முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
தகவல் திருட்டு... தடுக்கலாம் வாங்க!
By | Published On : 03rd March 2020 09:57 AM | Last Updated : 03rd March 2020 09:57 AM | அ+அ அ- |

செல்லிடப் பேசிகளில் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்குகள் குறித்த தகவல்கள், ஏடிஎம் பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) உள்பட அனைத்து முக்கிய தகவல்களையும் சேகரித்து வைக்கின்றனர். கணினி மற்றும் மடிக்கணினிகளிலும் இது போன்ற தகவல்களை சேமித்து வைக்கின்றனர். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நம்மில் பலர் சிந்திப்பதில்லை.
கடந்த ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் (தகவல்கள் ) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதிலும் இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் எளிதாக திருடப்படுகின்றன.
இணையத்தில் நாம் சில தகவல்களை தேடும்போது அல்லது சில இணையதளங்களை பார்வையிடும்போது, நமது செல்லிடப் பேசியில் உள்ள தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதித்துவிடுவோம். இவையே நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கும், வரம்பு மீறலுக்கும் அடிப்படையாக அமைகின்றன.
நமது தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிகள்...
தகவல்கள் திருடப்பட்டுள்ளதா?
செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றில் நாம் சேகரித்து வைத்திருக்கும் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதா, நமது தகவல்களை திருட யாரேனும் முயற்சித்துள்ளனரா என்பது குறித்து முதலில் நாம் கண்டறிய வேண்டும். have i been pwned -இந்த இணையதளத்தின் மூலம் நமது தகவல்கள் மற்றவர்களால் திருடப்பட்டுள்ளதா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் நமது மின்னஞ்சல் முகவரி, பழைய கடவுச்சொற்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நம் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ள இயலும்.
கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மாற்றம்
மேற்கண்ட இணையதளத்தின் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக நமது செல்லிடப்பேசி, கணினி உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்.
கடவுச் சொல்லை அமைக்கும்போது, ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக அமைக்க வேண்டும். எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பெயர், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எழுத்து மற்றும் எண் ஆகியவை கலந்த கலவையாக கடவுச்சொல் இருப்பது சிறந்தது.
கடவுச்சொல் டைரி
குறிப்பிட்ட இணையதளங்கள், செயலிகள் என ஒவ்வொன்றுக்கும் நாம் ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்த நேரிடும். அவ்வாறு பல்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்தும்போது, அவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாகிடும். அதனால், கடவுச்சொற்களைப் பராமரிக்கும் வகையில் ஒரு சிறிய டைரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனிலும் பல கடவுச் சொல் டைரிகள் உள்ளன. நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று ஆன்லைன் டைரிகளில் அனைத்தையும் சேகரித்து நமக்கு நாமே தீங்கு செய்து கொள்ள வேண்டாம்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்
இன்றைய பரபரப்பான வாழ்வில் வங்கிகளுக்கு நேரில் சென்று பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. லட்சக்கணக்கான பணத்தை இணையத்தில் நிமிடத்தில் பரிமாற்றம் செய்யும் வசதியையே அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு எளிதான கடவுச் சொற்களை வைக்காமல் சற்று கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், ஒரேயொரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நமது வங்கிக் கணக்கை பயன்படுத்தும் வசதியை மாற்றி, நமக்கு மட்டும் தெரிந்த தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு கேள்விகளாக வைப்பது, சில புகைப்படங்களை அடையாளம் காண்பதற்காக வைப்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது நமது தரவுகள் பாதுகாக்கப்படும்.
ad trafficking
சில இணையதளங்களில் தகவல்களை பார்க்கும்போது, நடுவில் விளம்பரங்கள் வரும். அதை நாம் கிளிக் செய்யும்போது, அது வேறு ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும். இத்தகைய விளம்பரங்கள் மூலமாகவும் நமது தகவல்கள் திருடப்படுவதாக கூறுகின்றனர். அதனால், நமது செல்லிடப்பேசி, கணினி உள்ளிட்டவற்றில் விளம்பரங்கள் வரும்போது அதை நாம் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். நமது செல்லிடப்பேசி மற்றும் கணினிகளில் ad trafficking
அம்சத்தை turn off செய்து வைக்க வேண்டும்.
BROWSER
மிக முக்கியமான தகவல்களை நாம் இணையத்தில் பதிவிட நேரிடும்போது, கூகுள் குரோம், மொஸிலா உள்ளிட்ட BROWSER- களை பொதுவாக பயன்படுத்தாமல், அதில் உள்ள incognito tab என்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நமது தகவல்கள் BROWSER-களில் சேமிக்கப்படுவது தடுக்கப்படும்.
virtual private network (vpn)
இணையத்தில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறிது பணம் செலவு செய்து தனியே vpn பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி மூலம், மற்றவர்கள் நமது தகவல்களை பார்வையிடுவது தடுக்கப்படும். மேலும், பொது இடங்களில் wi-fi வசதிகள் உள்ளிட்டவற்றை நாம் பயன்படுத்தும்போது, நமது தகவல்கள் திருடப்படாமல் இருப்பதை ஸ்ல்ய் உறுதி செய்யும்.
-க. நந்தினி ரவிச்சந்திரன்