பேச்சுத் திறன்: முந்தி இருப்பச் செயல்  - 1

""வாயுள்ள பிள்ளை  பிழைக்கும்'' என்றொரு சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லாப் பிள்ளைக்கும்தான் வாய் இருக்கிறதே?
பேச்சுத் திறன்: முந்தி இருப்பச் செயல்  - 1

""வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'' என்றொரு சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லாப் பிள்ளைக்கும்தான் வாய் இருக்கிறதே? வாயைப் பயன்படுத்தத் தெரிந்த, அதாவது வாயைத் திறந்து தெளிவாக, திறம்படப் பேசத் தெரிந்த, கேட்கத் தெரிந்த பிள்ளை பிழைக்கும் என்பதுதான் இதன் பொருள்.

பேச்சு பற்றி பேசும் வள்ளுவர், மற்றெல்லாச் சிறப்புக்களையும் விட உயர்ந்த நாவன்மை பெற்றிருக்க வேண்டும்; சொல்லிலே சோர்வு உண்டாகாமல் பேணிக் காக்க வேண்டும்; பிறர் விரும்புமாறு இயம்பத் தெரிய வேண்டும்; கேட்பவர் திறனறிந்து விளம்ப வேண்டும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரைக்கிறார்.

"பேச்சின்றி அமையாது உலகு' என்பதுதான் உண்மை. நமது வாழ்நாளில் நாமனைவரும் அதிகமாக மேற்கொள்ளும் நடவடிக்கை எதுவென்றால், அது பேசுவதுதான். அதற்கு சமமாகக் கேட்பதும் நடக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கேட்பது என்பது இன்னும் கூடுதல் சக்தியோடு, சிரத்தையோடு செய்யப்படுகிற செயல் என்பதால், நம்மில் பலரும் முழுமையாகக் கேட்பதில்லை. எனவே பேச்சுத்தான் ஆகப் பெரிய மனித நடவடிக்கை.

தனிப்பட்ட முறையில் இதைச் சரியாகச் செய்வதற்கு எங்காவது, ஏதாவது பயிற்சி அளிக்கப்படுகிறதா நமக்கு? இல்லவே இல்லை. அமெரிக்கர்கள் தங்கள் குழந்தைகளை "ப்ளீஸ், தாங்க் யூ' போன்ற வார்த்தைகளை தவறாமல் பயன்படுத்தச் சொல்லி சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறார்கள்.

நாம் நமது தமிழின் சிறப்பான "ழ' என்கிற ஒலியைக் கூட நம் குழந்தைகளுக்கு முறையாகக் கற்பிப்பதில்லை. ஏராளமான தமிழர்களுக்கு "ல, ள, ர, ற' போன்ற எழுத்துகளின், ஒலிகளின் வேறுபாடு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் நம் பேச்சு மட்டும் எப்படி பெருமையுடையதாக இருக்கும்.

ஏற்ற இறக்கம், நிறுத்தம், ஓசைநயம் போன்ற அம்சங்களோடு கூடிய பேச்சு உச்சரிப்பை விடுவோம். பிறர் மனம் புண்படாமல் பேசவாவது நமக்குத் தெரிகிறதா? அதுவும் இல்லை. பேச்சுதான் மனித வாழ்வின் அடிப்படை என்றால், பெரும்பாலான பிரச்னைகள் பேச்சிலிருந்துதான் முகிழ்க்கின்றன என்றால், நாம் எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்றுவிக்க வேண்டுமா, இல்லையா?

அமெரிக்காவில் உங்கள் பேச்சில் "நான்-வாக்கியங்கள்' நிறைந்திருக்கட்டும் என்று பயிற்றுவிக்கிறார்கள். அதாவது, எதிரே நிற்பவரைக் குற்றப்படுத்தி, அவரது குறைகளை, தவறுகளை, நடவடிக்கைகளை மையப்படுத்திப் பேசுவதற்குப் பதிலாக, உங்கள் பக்கம் திரும்பி, உங்கள் உணர்வுகளை, தேவைகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தி "நான்-வாக்கியங்களாகப்' பேசுங்கள் என்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, வார இறுதிப் பயணம் ஒன்றைத் திட்டமிட்டிருந்த தம்பதியரில் ஒருவருக்கு கடைசிநேரப் பிரச்னை ஒன்றினால், பயணம் போக முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

இதற்கு பல வழிகளில் எதிர்வினை ஆற்றலாம். ""நீ எல்லாம் ஒரு கணவனா/மனைவியா?'', ""உன்னைக் கட்டிக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?'', ""உன்னுடைய வேலை மட்டும்தான் உனக்கு முக்கியம்'' என்றெல்லாம் நம்மூர் "டிவி சீரியல்' பாணியில் ஏகத்துக்கும் திட்டித் தீர்க்கலாம். சண்டை போடலாம். அடிதடி நடத்தி, காவல்நிலையம் வரை பிரச்னையைக் கொண்டு போகலாம்.

இந்தச் சூழலை இன்னொரு விதமாகவும் அணுகலாம். ""கடுமையான வேலைப்பளுவுக்குப் பிறகு இரண்டு நாட்கள் ஓய்வாகப் பயணம் போய் வரலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நமது பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்துசெய்வதால், நான் மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். எனக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது'' என்று உங்கள் உணர்வுகள், எதிர்பார்ப்புகளைப் பற்றி மட்டுமே பேசலாம்.

