சீன செயலிகளுக்கு தடை பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்தியாவின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஜூன் 28--ஆம் தேதி தடை விதித்தது.
சீன செயலிகளுக்கு தடை பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்தியாவின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஜூன் 28--ஆம் தேதி தடை விதித்தது.

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில், இந்த செயலிகள் தடை நடவடிக்கையும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் இந்த செயலிகளுக்குத் திடீரென தடை விதித்ததால் என்னவாகும் என மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தடை விதிக்கப்பட்டுள்ள இந்த செயலிகள் பிளே ஸ்டோர், ஐஓஎஸ் பதிவிறக்கம் தளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே செல்லிடப்பேசிகளில் பயன்பாட்டில் உள்ள இந்த செயலிகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். இது இந்தியாவில் சட்ட விரோதம் என்றாலும், இதை மீறுபவர்களுக்கு எந்தவித தண்டனையும் அறிவிக்கப்படவில்லை. காரணம், இந்த செயலிகளுக்கு எந்தவித புதிய தொழில்நுட்ப மேம்பாட்டை அளிக்கக் கூடாது என இந்தியாவில் சேவை வழங்கும் மொபைல் நிறுவனங்களையும், இன்டர்நெட் சேவை நிறுவனத்துக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால், இந்த செயலிகளுக்கு புதிதாக அப்டேட் ஏதும் இனி வராது என்பதால், தற்போதைய நிலையிலேயே கேமரா ஸ்கேனர், ஷேர் இட் போன்ற செயலிகளை அப்படியே பயன்படுத்தலாம். மேலும், ஏபிகே வடிவில் பிற தளங்களில் இருந்தும் புதிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வாய்ப்புள்ளது. இவை பாதுகாப்பானதல்ல.

மத்திய அரசு தடை விதித்துள்ள 59 செயலிகளில் டிக்டாக், ஹலோ, லைக், யுகேம் மேக்கப்,விசாட், கியுகியு மியூசிக், செல்ஃபி சிடி போன்ற பொழுது போக்கு செயலிகள்தான் அதிகமாக உள்ளன. இதுபோன்ற செயலிகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு உள்ளது.

அதிலும், டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் மூலம் ஆபாசம், வக்கிரம் போன்றவைதான் அதிகமாக பரவின. இவற்றுக்கு நகரங்களில் மட்டுமன்றி பட்டிதொட்டிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் அடிமையாகினர்.

இதனால் சமூக பிரச்னைகளுக்கு டிக்டாக் செயலி வழிவகுப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி டிக்டாக் விளக்கிக் கொண்டது.

கடந்த ஆண்டில் சுமார் 550 கோடி மணி நேரத்தை இந்தியர்கள் டிக்டாக் செயலியில் விரயம் செய்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இந்தியர்களின் நேரத்தை வீண்டிக்கும் பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில், பல கோடி இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த சீன நிறுவனங்களுக்கு இது பேரிடியாகும். ஒரே நேரத்தில் பல கோடி பேரை இழப்பதால் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சீன செயலிகளுக்கு அமெரிக்கா, இந்தோனேஷியா, மத்திய கிழக்கு நாடுகள் பல ஏற்கெனவே தடை விதித்துவிட்டன. சீனாவும் அமெரிக்காவின் ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர், விக்கிபீடியா போன்றவற்றை பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

இந்த போட்டியில் இந்தியாவும் களமிறங்கி உள்ளது. இதற்கு எதிராக சீன நிறுவனங்கள் பல்வேறு டிஜிட்டல் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடலாம். இதைச் சமாளிக்க இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியாகத் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. சில செயலிகள் மீண்டும் செயல்பட அனுமதி அளித்தாலும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம்.

அதேநேரத்தில், சீன செயலிகளுக்கான மாற்று செயலிகள் தயாரிப்பில் இந்திய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com