பிரசித்தி பெற்ற கேமரா கண்காட்சி!

நான் ஒரு கேமரா பிரியன். புகைப்படங்கள் எடுப்பது எனது முக்கிய பொழுதுபோக்கு. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களின் போது பாஸ்போர்ட் எவ்வளவு முக்கியமோ கேமராவும் எனக்கு அவ்வளவு முக்கியம்.
பிரசித்தி பெற்ற கேமரா கண்காட்சி!


நான் ஒரு கேமரா பிரியன். புகைப்படங்கள் எடுப்பது எனது முக்கிய பொழுதுபோக்கு. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களின் போது பாஸ்போர்ட் எவ்வளவு முக்கியமோ கேமராவும் எனக்கு அவ்வளவு முக்கியம். என் கேமராவில் என் தொழில் தொடர்பான பல்லாயிரக்கணக்கான படங்கள் எடுத்திருக்கிறேன். புகைப்படங்களை எடுப்பதற்காக என் வாழ்நாளில் இதுவரையில் மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு ஒரு பெரும் தொகையை செலவு செய்திருப்பேன். உடலையும், மனதையும் பாதிக்கும் மற்ற வீணான செலவுகள் செய்யும் பழக்கம் இல்லாததால் அறிவு, தொழில், அறிவியல் ஆகியவை தொடர்பான கேமராவுக்கான செலவை நான் பெரிதாக நினைப்பதில்லை. என்னைப் பொருத்தவரை அது மகிழ்ச்சியான செலவு.

உலகின் விலையுயர்ந்த கேமராக்களை நான் கையாண்டு பார்த்திருக்கிறேன். கேமரா பற்றிப் பேசும்போது நான் மறக்காமல் ஜெர்மனியை குறிப்பிட்டாக வேண்டும். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பல கண்காட்சிகளில் இரண்டு கண்காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. புகைப்படக் கண்காட்சி ஒன்று. ஒயின் கண்காட்சி இன்னொன்று. இரண்டுமே எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றன. பழைய பாக்ஸ் கேமராவில் தொடங்கி இன்று டிஜிட்டல் கேமரா வரை புகைப்படக் கலையில் நவீன தொழில்நுட்பம் செய்திருக்கும் சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. லைகா, ஹாசல் பிளேட், ரோலி ஃபிலக்ஸ் ஆகிய மூன்றும் சர்வதேசச் சந்தையில் ஜெர்மனியின் முகவரியை பளிச்சென்று எழுதி வைப்பவை. 

உலகப் புகழ் பெற்ற மூன்று விதமான கேமராக்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றை வெற்றிகரமாக விற்பனை செய்தாலே இத்துறையில் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்ற திருப்தியில் ஜெர்மனி சும்மா இருந்தாலும் யாரும் ஏன் என்று கேட்கப் போவதில்லை. ஆனால் ஜெர்மனியே ஆண்டுதோறும் ஒரு மாபெரும் புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

புகைப்பட கண்காட்சி என்றால் ஏதோ புகைப்படங்களின் கண்காட்சி என்று எண்ணிவிடக்கூடாது. புகைப்பட கலையில் எத்தனை அம்சங்கள் இருக்க முடியுமோ அத்தனை அம்சங்களின் ஒட்டுமொத்த கண்காட்சி அது. "போட்டோ கினா' என்று அழைக்கப்படும் அந்தக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொலோன் நகரில் நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. விதவிதமான கேமராக்கள், அவை தொடர்பான ஃப்ளாஷ் உபகரணங்கள், போட்டோ பேப்பர், வகைவகையான கேமரா பைகள், ஸ்டாண்டுகள்... இப்படி முடியாத பட்டியல் அது. 

ஒவ்வொரு நாடும் தனது ஸ்டாலில் தன் கேமராக்களை "டிஸ்பிளே‘ செய்து இன்னின்ன வகையில் இந்த கேமரா சிறப்பானது என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும். "பாருங்கள்... எங்கள் நாட்டில் கேமரா தொழில் நுட்பத்தில் நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம்' என்று பிரம்மாண்ட அளவில் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும். இவ்வளவும் எங்கே?' கேமரா தயாரிப்பிலும், புகைப்படக் கலையிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்' என்று பெருமிதம் கொள்ளக்கூடிய ஜெர்மனியில்! 

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இங்கேதான்.

