முந்தி இருப்பச் செயல்: பேச்சுத்திறன்-3

"எனக்கெதற்கு மேடைப்பேச்சுத் திறன்? நான் என்ன அரசியல்வாதி ஆகப் போகிறேனா, அல்லது ஆசிரியர் ஆகப் போகிறேனா?' என்று நீங்கள் கேட்கலாம்.
முந்தி இருப்பச் செயல்: பேச்சுத்திறன்-3


"எனக்கெதற்கு மேடைப்பேச்சுத் திறன்? நான் என்ன அரசியல்வாதி ஆகப் போகிறேனா, அல்லது ஆசிரியர் ஆகப் போகிறேனா?' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்தத் திறன் இல்லாமல், நவீன வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது, சமூகத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

உங்கள் ஊரில் ஒரு கோயில் திருவிழா நடக்கிறது; அதில் பங்கேற்று ஒரு விருந்தினரை வரவேற்க வேண்டிய தேவை எழலாம். அல்லது உங்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஒரு மக்கள் பிரச்னை பற்றி உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டி வரலாம். நாளை உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் ஒரு விடயம் குறித்து நீங்கள் பேச வேண்டி வரலாம்.

மேடைப் பேச்சுத் திறன் மிக முக்கியமானது. அது ஆயிரத்தோடு ஒருவனாய் இருக்கும் உங்களை ஆயிரத்தில் ஒருவனாக்கும். "இவன் ஓர் ஆளே இல்லை' என்று பலர் கருதிக் கொண்டிருக்கும் உங்களை "இவர் ஓர் ஆளுமை' என்றாக்கும்.

மேடைப் பேச்சுத் திறனுக்கு பெரும் தடையாக இருப்பவை மேடை பயமும், சுய சந்தேகமும். இவற்றைக் கடக்கும் வித்தையைத் தெரிந்துகொண்டால், நீங்கள் ஐம்பது விழுக்காடு பேச்சாளர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

முதலில் இந்த மேடை பயம் இல்லாத பேச்சாளர் யாருமே இல்லை என்பதை உணருங்கள். உண்மையில், இந்த பயம் மிகவும் அவசியமான ஒன்று. காரணம், இந்த அச்சம்தான் உங்களை நன்றாகப் பேசவே வைக்கிறது.

ஆனால் இந்த அச்சம் உங்களைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அவ்வளவுதான். மேடை பயம் அளவுக்கதிகமாகிப் போனால், வாய் வறண்டு போகும்; கை கால்கள் நடுங்கும்; தெளிவாகச் சிந்திக்க இயலாது; கோர்வையாகப் பேச முடியாது. "மேடையிலிருந்து இறங்கிப் போய்விடு' என்று அது உங்களை விரட்டும்.

விரட்டும் அந்த பயத்தை, எதிர்த்து நின்று மிரட்டுவதுதான் ஒரே வழி. பேசத் தொடங்கும் முன்னால், ஓர் ஐந்து நிமிடங்கள் வேறு எதுவும் செய்யாமல், யாரிடமும் பேசாமல், அமைதியாக இருங்கள். பத்து முறை ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து, சில வினாடிகள் உள்ளுக்குள் நிறுத்திவைத்துக் கொண்டு, மெதுவாக மூச்சை விடுங்கள். இது உங்களை ஆசுவாசப்படுத்திவிடும். கொஞ்சம் தண்ணீர் குடித்து வாயை ஈரமாக்கிக் கொள்ளுங்கள்.

இது உங்களைப் பேச்சு மேடையில் ஏற்றும் தருணம்தானே தவிர, தூக்கு மேடையில் ஏற்றும் நிகழ்வல்ல என்பதை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். இது ஒன்றும் வாழ்வா, சாவா பிரச்னை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஏதாவது தப்பாகச் சொல்லிவிடுவோமோ, நம்மைப் பார்த்து மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ, சிரிப்பார்களோ என்றெல்லாம் ஐயங்கள் மனதில் எழலாம். உங்கள் கருத்தை நீங்கள் சொல்லப் போகிறீர்களே தவிர, யாரையும் வசீகரிப்பதோ, யாருடைய பாராட்டையும் பெறுவதோ உங்கள் நோக்கமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எதைப் பற்றி, யார் முன்னால், எவ்வளவு நேரம் பேசப் போகிறீர்கள் எனும் மூன்று விடயங்கள் முக்கியமானவை. நீங்கள் பங்கேற்கப் போவது குழு விவாதமா, சொற்போரா, பட்டிமன்றமா, ஆய்வரங்கமா என்பதும் முக்கியம்.

நீங்கள் பேசப் போகும் பொருள் குறித்து நிறையத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை உறுதி செய்யும். இருநூறு கல்லூரி மாணவர்களிடம் பேசப் போகிறீர்களா, அல்லது இருபது தொழில்வல்லுநர்கள் முன்னால் பேசப் போகிறீர்களா என்பதும் முக்கியம். அதற்கேற்றாற்போல் உங்கள் பேச்சின் உள்ளடக்கத்தை, தன்மையை, நடையை, தொனியை, குரலை அமைத்துக் கொள்ள வேண்டிவரும்.

