முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
நம்மால் எதுவும் இல்லை!
By DIN | Published On : 03rd March 2020 08:27 AM | Last Updated : 03rd March 2020 08:27 AM | அ+அ அ- |

இச்சை உலகம், சிந்தனை உலகம், பொருள்களாலான உலகம் என்பன மூன்று உலகங்கள் - சுருங்கச் சொன்னால், அனைத்துமே. கேள்வி என்னவெனில், இவை அனைத்துமே நம்மை அச்சுறுத்தும் சமயம் நாம் என்ன செய்வது? உண்மையில் இந்த மூன்று உலகங்களும் நல்லவையும் அல்ல. தீயவையும் அல்ல; சரியானவையும் அல்ல, தவறானவையும் அல்ல. அவை நம்மை அச்சுறுத்துவதும் இல்லை, நமக்குச் சாதகமாக இருப்பதும் இல்லை. அவை இருக்கின்றன. அவ்வளவே.
எல்லாமே நமது சிந்தனையில் தோன்றுபவைகளே. நமது கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. மழை, காற்று, வெப்பம், குளிர்ச்சி, நாம் பிறந்து வளர்ந்து , வயது முதிர்ந்து இறப்பது அனைத்துமே வந்து போகக் கூடியவை. தாமாக நடப்பவை. வாழ்க்கையின் உண்மைகளான இவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இவற்றை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வதே இவற்றைக் கடந்து செல்லும் ஒரே வழியாகும்.
(ஒப்புக் கொள்வது என்பது, இவற்றை நம்முடைய மனதால் எதிர்க்காமல் இருப்பது என்று பொருள், ஏன் இவ்வளவு வெயில் அடிக்கின்றது, ஏன் இவ்வளவு மழை பொழிகின்றது, ஏன் மழையே பெய்யவில்லை, ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கின்றது - என்பன போன்ற எண்ணங்கள் நடப்பவற்றை மனதால் எதிர்ப்பதாகும்).
மூன்று உலகங்களும் வரட்டும், செல்லட்டும். குரு கண்டோ சொன்னதைப் போல ஒரு மலையைப் பெயர்த்து நம்மால் எடுக்க முடியாது என்கிற உண்மையை நாம் ஒப்புக் கொள்வோம் என்பதைப் போல நம்மால் எதுவும் இல்லை என்கிற உண்மையையும் ஒப்புக் கொண்டு அமைதியாக நாம், நாமாக வாழ்வது ஒன்றுதான் வழி.
ந.முரளிதரன்
மொழிபெயர்த்த "ஜென் பாடங்கள் ' என்ற நூலிலிருந்து...