிஸ்கட் குவளைகளை விலைக்கு வாங்குகிறோம். பொதுமுடக்கம் காரணமாக பிஸ்கெட் குவளைகள் தேவையான அளவுக்கு வருவதில்லை. அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அதற்கேற்ப பொருள் வரத்து இல்லாததால் சில சமயங்களில் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. நீண்ட தூரம் லாரிகளில் பிஸ்கெட் குவளைகள் கொண்டு வரப்படுவதால் வரும் வழியில் பாதி உடைந்து விடுகின்றன. உடைந்த குவளையில் தேநீர் பரிமாற முடியாது. இதுபோன்ற நஷ்டங்கள் ஏற்படுவதால் பிஸ்கெட் குவளைகளை உள்ளூரிலேயே உருவாக்க முடியுமா என்றும் யோசித்து வருகிறோம். 

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் புதுப் புது வாடிக்கையாளர்கள் உருவாகிக் கொண்டிருப்பார்கள் என்பதனால், எங்கள் புதிய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பிஸ்கெட் குவளை தேநீர்க் கடைகளை மதுரையில்  மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பது எங்களது எதிர்காலக் குறிக்கோள்'' என்கிறார் விவேக் சபாபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com