இப்படிப் பேசுவதன் மூலம், எதிரே நிற்பவர் குற்றம் சாட்டப்படவில்லை. அவமரியாதை செய்யப்படவில்லை, கோபப்படுத்தப்படவில்லை. அவரும் இதேபோல, தனது நிலைமை, சந்தர்ப்பச்சூழல், தான் அப்படியொரு முடிவெடுக்கக் காரணம் போன்றவை பற்றி "நான்-வாக்கியங்கள்' அடிப்படையிலேயே பேசுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த கருத்துப் பரிமாற்றம் ஓரளவு எளிதானதாக இருக்கும். தீர்வும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும்.

"நான்-வாக்கியங்கள்' அமைத்துப் பேசுவதற்கான சில விதிமுறைகள் இருக்கின்றன:

உங்களைப் பற்றி, உங்கள் உணர்வுகள், தேவைகள், கருத்துக்கள் பற்றி மட்டுமே பேசுங்கள்.

உங்கள் அனைத்து வாக்கியங்களையும் "நான்' என்றே தொடங்குங்கள்.

பொத்தாம்பொதுவாக, மேலோட்டமாக, மூடிப்பொதிந்துப் பேசாமல், பிரச்னையை தெளிவாகச் சுட்டிக்காட்டிப் பேசுங்கள். கேட்பவர் உங்கள் நிலைபாட்டை, உணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது மிகவும் உதவும்.

எதிரே நிற்பவரைக் குறை சொல்லாமல், குற்றம் கண்டுபிடிக்காமல், அவமரியாதை செய்யாமல், அவதூறு பேசாமல், அவரது குணநலன்களைக் கேள்விக்குள்ளாக்காமல் பேசுங்கள்.

உங்கள் உணர்வுகளை மையப்படுத்திப் பேசும் அதே வேளையில், கையிலிருக்கும் பிரச்னையைத் தீர்க்க, நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கத் தயாராகயிருக்கிறீர்கள் என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள்.

எதிரே நிற்பவர் பதில் சொல்வதைக் கேட்க நீங்கள் தயாராகயிருப்பதைச் சொல்லி, அவர் தரப்புக் கருத்துக்களை உண்மையாகவே கேளுங்கள்.

இப்படி "நான்-வாக்கியங்கள்' பயன்படுத்திப் பேசுவது தனிமனித வாழ்வில் மட்டுமல்ல, உங்கள் தொழிலிலும் மிகவும் உதவும்.

மனித வாழ்வின் அடிப்படையே தகவல் பரிமாற்றம்தான். இதனை நான்கு காரணிகள் தீர்மானிக்கின்றன. உங்கள் விழுமியங்கள் (வால்யூஸ்- உங்களுக்கு எது முக்கியம்?), உங்களின் உள்வாங்கல் அல்லது புரிதல் (பர்செப்ஷன்ஸ் - விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், உணர்கிறீர்கள்), உங்கள் அனுமானங்கள் (அசம்ப்ஷன்ஸ்), உங்களின் தகவல் தொடர்பு பாணி (கம்யூனிகேஷன் ஸ்டைல்- பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் உடல்மொழி போன்றவை)..

இதில் நான்கு தகவல் பரிமாற்ற முறைகளை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒன்று, முரட்டுத்தனமானப் (அக்ரசிவ்) பரிமாற்றம்: வன்முறையான உடல்மொழியோடு, குரலை உயர்த்தி, ஆவேசமாகத் திட்டுவது, பொதுமைப்படுத்திப் பேசுவது, குத்திக்காட்டுவது, ஏளனமாகப் பேசுவது, தாழ்மைப்படுத்துவது போன்றவை.

மந்தமான (பாசிவ்) பரிமாற்றம்: சன்னமான குரலில், மெதுவாகப் பேசி, சிரத்தையின்றி, எதிரே நிற்பவர் கேட்பதற்கெல்லாம் இசைவு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு, ஒதுங்கி, பதுங்கிச் செல்வது.

மட்டுப்படுத்திய முரட்டுத்தனமான (பாசிவ்-அக்ரசிவ்) பரிமாற்றம்: கைகளைக் கட்டிக்கொண்டு, ஈடுபாடின்றி, விருப்பமின்றி, ஏனோதானோவென, பட்டும்படாமலும் விலகிச் செல்வது.

உறுதியான (அசெர்டிவ்) பரிமாற்றம்: கால்களை உறுதியாக ஊன்றி, நேராக நின்று, கண்களைப் பார்த்து, தெளிவான உரத்தக் குரலில், விவாதிக்கும் விஷயத்தைப் பற்றி மட்டுமே, "நான்-வாக்கியங்களோடு' பொறுப்புணர்வுடன் பேசுவது.

மற்றவர்களுக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை வழங்கி, அதே நேரம் உங்களின் உணர்வுகளை, எண்ணங்களை, தேவைகளைத் தெளிவாக, வெளிப்படையாக, நேரடியாக எடுத்துரைத்து, உங்களின் உரிமைகள், ஈடுபாடுகளை காத்துக் கொள்வதுதான் உறுதிப்பாட்டுடன் கூடிய தகவல் பரிமாற்ற முறை. நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணியிடத்திலும் இந்த உறுதி முறையைக் கடைப்பிடித்து வந்தால், வாழ்க்கை எளிதாகும், இனிதாகும், வெற்றியளிக்கும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com