முந்தி இருப்பச் செயல்: அதிவிரைவு அறிமுகம் - 3

அமெரிக்காவில் உயர்கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்கும்போது உங்களை நன்கறிந்த மூன்று பேராசிரியர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வாங்கி அனுப்பச் சொல்வார்கள்.
முந்தி இருப்பச் செயல்: அதிவிரைவு அறிமுகம் - 3

அமெரிக்காவில் உயர்கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்கும்போது உங்களை நன்கறிந்த மூன்று பேராசிரியர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வாங்கி அனுப்பச் சொல்வார்கள். அந்தக் கடிதங்கள் உங்களின் தகுதிகள், திறமைகள், கடிதம் எழுதுபவருக்கு உங்களோடு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள் பற்றியெல்லாம் விலாவாரியாக விவரிக்கும்.

பொதுவாகவே இந்த சிபாரிசுக் கடிதங்கள் நிறைகளைத்தான் பேசுமேத் தவிர குறைகளைக் குறிப்பிடாது. ஒரு பேராசிரியருக்கு உங்களைப் பற்றிய பெரிய மதிப்பீடு ஏதுமில்லையென்றால், கடிதம் எழுதுவதை நாசூக்காகத் தவிர்த்துவிடுவார். பொய்யாகப் புகழ்ந்துரைக்க மாட்டார்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு வானளாவப் புகழ்ந்து எழுதும் பழக்கமெல்லாம் அங்கே இல்லை.

புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் சிபாரிசுக் கடிதம் எழுதுகிறார் என்றால், உங்களுக்குக் கிடைக்கப்போகும் வாய்ப்பைவிட தனது பெயர் கெட்டுப்போகக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். எனவேதான் இந்த சிபாரிசுக் கடிதங்கள் பெரும் மதிப்பும், முக்கியத்துவமும் பெறுகின்றன.

சில வருடங்களுக்கு முன்னாள், நம்மூர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குணநலன்கள் குறித்த சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் ஓர் ஆங்கிலச் சான்றிதழ் படிவம் ஒன்றை அச்சடித்து வைத்திருப்பார்கள். அதில் உங்கள் பெயர், ஊர் போன்ற விவரங்களைக் கோடிட்ட இடங்களில் நிரப்பி, கையெழுத்துப் போட்டுத் தருவார்கள்.

நாளடைவில் இந்தச் சான்றிதழ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் யாரிடம் கேட்டாலும் கிடைக்கும் என்கிற நிலை எழுந்தது. சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என யார் வேண்டுமென்றாலும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்கிற நிலை எழுந்தபோது, அந்த அமைப்புமுறை முடிவுக்கு வந்தது.

ஆனால் அமெரிக்காவில், உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், மனப்பூர்வமாக உங்களை விரும்பாமல், மனசாட்சியோடு உங்களைப் பரிந்துரைக்கமுடியும் என்கிற உறுதி இல்லாமல், யாரும் சிபாரிசுக் கடிதம் எழுதித்தர மாட்டார்கள்.

எனது உயர்கல்வி விண்ணப்பத்துக்காக பேராசிரியர் ஒருவரிடம் சிபாரிசுக் கடிதம் ஒன்றைக் கேட்டேன். நான் கேட்டுக்கொண்ட பேராசிரியர்தன்னை வந்து சந்திக்கச் சொன்னார். நான் போய் அமர்ந்ததும், "உன்னுடைய பலங்கள், பலவீனங்கள் பற்றி விரிவாகச் சொல்' என்று கேட்டுக்கொண்டார்.

நான் நம் நாட்டுப் பாணியில் மிகவும் அடக்கமாக, பணிவாக "எனக்கு என்ன தெரியும், அப்படியொன்றும் பெரிய திறமைகள் உள்ளவன் அல்ல' என்கிற பாணியில் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னை நிறுத்தச் சொல்லிவிட்டு, ""இந்தக் கேள்வியை ஓர் அமெரிக்க மாணவனிடம் நான் கேட்டிருந்தால், "நான் வானத்தை வில்லாய் வளைப்பேன், காற்றை அம்பாய்த் தொடுப்பேன்' என்று சொல்லியிருப்பான். நீயோ இந்தியர்களுக்கே உரிய தன்னடக்கத்தோடு உன்னையே முழுமையாக மறுதலித்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்'' என்று என் தவறைச் சுட்டிக்காட்டினார்.

