வெற்றியாளர்கள்!: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!

1994-இல் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய அறையில் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் என்ற நகரில் பெற்றோரிடம் கடன் வாங்கிய 2.5 இலட்சம் டாலர் முதலீட்டில் இரண்டு ஊழியர்களுடன் ஜெஃப் பெசோஸ் ஒரு புத்தக
வெற்றியாளர்கள்!: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!


1994-இல் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய அறையில் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் என்ற நகரில் பெற்றோரிடம் கடன் வாங்கிய 2.5 இலட்சம் டாலர் முதலீட்டில் இரண்டு ஊழியர்களுடன் ஜெஃப் பெசோஸ் ஒரு புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கினார். அமேசான் இணைய வணிகம் (Dot}com Business) 24 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக 900 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் விஸ்வரூபமாக எடுக்கும் என்பது யாரும் அறியாதது. பெற்றோரிடம் வாங்கிய கடனில் தன் வணிகத்தை தொடங்கிய ஜெஃப் பெசோஸ் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக 150 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளிவிட்டு 2017 முதல் முதலிடத்தில் இருக்கிறார்.

இது எப்படி சாத்தியமானது?

1964-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் பிறந்த அவர் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முறையான கணினி அறிவியல் பட்டமும், அமெரிக்க வணிக பங்குச்சந்தை மையமான வால் ஸ்ட்ரீட்டில் போதிய அனுபவமும் பெற்றார். உலகின் நான்காவது தொழிற்புரட்சியான இணைய வணிகம் பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கப் போகிறது என்பதை அவர் சரியாக கணித்தார். அவரது வணிக முயற்சிகளில் மனைவி மெக்கன்சியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

எண்ணித் துணிக கருமம் என்ற குறள்படி இணைய வணிகம் குறித்து தீவிரமாக ஆராய்ந்த பிறகே இத்துறையில் அவர் இறங்கினார். புதுமையை புகுத்தல், தெளிவாக திட்டமிடல், திறமையானவர்களை தேர்ந்தெடுத்தல், தொலைநோக்கு ஆகியவை அவருக்கு பலமாக அமைந்தன. இணையம் மூலம் முதன்முதலாக புத்தக விற்பனைத் தளம் அமைத்தார். பல்துறை புத்தகங்களின் பட்டியல்கள் இல்லாமையும், அவைகளை எங்கே, எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதிலும் அமெரிக்காவில் புத்தக விற்பனையில் பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். புத்தகம் வாங்குபவர்களிடம் அவர்களுக்குத் தேவையான பல இலட்சம் புத்தகங்கள் பற்றிய தகவல்களை இணையத்தில் அளித்து அவைகளை குறைந்த விலைக்கு வாங்கி விரைவாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து அதன்மூலம் இலாபம் ஈட்டியதே அவரது வணிக முயற்சியில் முதல் படி.

உலகின் முதல் ஆன்லைன் புக்ஸ்டோர் அமேசான் டாட்காம் 1994-இல் உருவானது. நல்ல ஆரம்பமே பயணத்தில் பாதி வெற்றியை உறுதி செய்துவிடும். நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆராய்ந்தபோது உலகின் மிகப்பெரிய நதி அமேசான் நதிதான் என்பதை கண்டறிந்து அதன் பெயரை நிறுவனத்திற்கு வைத்தார். ஆங்கில அகரவரிசையில் முதல் எழுத்தான "A'வில் தொடங்கி கடைசி எழுத்தான "Z'ல் சென்று முடியுமாறு மன்மதன் அம்பைப்போன்ற ஒரு அம்புக்குறி மூலம் இரண்டு எழுத்துக்களையும் கீழ்நோக்கி வளைத்து இணைத்தார். ஆங்கிலத்தில் "A' முதல் "Z' வரையிலான அனைத்துப் பொருள்களையும் அன்புடன் இந்த வணிகத்தில் வாங்கி வழங்க விரும்புகிறோம் என்ற பொருளும் இதன் பெயரில் உணர்த்தப்படுகிறது.

அமேசான் டாட்காம் தொடங்கிய சில மாதங்களிலேயே அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 45 உலக நாடுகளிலும் இருந்து இணையம் மூலமாக புத்தகங்கள் கேட்டு ஆணைகள் வந்து விற்பனை செய்யப்பட்டது. அவர் விற்ற முதல் புத்தகம் கணினி அறிவியல் பற்றியதாகும். ஒரே ஆண்டில் பத்து இலட்சம் புத்தகங்கள் இணையத்தில் ஏற்றப்பட்டு விற்பனை ஆயின. புத்தக வெளியீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மிக அதிக தள்ளுபடியில் அவைகளை வாங்கி குறைந்த விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு நிலையிலும் வாடிக்கையாளர்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப விற்பனை உத்திகளை மேற்கொண்டார். அமேசான் டாட்காம் நிறுவனத்தின் வணிகம் இரண்டாவது ஆண்டிலேயே 15 மில்லியன் டாலர்களை எட்டியது.