நமது கேமராக்களை உலகச் சந்தையில் விற்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதைச் செய்யாமல், மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, "வா... என் மடியில் வந்து கடை விரி' என்று நமக்குப் போட்டியை நாமே உருவாக்கிக் கொள்கிறோமே' என்று ஜெர்மனி பயப்படாதது தான் முதல் பாடம். தனது தயாரிப்புகளின் தரத்தில் அந்நாடு கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான் அந்த அச்சமின்மைக்கு காரணம். 

மேலும், நான்கு நாள் புகைப்படத் திருவிழாவின்போது சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக கேமரா ஆர்வலர்களின் கூட்டம் ஜெர்மனியில் அலைமோதும். வழக்கத்தை விட பலமடங்கு சுறுசுறுப்பாக விமான நிலையம் இயங்கும். ஹோட்டல்களில் தங்க இடம் கிடைப்பது அரிதாகிப்போகும். உலகின் அத்தனை கேமராக்களையும் ஒரே இடத்தில் கண்ணால் பார்ப்பதும், அவற்றை இலவசமாகக் கையாண்டு பார்ப்பதும் எத்தகைய அரிய அனுபவம். 

இந்தக் கண்காட்சிக்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கோடி கோடியாக அன்னியச் செலாவணியை ஜெர்மனிக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். வெளிப்படையான இந்த லாபத்தைத் தவிர கண்ணுக்குப் புலப்படாத கண்ணுக்கு தெரியாத லாபமும் உண்டு. மற்ற நாடுகள் கேமரா புகைப்படத் துறையில் இன்று கண்டுள்ள வளர்ச்சி என்ன என்பதை அந்தந்த நாடுகளுக்கு பணம் செலவு செய்து கொண்டு போய் பார்க்காமல் அதை பார்க்கும் வாய்ப்பு ஜெர்மானியர்களுக்கு கிடைத்துவிடுகிறது.

சர்வதேச சந்தையில் மற்றவர்களுடன் போட்டி போட நாம் எப்படி நம் கேமராக்களின் தரத்தை மேம்படுத்துவது என்பதைத் திட்டமிடவும் முடிகிறது. இக்கண்காட்சியை பார்வையிடும் போதெல்லாம் என் மனதில் சில கேள்விகள் விசுவரூபம் எடுக்கும். நமது ஊட்டியிலும் அசாம் மலைப் பகுதியிலும் விளையும் தேயிலை உலகின் எந்த நாட்டு தேயிலைக்கும் சோடை போனதில்லை என்பது என்கருத்து. நாம் ஏன் ஒரு சர்வதேச தேயிலை கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த கூடாது. தன்னம்பிக்கையோடு மற்ற நாடுகளை அழைத்து இந்திய டீ இணையில்லாத டீ என்று ஏன் சொல்லாமல் சொல்லக்கூடாது. இலங்கை நாடு தன் தேயிலையை மற்ற நாடுகளில் விற்பதற்கு எவ்வளவு விளம்பரம் செய்கிறது? 

மலைவளர் காய்கறிகள், மூலிகைகள் போன்றவற்றில் நாம் யாருக்கும் இரண்டாவது அல்ல. பின் அவற்றை ஜெர்மனி போல தைரியமாக வெளியிட தயங்குகிறோம். வருடத்துக்கு இதுபோன்று 2, 3 சர்வதேசக் கண்காட்சிகளை ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் நடத்தினால் சுற்றுலா வளர்ச்சி சுறுசுறுப்பு அடைவதை யார் தடுக்க முடியும்? 

அதேபோல் ஜெர்மனியின் ஒயின் கண்காட்சி.  

இந்திய ஒயின்கள் இன்னும் உலக அளவில் போய்ச் சேராததற்கு தரம் காரணமில்லை. நமது முயற்சிகளின் தாமதம் தான் காரணம் என்று ஜெர்மனி ஒயின் கண்காட்சி எனக்குப் பாடம் சொல்கிறது. இந்தியத் திராட்சைகளுக்கு என்ன குறைச்சல்? ஆனால் சர்வதேச அரங்குகளில் போய் நிற்கத் தயங்குகிறோம். நம் நாட்டில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் திராட்சை உற்பத்தித் தொழில் வளர்ந்திருக்கிறது; ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் ஒயின் தயாரிப்பு தொழில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது. இது இன்னும் வேகமாக முன்னேறினால் இங்கே திராட்சை விவசாயம் முன்னேறும். கிராமப் பொருளாதாரம் மேம்படும். நவீன விவசாய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். 