"உன்னை நீ வானளாவப் புகழ வேண்டாம்; ஆனால் அதே நேரம் உன்னை முற்றிலுமாக அழித்துவிடவும் வேண்டாம்; மீண்டும் பேசுவோம்'' என்று சொல்லிவிட்டு சில நாட்கள் கழித்து என்னைப் பற்றி மீண்டுமொருமுறைப் பேசவைத்தார்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் (474) என்கிறது வள்ளுவம். தன்னைத் தானே வியந்து போற்றிப் பேசுவது என்பது சுயபுராணம் பாடுவது. இடம், பொருள், ஏவல் எதைப்பற்றியும் கவலைப்படாது, "நான், என்னை, என்னுடைய' என்று தன்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பதும், செப்பிக் கொண்டிருப்பதும் கிட்டத்தட்ட ஒருவித மனப் பிரச்னைதான். ஆனால் தன்னுடைய தகுதிகள், திறமைகள், அனுபவங்கள் பற்றி தேவைப்படும் இடங்களில், கேட்க விரும்பும் நபர்களிடம் தன்னம்பிக்கையோடு எடுத்தியம்புவது முற்றிலும் வேறானது.

நீங்கள் உயர்கல்வி வாய்ப்போ, அல்லது வேலைவாய்ப்போ, அல்லது ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளராகும் வாய்ப்போ தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் உங்களைப்பற்றிப் பேசியாக வேண்டும். அப்படிப் பேசும்போது, உங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அதில் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படியானத் தேவையற்ற தகவல்கள் இருக்கக்கூடாது. நீங்கள் பேசுவதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்க வேண்டும், ஆனால் தலைக்கனம் இருக்கக் கூடாது. வாய்ப்பளியுங்கள் எனும் விண்ணப்பம் இருக்க வேண்டும்; ஆனால் தரம்தாழ்ந்த கெஞ்சல் இருக்கக் கூடாது.

காலை நடைப்பயிற்சியின்போது ஒரு பெரிய தொழிலதிபரை பூங்காவில் சந்திக்கிறீர்கள்; அல்லது விமானநிலையத்தில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் மேலாளரைச் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மிகக்குறைவான அந்தக் கால இடைவெளியில் அவரிடம் உங்களை அறிமுகப்படுத்தி, நீங்கள் திறமையுள்ளவர், இன்றியமையாதவர் என்று அவரை உணரச்செய்து, உங்களுக்கு வேண்டிய வாய்ப்பைப் பெறவேண்டும். எப்படி?

ஒரு மின்தூக்கியில் ஒரு பிரபலத் தொழிலதிபரை சந்திக்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். பதினைந்தாவது மாடியிலிருந்து தரைத்தளத்துக்கு அந்த மின்தூக்கி வந்துசேருவதற்கு ஆகும் ஒன்றிரண்டு நிமிடங்களில், உங்களைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொல்லி, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதையும் கேட்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை உப்ங்ஸ்ஹற்ர்ழ் டண்ற்ஸ்ரீட் அல்லது உப்ங்ஸ்ஹற்ர்ழ் டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்று சொல்கிறார்கள். அதிவிரைவு அறிமுகம்! இதற்கு ஆறு படிநிலைகள் இருக்கின்றன.

உங்கள் பெயர்,

உங்கள் கல்வித்தகுதி மற்றும் தற்போதைய வேலை பற்றிய சுருக்கமான விவரம்,

அந்த கல்வி நிறுவனம், வேலை நிறுவனம் பற்றிய சுருக்கமான தகவல்கள்,

நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறவர் நீங்கள் பேசுவதைக் கேட்க வேண்டிய தேவை,

உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகப் புரியவைத்தல்,

இந்த அதிவிரைவு உரையாடலை இதமாக நிறைவு செய்தல்.

ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

வணக்கம் அம்மா. என் பெயர் வெற்றிமாறன்.

தில்லியிலுள்ள லாய்ட் கல்லூரியில் முதுகலை சட்டம் படித்துவிட்டு, சென்னையிலுள்ள பிராவ்டா சட்டக் குழுமத்தில் தற்காலிகமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன்.

லாய்ட் கல்லூரி பன்னாட்டுச் சட்டப் படிப்பில் விசேஷ கவனம் செலுத்துகிறது; அதேபோல, பிராவ்டாவும் பன்னாட்டுச் சட்டப் பிரச்னைகளில் தலையிட்டு உலகெங்கும் பல வழக்குகள் நடத்துகிறார்கள். நான் சிறையில் நெடுங்காலம் அடைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்த வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

உங்களின் அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் அரசியல் கைதிகளுக்காக பல்வேறு சட்ட உதவிகள் செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நான் பன்னாட்டு அரசியல் கைதிகள் உரிமைகளுக்காக வேலை செய்யப் பெரிதும் விரும்புகிறேன்.

அம்மாதிரி வாய்ப்புகள் உங்கள் நிறுவனத்தில் இருந்தால் தயவுசெய்து என்னைப் பரிசீலிப்பீர்களா?

உங்கள் நேரத்துக்கும், நான் பேசுவதைக் கேட்டதற்கும் மிக்க நன்றி. உங்களோடு மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு, என்னைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அனுப்பி வைக்கிறேன். வணக்கம்.

உங்களைப் பற்றிய இம்மாதிரியான "அதிவிரைவு அறிமுகம்' ஒன்றை தயாரித்து மனதில் நிறுத்திவைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் பயன்படும்.
(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com