வணிகத்தில் முதல் 5 ஆண்டுகள் இலாபத்தை எதிர்பார்க்காமல் வணிகத்தை வளர்ப்பதிலும் வாடிக்கையாளர்களை கவர்வதிலும் தன் கவனத்தை செலுத்தினார். பொருள்களை வாங்குபவர்கள் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து ஒரே க்ளிக்கின் மூலம் அத்தனை பொருட்களையும் மொத்தமாக பணம் செலுத்தி ஆணை வழங்கும் முறை போன்ற பல தொழில்நுட்பங்களை புகுத்தினார். குறைந்த விலைக்கு பொருள்களை வாங்கி விநியோகித்து ஆரம்ப காலத்தில் சிறிய இழப்பைஏற்றுக்கொண்டு தன் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெற்றபின் படிப்படியாக இலாபத்தை அதிகரிக்கலாம் என்ற வணிக நுட்பம் அவருக்கு பலன் அளித்தது.

நுகர்வோர் பொருட்கள் விற்பனை: வெளியில் வாங்குவதைவிட அமேசானில் பொருட்களின் விலை குறைவாக இருந்ததால் மக்கள் இங்கே பொருட்களை வாங்க அதிகமாக திரண்டனர். இசை, உடை, சமையலறை பொருட்கள் என்று மனிதர்களின் தேவைக்கேற்ப அனைத்து பொருட்களையும் தன் நிறுவனக் கிடங்கில் கிடைக்க ஏற்பாடு செய்தார். ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தி பெரிய கிட்டங்கிகளை அமைத்து அவற்றில் பொருட்களை வகைப்படுத்தி பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. கிடங்குகள் ஒவ்வொன்றும் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கத்தைவிட பல மடங்கு பெரியதாக இருக்கும். அங்கே தானியங்கி ரோபோக்கள் முறையில் அடுக்குகள் நகர்ந்து அவற்றில் பொருட்கள் அடுக்கி வைக்கப்படுவதும் அவைகளைப் பிரித்து பேக்கிங் செய்து விநியோகம் செய்யப்படுவதும் நடக்கும்.

ஒரு பொருள் தனக்கு வேண்டும் என்று வாடிக்கையாளரிடமிருந்து ஆணை கிடைத்தவுடன் இரண்டே நாட்களில் அந்த பொருள் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த கால இடைவெளி படிப்படியாக குறைந்து இரண்டு மணி நேரமானது. இப்போது டிரோன்கள் மூலம் அருகில் உள்ள அதன் கிடங்குகளில் இருந்து அமெரிக்க மாநிலங்களில் அரை மணி நேரத்தில் வாடிக்கையாளர்களின் வீட்டின் மேல் மாடிகளில் பொருள்களை பெற முடிகிறது. இத்தகைய கிடங்குகள் உலகில் 108 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

வீடியோக்களை பார்ப்பது போன்று புத்தகங்களையும் இணையம் மூலமாக படிப்பவர்களுக்கு கொடுக்கலாமே என்று தோன்றியதன் விளைவாக கிண்டில் என்ற இ-ரீடரை உருவாக்கி வெளியிட்டார். இந்த கிண்டில்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்பனை ஆயின. ஒரு புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படிப்பதைவிட கிண்டில் மூலம் குறைந்த விலையில் அந்த புத்தகத்தை படிக்க முடிந்தது. பல கோடி பிரதிகள் விற்பனை ஆகும் புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நூல்கள் போன்றவற்றையும் இரண்டு வடிவிலும் அமேசான் விற்பனை செய்தது. இப்போது தமிழ் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான மொழிகளில் அமேசான் பப்ளிஷிங் நிறுவனம் எழுத்தாளர்களிடமிருந்து டிஜிட்டல் வடிவில் புத்தகங்களை எழுதி வாங்கி வெளியிடுகிறது.

