முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
வேலைவாய்ப்பு... இணையவழி பயிற்சி!
By - ந.முத்துமணி | Published On : 14th July 2020 06:00 AM | Last Updated : 14th July 2020 06:00 AM | அ+அ அ- |

கரோனா தீநுண்மி தொற்றுநோயால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளன. பலரும் வேலையை இழந்து, செய்வதறியாது திகைத்திருக்கும் நிலையில், வீடுகளில் அடைந்துகிடக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க பலரும் முனைந்துள்ளனர். அதன் விளைவாக, இணையவழிப்பயிற்சிகளுக்கு மவுசு கூடியுள்ளது.
கரோனா பிரச்னைகள் தீர்ந்த பிறகு, திறக்கவிருக்கும் வேலைவாய்ப்புச்சந்தையை எதிர்கொள்வதற்கு தத்தமது திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் இணையவழிப்பயிற்சிகள் கைக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாக கருதப்படுகின்றன. ""பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து வீட்டில் இருந்தபடியே, கடந்த சில மாதங்களாகவே இணையவழிப்பயிற்சியை இளைஞர்கள் மொய்க்கத் தொடங்கியுள்ளனர்'' என்று கூறுகிறார் உலக அளவில் இணையவழிப்பயிற்சிகளை வழங்கிவரும் கோர்ùஸரா நிறுவனத்தின் இந்திய, ஆசியபசிபிக் பிராந்திய மேலாண் இயக்குநரான ராகவ்குப்தா. இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்: ""தற்போதைய சூழலில் எமது இணையதளத்தில் 80 லட்சம் இந்தியர்கள் இணையவழிப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதத்துடன் நிகழாண்டை ஒப்பிடுகையில் இணையவழிப்பயிற்சி பெறுவோரின் விகிதம் 1400 சதமாக உயர்ந்துள்ளது. தத்தமது தொழில்திறன் தேவையை மேம்படுத்திக் கொள்வதற்காக, இணையவழிப் பயிற்சியைப் பெறுவதில் மாணவர்கள், பணியில் உள்ளோர் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள். திறன்சார் வேலைவாய்ப்புக்கு அதிகம் போட்டி நிலவும் காரணத்தால், வேலைவாய்ப்புசார் இணையவழிப்பயிற்சிகளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வர்த்தகம், தொழில்நுட்பம், தரவு அறிவியல், தலைமைப்பண்பு, மேலாண்மைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். பொதுமுடக்கத்திற்கும் முன்பாகவே மெஷின் லேர்னிங், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், பைத்தான் போன்ற பாடப்பயிற்சிகள் பிரபலமாக இருந்தன. எதிர்காலத்தில் வேலையில் சேர்வதற்கு இத்திறன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை தவிர, கரோனா பின்னணியில் தனிப்பட்ட நல்வாழ்வு, உடல் நலம்பேணல் போன்ற பயிற்சிகளையும் பலரும் எடுத்துக்கொள்கிறார்கள்.
இளநிலை பொறியியல் அல்லதுகணினி அறிவியல் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து படித்துவரும் மாணவர்களால், வேலைவாய்ப்பைப் பெறுவது அவ்வளவு எளிதானல்ல. இன்றைக்கு தேவையான தொழில்நுட்பத்திறன், எதிர்காலதொழில்நுட்பங்களில் திறன்பெற்றவர்களால் மட்டுமே வேலைவாய்ப்புச்சந்தையில் வெற்றிபெற முடியும். கல்லூரிப்படிப்பை தவிர, சிறப்புத்திறன்களை மேம்படுத்திக்கொள்ள சான்றிதழ் பயிற்சிகளில் ஈடுபடுவது முக்கியம். கணினி அறிவியலில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்(செயற்கை அறிவுத்திறன்), பிக்டேட்டா(பெருந்தரவுகள்), இயந்திரவியல் பிரிவில் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்(பொருள்களின் இணையம்) போன்றவற்றை படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இயந்திரப்பொறியியல் பயிலும்மாணவர்கள், கணினி அறிவியல் திறனை பெற தேவையில்லை. அட்டிடிவ் மேனுஃபேக்சரிங்(சேர்க்கை தயாரிப்பு அல்லதுமுப்பரிமான அச்சாக்கம்), மெக்கட்டிரானிக்ஸ் (இயந்திர மின்னணுவியல்), இன்டரெட் ஆஃப் திங்க்ஸ் (பொருள்களின் இணையம்), டிஜிட்டல் மேனுஃபேக்சரிங்(எண்ம தயாரிப்பு) போன்ற படிப்புகளை கூடுதலாகப் படித்தறியலாம்.
மரபுசார்ந்த பட்டங்களைப் பெறுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம், ஆகும் செலவில் ஒருசிறுபகுதியை செலவிட்டால் இணையவழிப்பயிற்சி அல்லது இணையவழிப் பட்டப் படிப்புகளைப் பெற்றுவிடலாம். ஆனால், இணையவழிப்பயிற்சி அல்லது படிப்புகளை தொழில் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றவா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. உலக அளவில் எங்களிடம் இணையவழிப்பயிற்சிபெறும் 6.4 கோடிபேரில் 85 சதம்பேர் பணியில் உள்ளோராக இருக்கிறார்கள். இணையவழிப் பயிற்சிக்கு மதிப்பு இருப்பதால், வேலையில் தமது வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள கிடைத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது அனைத்து தொழில்தளங்களிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சந்தைப்படுத்துவதற்கான வேலைத்திறன்களாக இருந்தால், அவற்றுக்கான இணையவழிப்பயிற்சிக்கு மதிப்பு இருக்கத்தான் செய்கின்றன. எதிர்காலத்தில் இணையவழிப்பயிற்சிக்கு கூடுதல் கவனமும், வேலைவாய்ப்பும் அதிகமாகும் வாய்ப்புள்ளது'' என்கிறார் ராகவ்குப்தா.