டார்க் சாக்லேட்டில் நோய் எதிர்ப்புத்திறன்!

"ஸ்வீட் எடு... கொண்டாடு'  என்பார்கள்.  "டார்க் சாக்லேட் சாப்பிடு... கரோனாவையும் எதிர்த்து போராடு'  என்பது புதிய மொழி.
டார்க் சாக்லேட்டில் நோய் எதிர்ப்புத்திறன்!

"ஸ்வீட் எடு... கொண்டாடு'  என்பார்கள்.  "டார்க் சாக்லேட் சாப்பிடு... கரோனாவையும் எதிர்த்து போராடு'  என்பது புதிய மொழி.  உதகையிலுள்ள பிரபல ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பாளரான பசலூர் ரஹிமான்தான் இந்த புதிய மொழிக்குச் சொந்தக்கரரர். 

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லோமோ லிண்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்  டார்க் சாக்லேட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதில் சாக்லேட்டின் மூலப்பொருளான கோகோவில் உள்ள சத்துகள் மூளைக்கு அதிக பலத்தைத் தருவதோடு,  புதிய ஐடியாக்களை  உருவாக்குதல்,  இன்சுலின் சுரப்பை அதிகரித்தல்,  ரத்த நாளங்களின்  செயல்பாட்டை ஊக்குவித்தல், கொழுப்பைக் குறைத்தல் முக்கியமாக, நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்தல் ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் டார்க் சாக்லேட் சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களுக்குள் ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதையும், நினைவாற்றல் கூடுவதையும் ஆதாரப்பூர்வமாகவும் இந்த ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த  ஆய்வு முடிவுகளைத்  தொடர்ந்து உதகையிலுள்ள தனியார் சாக்லேட் தயாரிப்பாளரான பசலூர் ரஹிமான்  கரோனா தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்  வகையில் விசேஷமான ரசாயனக்கலவை ஏதுமில்லாத  டார்க் சாக்லேட்டை உருவாக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் நம்மிடம் தெரிவித்த தகவல்களாவன:

""உலகெங்கும் பரவியுள்ள கரோனா தொற்றிற்கு தற்போது வரை முறையான மருந்து ஏதும் இல்லையென  கூறப்படும்  சூழலில் நோய்த்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காகவே  மருத்துவத்துறையினரில் ஒவ்வொரு பிரிவினரும் பல்வேறு தொற்று தடுப்பு முறைகளை ஆலோசனைகளாக வழங்கி வருகின்றனர்.

நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தும் டார்க் சாக்லேட்  தயாரிப்பிலும் புதுமையாக  ஏதாவது செய்ய முடியுமா என கடந்த 2 மாதங்களாக பரிசீலிக்கப்பட்டு வந்ததன் விளைவே தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஆர்கானிக் சாக்லேட்டுகள்.

இந்த  சாக்லேட்டில் கோகோவும், நாட்டுச் சர்க்கரையும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.  இதன் மூலம்  கோகோவின் அனைத்து  ஆற்றலும்  இந்த சாக்லேட்டின்  மூலம் கிடைக்கிறது.  48 கிராம் எடையிலான ஒரு டார்க் சாக்லேட்டில் 70 சதம்  கோகோவும்,  30 சதம் நாட்டு சர்க்கரையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சாக்லேட்டுகள் பலவித வடிவங்களிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தற்போதைய சிக்கலான நேரத்தில் உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கில் இதுவரை பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோகோவிற்குப் பதிலாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் விளையும் கோகோவே பயன்படுத்தப்படுவதால் உள்ளூர் கோகோ விவசாயிகளும் பயனடைகின்றனர். 

பொதுவாக சாக்லேட்டை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது எனக் கூறுவார்கள். ஆனால், டார்க் சாக்லேட்டில் பல்வேறு நல்ல அம்சங்களும் உள்ளதாலும், கோகோவின் பயன்கள் கிடைப்பதாலும் அவர்களும் இதை ருசிக்கும் வகையில் சுகர் ஃபிரீ பிளாக் சாக்லேட்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.  புதிய சிந்தனைகளைத் தூண்டும்  வகையில் மூளையும் சுறுசுறுப்படையும்.  டார்க் சாக்லேட்டால் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும் என்பதால்,  தற்போது அதைப் பயன்படுத்துவது  உகந்தது.  கரோனா தொற்றை எதிர்த்துப் போராட அது உதவும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

தற்போது சந்தைக்கு வந்துள்ள இந்த டார்க் சாக்லேட்டை  உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி இதைக்குறித்து கேள்விப்பட்ட  ஏராளமான வெளியூர் மக்களும் பயன்படுத்த தொடங்கியிருப்பது இந்த டார்க் சாக்லேட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி என்றே கூறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com