மனித உளவியலை நன்றாக உணர்ந்த ஜெஃப் பெசோஸ் ப்ரைமில் உறுப்பினர் ஆனவர்கள் தாங்கள் செலுத்திய சந்தாவுக்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்று மேலும் மேலும் பொருள்களை வாங்கி அமேசான் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். ப்ரைம் உறுப்பினர்கள் இப்போது 200 உலக நாடுகளில் பயன்பெறுகிறார்கள். இந்தியாவிலும் பல மொழிகளில் வெப்தொடர்களை தயாரிக்க உதவுவதுடன் நேரடியாக வீடுகளுக்கு வீடியோவை வழங்கும் ஓ.டி.டி. தளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடவும் தொடங்கியுள்ளது

வணிக விரிவாக்கத்தில் பல நுகர்பொருள் நிறுவனங்களை நேரடியாக வாங்கத் துவங்கினார் ஜெஃப். முதன்முதலில் ஜாப்போ என்ற காலணிகள் விற்பனை நிறுவனத்தை 920 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்கினார். அதற்கு முதலீடாக அமேசான் பங்குகளை கொடுத்தார்.

2013-இல் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் "வாஷிங்டன் போஸ்ட்'டை 250 மில்லியன் டாலர்கள் விலையில் வாங்கி அதை தனது தனி கவனம் செலுத்தி பரபரப்பானதாக நடத்தி அதன் விற்பனையை இரண்டு மடங்காக உயர்த்தினார். அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை அவரை 1999-ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க மனிதர் என்று அறிவித்தது. 2012-ஆம் ஆண்டில் ஃபார்ச்சூன் பத்திரிகை உலகின் சிறந்த வணிகர் என்று அங்கீகரித்தது.

அமேசான் குழுமத்தின் முன்னோடி பிரிவாக இருப்பது அமேசான் வலை சேவைகள் என்ற இணைய தரவுகளை சேமித்து வழங்கும் பிரிவாகும். இணைய தரவுகளை சேமிக்கும் சர்வர்களில் உலகில் 34 சதவிகிதம் அமேசான் நிறுவனமே வைத்துள்ளது.

இணைய தரவுகளை தொகுத்து ஆராய்ந்து செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு உதவும் வகையில் நீள்சதுர வடிவில் அலெக்சா என்ற உதவியாளர் அமைப்பை ஜெஃப் பெசோஸ் உருவாக்கினார். இது உலகெங்கும் பலராலும் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. தமிழில் ‘சில்லு கருப்பட்டி' என்ற திரைப்படத்தில் அலெக்சா ஒரு ஆலோசகராக மனிதர்களுக்கு உதவுவதைக் காண முடியும்.

"வானம் வசப்படும்' என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு விண்வெளியில் மனித குடியிருப்புகளை அமைக்கும் முயற்சியையும் தொடங்கினார். அதற்காக 2000-ஆண்டில் "ப்ளு ஆரிஜின்' என்ற நிறுவனத்தை தொடங்கி விண்கல தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டார். அத்திட்டத்தின் ஒரு பகுதிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் நிதியுதவியும் பெற்றார்.

2011-இல் அவரது நிறுவனம் உருவாக்கிய ஒரு விண்கலம் ஒன்று உடைந்து சேதமானாலும் 2015-இல் "புளு ஷெப்பேர்ட்' என்ற விண்கலம் 100 கி.மீ. உயரம் விண்ணில் பறந்து சென்று திட்டமிடப்பட்ட இலக்கில் பாதுகாப்பாக இறங்கியது. 2018-இல் மனிதனை சூரிய குடும்பத்தில் உள்ள மனிதர்கள் வாழக்கூடிய வெப்பநிலை உள்ள கோள்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்து வருவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் டெல்லி, மும்பைக்கு வந்த ஜெஃப் பெசோஸ் "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் மிகப்பழைய ஜனநாயக நாடான அமெரிக்காவும் இணைந்து வணிக வளர்ச்சியில் பேரளவு இணையும்' என்று அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் அளவு வணிகம் வளர்ச்சி பெறும் என்பது மதிப்பீடு.

இருபதாயிரம் பேர்களை இந்தியாவில் புதியதாக நியமிக்கப் போவதாக இப்போது அறிவித்துள்ள அமேசான் படிப்படியாக ஐந்து லட்சம் பேர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு அளிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

உலக அளவில் இணைய வணிகத்தில் 40 சதவிகிதம் அமேசான் மூலமே நடக்கிறது. இணைய வணிகம் மூலம் வெற்றியாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசோஸ். உலகின் முதல் ட்ரில்லியனர் ஆக உருவாகி வருகிறார். இவரது வாழ்க்கை வளரும் இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் சக்தியாக விளங்குகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com