கரோனாவின் இன்னொரு முகம்!

எதற்குமே நாம் அறியாத இன்னொரு முகம் இருக்கும். கரோனாவுக்கும் கூட. உலக மக்களை ஆட்டிப் படைத்து,  அவர்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டு,  அச்சத்துடன் கழிக்க வைத்திருக்கிறது கரோனா.
கரோனாவின் இன்னொரு முகம்!

எதற்குமே நாம் அறியாத இன்னொரு முகம் இருக்கும். கரோனாவுக்கும் கூட. உலக மக்களை ஆட்டிப் படைத்து,  அவர்களின்  இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டு,  ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழிக்க வைத்திருக்கிறது கரோனா. ஆனால்,  பாறையிடுக்கிலும் கூட  செடி முளைப்பதைப் போல,  கரோனாவால் நிறைய மாற்றங்கள் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  அந்த மாற்றங்களைத் தெரிந்து கொண்டு,  அதற்கேற்ப மக்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பல்வேறு துறைகளை முடக்கிப் போட்டாலும், அவை மாற்றுவழியில் தங்கள் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணித்து வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வரும் கல்வித்துறை, தற்போது இணையவழி கற்பித்தலுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. 

பள்ளிகள், கல்லூரிகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகிய அனைத்துக்கும் இணையவழியிலேயே தற்போது பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பாடங்களை ஆழமாகத் தெளிவாகக் கற்பிக்கும் நபர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதுமையான வழிகளில் பாடங்களைக் கற்பிப்பவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.  

பருவத் தேர்வுகளையும் இணைய வழியிலேயே நடத்தி விடலாமா என்று பல கல்லூரிகள் ஆலோசித்து வருகின்றன. அவ்வாறான சூழலில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்றே கூறலாம்.  

பொது முடக்கம் காரணமாகவும் கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாகவும் வீட்டை விட்டு வெளியேறாமல் இணைய வசதிகளையே மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை இணைய வழியில் வாங்குவது அதிகரித்துள்ளது. 

இதன் மூலம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் செயலிகள் குறித்த தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தோர் பலனடைய முடியும். சமையல் குறிப்புகள், சுகாதாரம், ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களை இணையவழியில் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

இணையவழி சந்தைப்படுத்துதலும் அதிகரித்துள்ளது. பொருள்களுக்கு புதுமையான வகையில் விளம்பரம் செய்வதற்கான உத்திகளை வழங்குவோருக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பெரும் பலனடைய முடியும்.  

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த பிறகும் கூட மக்கள் தங்களது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதற்கு அதீத கவனம் செலுத்துவார்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு மக்களிடையே அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அவற்றின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பலனடையும். 

மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் உடற்பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றையும் இணையத்தின் துணை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் தேர்ந்த இளைஞர்கள் இணையவழி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சிக் கூடத்துக்கு மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், உடற்பயிற்சிக் கருவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அவற்றைத் தயாரிப்பவர்களும் பலன்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

பொது முடக்கம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளன. அந்தப் பலன்களைத் தொடர்ந்து கைக்கொள்வதற்காக சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சார உற்பத்தி உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத தொழில்நுட்பங்களுக்கான 
தேவைகள் அதிகரிக்கும். 

தற்போது பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. பணப்பரிமாற்றத்துக்கான பாதுகாப்பு நிறைந்த செயலிகளை வடிவமைப்பது, பணப்பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்டவற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாஆகியவை முடங்கியுள்ளன. நோய்த்தொற்று பாதிப்பு குறைந்த பிறகும் வெளிநாட்டு சுற்றுலா மீதான மக்களின் மோகம் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற விமான, ரயில் பயணங்களை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் உள்நாட்டு சுற்றுலாவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக மெய்நிகர் முறையில் சுற்றுலாத் தலங்களை ரசிப்பது அதிகரிக்கும்.  

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு,  அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவுடைமையாக இருக்கும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com