முன்னேறிய பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் "ஆட்டோமொபைல்' என்று அழைக்கப்படும் மோட்டார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலில் முன்னணியில் இருக்கின்றன. 

நம் நாட்டின் அம்பாசிடர் கார் உற்பத்திக்குப் பிறகுதான் கொரியாவின் ஹுண்டாய் மற்றும் சில ஜப்பானிய கார் கம்பெனிகள் உற்பத்தியைத் துவக்கின. ஆனால் நம் நாட்டின் கார் தொழில் முன்னேறாமல் அப்படியே இருக்க, இந்த சில நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்களை கார் ஏற்றுமதியில் மட்டும் லாபம் ஈட்டி வருகின்றன. உலகமயமாக்கல் என்றால் ஏதோ அமெரிக்கர்கள் எல்லாவற்றையும் வந்து நம் மீது திணித்து விட்டு போய் விடுவார்கள். 

நம் செல்வம் அனைத்தும் கொள்ளை போய்விடும். நமது உள்ளூர் தொழில் சாகும் என்று மேடை போட்டுப் பேசுகிறோம். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 முதல் 10 கி.மீ. மட்டுமே தந்து வந்த இந்தியக் கார்கள் இப்போது கிட்டத்தட்ட 18 கி.மீ. தரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு சர்வதேச கார்கள் இங்கே நடமாடுவது தான் காரணம் என்பதை மறந்து போகிறோம். 

நாம் நமது வாடிக்கையாளர்களைக் கவராமல் போனால், மற்ற கார்களுக்குள்ளே தான் அவர்களைப் பார்க்க முடியும் என்ற பயம்தான். புதிய டிசைன், புதிய தொழில்நுட்பம், புதிய வசதிகள், சொகுசுகள் என்று கார் தயாரிப்பாளர்களை சிந்திக்க வைத்தன. அதன் விளைவுதான் நமது கார்களில் நாம் இன்று காணும் வியக்கத்தக்க முன்னேற்றம். 

ஜெர்மனியும் உலகப் போரின் வடுக்களை தாங்கிய நாடுதான். ஜப்பானைப் போல தன் நாட்டின் பல பகுதிகளை போரின் விளைவுகளால் இழந்த நாடுதான். மேற்கு ஜெர்மனி என்றும் கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டாகப் பிரிந்து மேற்குப்பகுதி முதலாளித்துவத்தையும், கிழக்குப்பகுதி கம்யூனிசத்தையும் பின்பற்றி நெடுங்காலம் இருந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தது வரலாறு. 

ஆனாலும் போருக்குப் பின்னர் ஜெர்மனி நாட்டு மக்களின் ஆராய்ச்சித் திறன், அயராத உழைப்பு எல்லாம் சேர்ந்து அந்நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயர்த்தியிருக்கிறது. இன்று உலகில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவை எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்து ஒரு சிறப்பு அம்சம் உண்டு. ஜெர்மனியின் தயாரிப்பு என்றால் அந்தப் பொருள் உறுதியாக இருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. 

பென்ஸ் கார், வோல்ஸ்வேகன், உடல்நலம் காக்கும் மருந்துகள், துணிகள் உற்பத்திக்கான அதி நவீன இயந்திரங்கள், துணிகளுக்கு இடப்படும் சாயங்கள், பலதரப்பட்ட நவீன இயந்திரங்கள் என்று ஜெர்மனி நாட்டுத் தயாரிப்புகள் இன்று உலகில் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்கூட ஜெர்மன் நாட்டுத் தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர். ஜெர்மனியில் தயாரான பொருட்களை பயன்படுத்தாத நாடுகள் இன்று உலகில் இல்லை எனலாம்.

எனது ஜெர்மனி பயணங்கள் பல பாடங்களைத் தந்திருந்தாலும் கேமரா கண்காட்சி மற்றும் ஒயின் கண்காட்சிகள் தந்த பாடங்கள் மறக்க முடியாதவை!

 (ராணிமைந்தன் எழுதிய தொழிலதிபர் "ஜெம்' வீரமணியின் "பயணங்கள்-பாடங்கள்' கலைஞன் பதிப்பகம், சென்னை - நூலிலிருந்து) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com