உடற்பயிற்சியினால் கிடைக்கும் 20 நன்மைகள்!

வர்த்தகம், மேலாண்மை, சுயமுன்னேற்றம், ஆன்மிகம் குறித்து நூல்களை இளைஞர்களுக்காக எழுதி வருகிறார் டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டியார். உடற்பயிற்சியின் அவசியம் குறித்து அவர் எழுதியது இங்கே:
உடற்பயிற்சியினால் கிடைக்கும் 20 நன்மைகள்!


வர்த்தகம், மேலாண்மை, சுயமுன்னேற்றம், ஆன்மிகம் குறித்து நூல்களை இளைஞர்களுக்காக எழுதி வருகிறார் டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டியார். உடற்பயிற்சியின் அவசியம் குறித்து அவர் எழுதியது இங்கே:

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும்தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலைப் பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. அதனால் பாதிப்படையப் போவது உடல்தான். ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு எப்பாடுபட்டாவது நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவைதான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் எத்தகைய உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும்போது உடற்பயிற்சியை மறந்தே விடுகிறோம். உணவிற்குத் தரும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்குப் பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும். "யோகா' போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது எத்தகைய உடற்பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மைகளைத் தருகின்றன என்பதைப் பார்க்கலாம்.

மன ஆரோக்கியம்

தினசரி 30 அல்லது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மனநிலையையும் நன்றாக வைக்க உதவும். மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதைத் தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

பதற்றம்

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

இதயம்

சீராக உடற்பயிற்சி செய்தால், பலவிதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். ஆகவே, உடற்பயிற்சி செய்து இதயநோய்களை விட்டு விலகி இருக்கவும்.

உடல் எடை

ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பதுதான் அனைவரின் கனவாகவும் இருக்கிறது. அதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாகக் காட்சியளிக்கும்.

நீரிழிவு

உடல் எடையைக் குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை. அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயைத் தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோயாளிகளை தினசரி நடக்கச் சொல்லி, பலரும் அறிவுறுத்துகிறார்கள்.

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தை அமைதியான கொலைகாரன் (Silent  Killer) என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க முடியும். இந்த ஓய்வு ரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

உடல் உறுதி

அவ்வப்போது தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வை உண்டாகி, நம்மை சோர்வடையச் செய்யும். ஆனால் தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவேளையில் உடற்பயிற்சி செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, உடல் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இது அயர்ச்சியைக் குறைக்கும்.

நோய் தடுப்பாற்றல்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியம்

உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

கொழுப்பு அளவு

நல்ல உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டி, தேவையில்லாத கொழுப்பின் அளவை மடமடவென்று குறைக்கும். இதனால் உங்களின் இதய நாளங்கள் சுத்திகரிக்கப்படும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் ரத்தம் உறைதல் போன்ற வேண்டாத செயல்கள் உருவாகுவதையும் தடுக்கும்.

தசைகளுக்கு வலிமை

தசைகளின் வலுவை அதிகரிக்க உடற்பயிற்சி மிகவும் துணை புரியும். இதனால் வயதான காலத்தில் தசைகள் சோர்வடைவதைத் தடுக்கவும் அவற்றின் சுறுசுறுப்பான இயக்கத்தைத் தொடர்ந்து நிலையாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

மனநிலை

உணவு முறையை நம்புவதோடு, உடற்பயிற்சியிலும் ஈடுபட்டால் அது உங்கள் மனதுக்கு நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலைக் கொடுப்பதால் மன நிலையை, சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்.

ஆற்றல்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். உடல் ஆற்றல் அதிகரிக்கும். மேலும், திசுக்களுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவியும் புரியும்.

தூக்கம்

சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், கடுமையான வேலைக்குப் பின் தூக்கம் வருவது போல, தூக்கம் வரும். ஆனால் எப்போதும் தூங்குவதற்கு சற்றுமுன் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

எலும்புகள்

ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் நீங்கள் தினசரி செய்யும் உடற்பயிற்சி உடலிலுள்ள அத்தனை எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். இதனால் அஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

புற்றுநோய்

உடற்பயிற்சி, குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்த, குறைக்க உதவி புரிகிறது. ஆகவே முறையான உடற்பயிற்சி செய்து, புற்றுநோய் வரும் அபாயத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நீண்ட ஆயுள்

தினசரி உடற்பயிற்சி செய்வதால், ஆயுள் பல ஆண்டுகள் கூடும். ஆயுளைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வயதான காலத்திலும் ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.

முதுகுவலி

முதுகுவலியால் அவஸ்தைப்படுபவர்கள், வலியைக் குறைத்துக் கொள்வதற்கு உடலைச் சிறிது வளைத்து மெலிதான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். முதுகுவலியை, மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட, உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சாலச்சிறந்தது.

படிப்பாற்றல்

தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும். அது புதிய மூளை அணுக்களை உருவாக்கி, மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். இதனால் புதிய விஷயங்களைப் படிக்கவும், புரிந்து கொள்வதற்கும் உங்களால் முடியும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டால், படிப்புத் திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவை அதிகரிக்கும்.

"சிந்தித்த வேளையில்' நூலிலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com