ஐந்து நிமிட வாழ்த்துரையா, அல்லது அரைமணி நேர சிறப்புரையா என்பதும் முக்கியம். அதற்கேற்ற முன் தயாரிப்போடு நீங்கள் செல்வது அவசியம். தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, உங்கள் உரையைக் கேட்க வருகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது பெரும் தவறு.

என்ன பேசப் போகிறீர்கள் என்பதற்கான ஒரு மனவரைபடத்தை மனதிலோ அல்லது காகிதத்திலோ தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். பார்வையாளர்களை எப்படி விளிப்பது, எங்கே தொடங்குவது, எப்படித் தொடர்வது, என்னென்ன கருத்துகளை, வாதங்களை முன் வைப்பது, எப்படி முடித்துக் கொள்வது எனும் எல்லைக்கோடுகளைக் குறித்து வைத்துக் கொண்டால், உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும்:

உங்களைக் கேட்போர் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
அதை அவர்கள் தெளிவாக, எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் உங்கள் கருத்துக்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பகிரவிருக்கும் முக்கிய விடயங்களையும், துணை விடயங்களையும் தரவுகளுடன் ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.
உயிரோட்டத்தோடு, உண்மையான உற்சாகத்தோடு, உணர்வுபூர்வமாகப் பேசுங்கள்.
எளிய, இனிய, துல்லிய மொழிநடையில் சுற்றி வளைக்காமல் நேரடியாக மனம்
திறந்து பேசுங்கள்.
கேட்போர் கண்களைப் பார்த்து, ஏற்ற இறக்கங்களோடு பேசி, சில இடங்களில் நிறுத்தி, கொஞ்சம் அமைதிகாத்து, உரிய உடல் அசைவுகளோடு பார்வையாளர்
களைக் கட்டிப்போடுங்கள்.
குறிப்பு வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் எழுதி வைத்துப் படிக்காதீர்கள்.
மூன்று குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டவர்களை "இகல் வெல்லல் யார்க்கும் அரிது' என்று பட்டியலிடும் திருவள்ளுவர், முதன்மையாகக் குறிப்பிடுவது "சொலல்வல்லான்' என்பதைத்தான். "சோர்விலான்', "அஞ்சான்' என்பவையெல்லாம் அதற்கு பிறகுதான் என்கிறார்.
பேச்சுத் திறன் குறித்த சில பொதுவான விடயங்களைச் சொல்லி முடிக்கிறேன்:
எவ்வளவு அதிகமான மொழிகளைத் தெரிந்து கொள்ள முடியுமோ, அவ்வளவு மொழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். மூன்று நான்கு இந்திய மொழிகளையும், இரண்டு மூன்று சர்வதேச மொழிகளையும் அறிந்திருப்பது உங்களை மிக முக்கியமானவராக மாற்றும். மொழித் திறன் என்பது அனைத்துத் தொழில்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் தேவையான ஒன்று.
ஆங்கில மொழியில் கட்டாயம் பாண்டித்தியம் பெறுங்கள். தினமும் ஆங்கில நாளிதழ் ஒன்றை ஒரு மணி நேரமாவது படியுங்கள். இரண்டு குறிப்பேடுகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் தினமும் ஐந்து புதிய வார்த்தைகளை, அவற்றின் அர்த்தம், பயன்பாடு போன்றவற்றை எழுதுங்கள். இன்னொரு குறிப்பேட்டில் ஐந்து புதிய வாக்கிய அமைப்புகளை எழுதியெடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த வார்த்தைகளை, வாக்கியங்களை அவ்வப்போது நினைவில் கொணர்ந்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வார்த்தை, வாக்கியச் செழுமை அதிகரிக்கும்போது, மொழிப் புலமை எளிதில் கைகூடும்.
தமிழறிந்தோரிடம் தமிழிலேயே பேசுவது என்று உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். "வணக்கம், நன்றி, தயவுசெய்து, மன்னித்துக்
கொள்ளுங்கள்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். ஆங்கிலம் பேசும்போது எப்படி தமிழ் கலப்பதில்லையோ, அதேபோல தமிழ் பேசும்போது ஆங்கிலம் கலக்காதீர்கள். "ஜி' எனும் ஒட்டுச் சேர்த்துப் பேசாதீர்கள்
உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றட்டும். பெண்களோடு பேசும்போது, அவர்களின் முகத்தை, கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; அவர்களையும் பேச அனுமதித்து, அவர்களின் கருத்துக்களைக்
கேளுங்கள்
இயற்கையாகப் பேசுங்கள். உங்கள் ஊர் பேச்சுவழக்கு என்பது உங்கள் அடையாளம் என்றுணருங்கள். ""கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'' எனக் கொண்டு இனிய வார்த்தைகளை நட்பொழுகப் பேசுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com