சந்திரயான் -2: காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டு கடந்த ஜூலை 21-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதன் ஆர்பிட்டர் சேகரித்த அறிவியல் தரவுகளை எதிர்நோக்கி உலகம் முழுவதும் விண்வெளி ஆர்வலர்கள்
சந்திரயான் -2: காத்திருக்கும் ஆச்சரியங்கள்!


சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டு கடந்த ஜூலை 21-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதன் ஆர்பிட்டர் சேகரித்த அறிவியல் தரவுகளை எதிர்நோக்கி உலகம் முழுவதும் விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 2019, ஜூலை 21-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு செலுத்தியது இஸ்ரோ. ஆகஸ்ட் 20-ஆம் தேதி அது நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் வகையில் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தரையில் இறங்கும் முயற்சியில் சந்திரயான்-2 லேண்டரான விக்ரமும், அதன் ரோவரான பிரக்யானும் நிலவின் தரையில் வேகமாக மோதி, இஸ்ரோவின் தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டன. ஆனால், விண்கலத்திலிருந்து ஏற்கெனவே பிரிந்த ஆர்பிட்டர், வெற்றிகரமாக நிலவைச் சுற்றி வருகிறது.

ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இஸ்ரோ ஏற்கெனவே வெளியிட்டிருந்தாலும், அறிவியல் தரவுகளை இன்னும் வெளியிடவில்லை.

கடந்த மார்ச் மாதம் இந்தத் தரவுகளை வெளியிட இஸ்ரோ திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா தீநுண்மி பிரச்னையால் அது ஒத்திவைக்கப்பட்டு, வரும் அக்டோபரில் அறிவியல் தரவுகள் வெளியிடப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் துருவப் பகுதியில் தண்ணீரும் பனிக்கட்டியும் படிந்திருப்பது குறித்த தகவல்கள், தரைப் பகுதியில் படிந்துள்ள கனிமங்கள் குறித்து எடுக்கப்பட்ட எக்ஸ்ரே, அகச்சிவப்பு ஸ்கேன் போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 1056 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பில் 22 சுற்றுப் பாதை புகைப்படங்களை ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன கேமரா எடுத்துள்ளது. அதன்மூலம் எதிர்காலப் பயணத்தின்போது நிலவில் தரையிறங்குவதற்கான தளங்களை வகைப்படுத்த முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தரைப்பகுதியில் படிந்துள்ள நீர் மற்றும் பனிக்கட்டி குறித்து ஆய்வு
செய்யும் வகையில் ஆர்பிட்டரில் பல கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரேடார் கருவி. இக்கருவி, நிலவின் துருவப் பகுதியில் நீர்-பனி காணப்படும் பகுதியை ஒரு வரைபடமாக உருவாக்கும். மற்றொன்று அகச்சிவப்பு நிறமாலை (இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர்). இது நிலவின் மண்ணில் நீர்ச்செறிவுகள் குறித்த தரவுகளை சேகரிக்கும். இது, சந்திரனின் மேற்பரப்பில் எந்த மாதிரியான நீர் சார்ந்த தாதுக்கள் உள்ளன என்பதுகுறித்த தெளிவை விஞ்ஞானிகளுக்கு அளிக்கும்.

"விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானபோதும், சந்திரயான்-2 பணியில் 98 சதவீத நோக்கம் நிறைவேறியுள்ளது. அதன் ஆர்பிட்டர் சிறப்பாகச் செயல்படுவதாகவும், திட்டமிட்ட சோதனைகளை மேற்கொள்வதாகவும்' இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். அக்டோபரில் வெளியாகும் ஆய்வுத் தகவல்கள் என்னென்ன ஆச்சரியங்களைத் தரப் போகிறதோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com