முகக்கவசத்தில் நீலகிரித் தைலம்!

கரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது.
முகக்கவசத்தில் நீலகிரித் தைலம்!

கரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது. ஆனால், இதையும் சிலர் சவாலாக எடுத்துக் கொண்டு பொது முடக்கத்தால் முடங்கி விடாமல் தங்களது நிலையைப் பழைய நிலையிலிருந்ததைப் போல மாற்ற முடியாவிட்டாலும் இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலாவது புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.

இவர்களில் உதகையில் கடந்த 50 ஆண்டுகளாக நீலகிரி தைலத்தை வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்துவரும் ரோஹித் ஜெயின் மற்றும் சாக்கேத் ஜெயின் சகோதரர்களும் அடங்குவர். இவர்களது புதிய முயற்சியின் காரணமாக நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தங்களது புதிய தயாரிப்பை உருவாக்கியுள்ளனர். இது தற்போதைய கரோனா சூழலுக்கேற்றவாறும் அமைந்துள்ளதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புதிய முயற்சி குறித்து ரோஹித் சகோதரர்கள் தெரிவித்த தகவல்களாவன- ""நீலகிரி மாவட்டத்திலிருந்து நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் தொழில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் குடியேறியபோது அடுப்பெரிக்கவும், சதுப்பு நிலங்களில் இருந்த தண்ணீரை உறிஞ்சி அந்நிலத்தை வழக்கமான விவசாயப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையிலும் ஆஸ்திரேலியாவிலிருந்து நீலகிரிக்குக் கொண்டு வரப்பட்டதுதான் யூகலிப்டஸ் மரங்கள். இந்த மரத்தின் இலையிலிருந்து கடந்த 1890- ஆம் ஆண்டில் உதகையில் லாரன்ஸ் பள்ளியில் பணியாற்றி வந்த ஓர் ஆசிரியர்தான் தைலம் எடுப்பதை முதன்முதலில் கண்டுபிடித்துள்ளார். இந்தியாவில் நீலகிரி மாவட்டத்திலும், கொடைக்கானலிலும் மட்டுமே நீலகிரி தைலம் காய்ச்சப்படுகிறது. நீலகிரி தைலம் தலைவலிக்கான தைலங்களைத் தயாரிப்பது முதல் மருந்து நிறுவனங்களுக்கும், பல்பொடி, கிருமி நாசினிகள் மற்றும் மெகந்தி போன்ற தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உதகையிலுள்ள எங்களது ஆய்வகத்திலிருந்து நாடு முழுதும் பல்வேறு பகுதிகளுக்கும் யூகலிப்டஸ் தைலம் அனுப்பப்பட்டு வந்தது.

ஆனால், கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்தே இத்தொழிலிலும் சுணக்கம் ஏற்பட்டதால் மாற்று உத்திகளைக் கையாள வேண்டிய நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் "மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் சார்பில் புதிய தயாரிப்புகளை உருவாக்கலாமென முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் தற்போது அனைவரும் பயன்படுத்தி வரும் முகக்கவசங்களில் யூகலிப்டஸ் தைலத்தையும் சேர்த்தால் அதை அணிந்து சுவாசிக்கும்போது தைலத்தின் ஆற்றல் மூச்சுக்குழாய்க்குள் போகும்போது தொண்டையில் சளி கட்டுவது வெகுவாகக் குறைவது தெரிய வந்தது. எனவே, முகக்கவசங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் நீலகிரி தைலத்தை சுத்திகரித்து அதனுடன் ரப் ஆல்கஹால் மற்றும் கிளிசரின் சேர்த்து அதை சிறு குப்பிகளில் அடைத்து விற்பனைக்குக் கொண்டு வந்தோம்.

இது மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளதால் நீலகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் தற்போது அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல, கிருமி நாசினியைப்போல, கைகளில் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான ரோல் ஆன் வகை குப்பிகளையும் தயாரித்துள்ளோம். இவை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கியெறியக் கூடிய பொருட்கள் அல்ல என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த சிறிய குப்பிகளை ரீ-ஃபில்லிங் முறையிலும் தயாரித்துள்ளோம்.

அதேபோல, வீடுகளில் பயன்படுத்தக்கூடிய அளவில் நீலகிரி தைலத்தைக் கொண்டு தரையைச் சுத்தப்படுத்தும் வகையிலான திரவமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து லெமன் கிராஸ் எனப்படும் புல்லிலிருந்து தயாரிக்கப்படும் தைலத்தைக் கொண்டும், தேயிலையிலிருந்து உருவாக்கப்படும் டீ டிரீ எண்ணெய்யைக் கொண்டும் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் யூகலிப்டஸ் தைலத்தால் நீலகிரி மாவட்டத்தின் தனித்துவமிக்க தைலத்தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் சீன தைலத்திற்கும், நீலகிரி தைலத்திற்கும் தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளதால் நீலகிரி தைலமே இன்னமும் சந்தையில் முதலிடத்தில் உள்ளது.

இத்தகைய நிலையில் தற்போதைய பொது முடக்கத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி நீலகிரி தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உதவும் வகையில் நாங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ள புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com