கரோனா காலம்... தரவு அறிவியல்!

கரோனா நோய் தொற்று காரணமாக உலகமே வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று உறுதியாக சொல்லி விட்டன .
கரோனா காலம்... தரவு அறிவியல்!


கரோனா நோய் தொற்று காரணமாக உலகமே வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று உறுதியாக சொல்லி விட்டன .

சில நிறுவனங்கள் வீடுகளில் இருந்தே வேலையை தொடரலாம் என அறிவுறுத்தி கணினி உள்ளிட்ட சாதனங்களை பணியாளர் களின் வீடுகளுக்கு அனுப்பி உள்ளன.

எல்லாத் தொழில்களிலுமே இணையவழியான பரிமாற்றம் கட்டாயமாகி ஆன்லைன் வர்த்தகம் சூடு பிடித்து வரும் காலமிது. பெட்டிக்கடை முதல் பெருவணிகம் வரை தற்போது ஆன்லைனைத்தான் நம்பியுள்ளன .

உலகமே செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு விரல் சொடுக்கில் வேண்டியதை செயல்படுத்தும் காலகட்டத்தில் இருந்து வருகின்றது.

இத்தகைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் டேட்டா சயின்ஸ் எனப்படும் தரவு அறிவியல் மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
தரவு அறிவியலையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் முயன்று வருகின்றனர்.

கரோனா சர்வதேச அளவில் பரவும் இந்த காலகட்டத்தில் புதிய புதிய சவால்கள் இந்த சமூகத்தில் உருவாகி வருகின்றன. இந்த காலகட்டத்தில் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது போன்ற விவரங்களை அளிப்பதற்கு இந்த தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியாக இருக்கிறது.

இந்த சர்வதேச பரவல் காலத்தில் குறிப்பிட்ட வைரஸின் பண்புகள் எவை ? என தினமும் ஏராளமான விஞ்ஞானிகள்- பல் துறைகளைச் சேர்ந்தவர்கள்- ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர்.

அதன் மூலம் பல விஞ்ஞான தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்றைய மருத்துவ உலகிலும் ,மருத்துவ சாதனங்கள் உருவாக்கும் முயற்சிகளுக்கும் பெருமளவு உதவியாக இருந்து வருகின்றன.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தொகுத்து அளிப்பதற்காக பல கைபேசி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பயனாளிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர் . இவர்களில் யாருக்கேனும் கோவிட் பாசிட்டிவ் என வரும் நிலையில் அது குறித்த விவரம் உடனடியாக அந்த பயன்பாட்டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது .

இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர் அதற்கு முந்தைய நாட்களில் வேறு எங்கெல்லாம் சென்றார் என்பதை தரவுகளின் மூலமும், தொழில்நுட்பங்களின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணிப்பதற்கும், பரிசோதனை செய்வதற்கும் தரவு அறிவியலும், செயற்கை நுண்ணறிவும் பயன்படும் என பல நாடுகளின் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த கைபேசி தரவு செயலி மூலம் மிக விரைவாக சம்பந்தப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்ய முடிகிறது என்பது தரவு அறிவியலின் மிகப்பெரிய பலம். இந்த இடத்தில் தனி மனித உரிமையும் ,தரவு பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளரின் கருத்தாக உள்ளது.

இந்த தரவு அறிவியல் தொழில்நுட்பம் நோய்த்தொற்று குறித்த தகவல்களை நமக்கு முன்கூட்டியே தெரிவிப்பதுடன் அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களையும் நமக்கு தெரிவிக்கிறது அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு நமக்கு உதவி செய்கின்றது.

மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம் இந்த நோய்த் தொற்று எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பன போன்ற தகவல்களையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு அணுகுமுறைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .இதன் மூலம் நோய்த் தொற்றினால் உருவாகும் தொடர்ச்சியான அறிகுறிகள், மாற்றங்கள் மற்றும் நோயாளிகளுக்கு உள்ள சிறப்பு இயல்புகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட நோய் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் தீர்மானிப்பதற்கு தரவு அறிவியல் உதவுகிறது.

இதுபோன்று பலரின் விவரங்களை சேகரிக்கும் போது அந்த குறிப்பிட்ட வைரஸின் பண்புகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற விரைவான தீர்வுகளை எட்டுவதற்கு தரவு அறிவியல் உதவுகிறது.

தரவு அறிவியலைப் பொருத்தவரை சேகரிக்கப்படும் தரவுகள் அந்தந்த சமூகத்தைச் சார்ந்ததாக அமைந்திருக்கும். மேலும் தொடர்புடைய மருந்து வகைகளின் காப்புரிமை குறித்த விவரங்களையும் கூட தரவு அறிவியலைப் பயன்படுத்தி நாம் தெரிந்து கொள்ள முடியும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலின் மூலம் டெலி மெடிசன் முறை எளிதாக மாறிவிடும்.

தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர்களை நேரில் அணுக முடியாது. விடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொள்ளும் நோயாளிகளின் தரவுகள் மூலம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடியும் என்கின்றனர் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள்.

மருத்துவத் துறையோ அல்லது வேறு நிறுவனங்களோ இன்றையச் சூழலில் எவ்வாறு தங்களின் நிறுவனத்தை செயல்படுத்துவது, உருவாகி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என அனைத்திற்குமே தரவு அறிவியல் உதவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com