மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 59: வலிமை, வலிமையால் மதிக்கப்படும்!

ஜனவரி 14, 1996 அன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகருமான ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு கடிதம் எழுதினார்.
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 59: வலிமை, வலிமையால் மதிக்கப்படும்!

ஜனவரி 14, 1996 அன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகருமான ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு கடிதம் எழுதினார். அப்போது உலகத்தில் நடைபெற்று வரும் அணு சோதனை மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தம் CTBT(Nuclear Testing and Comprehensive TestBan Treaty) தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியா தயார் நிலையில் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விரைவில் சோதிக்க அனுமதி வேண்டும் என்றும் அனுமதி கேட்டார்.

அணு ஆயுத சோதனையை உலக அளவில் நிறுத்துவது பற்றியும், அணு ஆயுதப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அணு ஆயுதப் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒரு படியாக 1954 - ஆம் ஆண்டில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்டது தான் (CTBT) அணு சோதனை மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தம். அணுசக்தி சோதனை மீதான தடை அமெரிக்காவின் முக்கிய தேசிய பாதுகாப்பு நோக்கமாக 1950 -களின் பிற்பகுதியிலிருந்து ஜனாதிபதி டுவைட் டி. ஐசனோவர் முன்முயற்சியில் யு.எஸ்-யுகே-யுஎஸ்எஸ்ஆர் (US-UK-USSR) ஆகிய நாடுகள் விரிவான சோதனை தடை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது.

1994-96 வரை, உலக நாடுகள் ஒன்றிணைந்து விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தை (சி.டி.பி.டி) அமுல்படுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தின. இது அனைத்து அணுசக்தி சோதனை வெடிப்புகளையும் தடைசெய்கிறது மற்றும் அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுக்கவும் அணு ஆயுதப் போட்டியைத் தடுக்கவும் இந்த ஒப்பந்தத்தில் ஷரத்துகள் ஏற்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 24, 1996 அன்று, CTBT இல் கையெழுத்திட்ட முதல் நாடு அமெரிக்கா, இது அனைத்து அணு ஆயுத சோதனை வெடிப்புகள் அல்லது பிற அணு வெடிப்புகளையும் தடைசெய்கிறது. ஆனால் செனட் 1999 - இல் ஒப்புதலை நிராகரித்தது. இந்த ஒப்பந்தம் இன்னும் 2020-லும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆக, 1950 முதல் 2020 வரை ஏற்கெனவே அணு ஆயுதங்களை உருவாக்கிய நாடுகள், மற்ற நாடுகள் அணு ஆயுத சோதனை செய்வதற்கு தடை விதிப்பதில் குறியாக இருந்தார்கள். இந்த 5 அணு ஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதை விட, மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய விடக்கூடாது என்பது தான் இந்த நாடுகளின் எண்ணமாக இருந்தது. ஆனால் இன்று வரை இவர்களால் இந்த அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை அமுல் படுத்த இயலவில்லை.

எனவே தான், அப்துல்கலாம் இவர்களது எண்ணத்தை உணர்ந்து, 1996- இல் அன்றைய பிரதமர் நரசிம்மராவை அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது; நாம் அணு சக்தி சோதனையை நடத்தி இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும்; வலிமை ஒன்று தான் வலிமையை மதிக்கும் என்று உறுதியாக நின்றார். இந்தியாவிடம் அணு ஆயுதம் இருந்தால் தான்- அந்த வலிமை ஒன்று தான் - இந்தியாவை போரில்லா அமைதியான வளர்ச்சியை முன்னெடுக்க வித்திடும் என்று வலியுறுத்தினார். பொருளாதார சீர்திருத்தத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்திய முதல் பிரதமர் நரசிம்மராவும் அதை ஏற்றுக் கொண்டார். இதைப் பற்றி மேலும் கலாம் என்னிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள் முக்கியமானவை.

ஜனவரி 19, 1996 அன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரசிம்மராவ் தனது முதன்மை செயலாளரையும், வெளிநாட்டு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு செயலாளர்களையும் சந்தித்து சிடிபிடி குறித்த அப்துல் கலாமின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ள ஆலோசனை செய்துவிட்டு, அணுசக்தி சோதனையின் மூலம் வளர்ந்த நாடுகள் நம்மீது பொருளாதாரத் தடை விதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மற்றொரு பகுப்பாய்வைத் தயாரிக்குமாறு ராவ் நிதி அமைச்சகத்திடம் கேட்டார். அதே நேரத்தில் தொழில்நுட்பத் தடை விதித்தால் நமது நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப, இராணுவ, விண்வெளி, அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஏற்படும் தடைகளை எப்படிச் சமாளிப்பீர்கள் என்று அப்துல்கலாமிடம் விவாதித்தார்.

19 டிசம்பர் 1995 -இல் இந்தியா அணு சக்தி சோதனைக்குத் தயாராக இருந்ததை தனது உளவு செயற்கைக்கோள் படங்கள் மூலம் அறிந்து கொண்ட அமெரிக்கா, இந்தியா அணு சக்தி சோதனையை மேற்கொள்ள கூடாது என்று மிகப்பெரிய அழுத்தம் கொடுத்தது. அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைத்து இந்தியா அணுசக்தி சோதனையை இப்போது நடத்தவில்லை என்று சொல்லியும் அமெரிக்கா திருப்தி அடையவில்லை.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் 21 டிசம்பர் 1995 காலையில் பிரதமர் ராவை அழைத்தார். வழக்கமான நடைமுறை பேச்சுவார்த்தை பரிவர்த்தனைகளுக்கு பிறகு CTBT ஒப்பந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பற்றி சொல்லிவிட்டு, ""உங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கையின்படி இந்தியா அணு சக்தி சோதனை நடத்தவில்லை என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் எங்களது உளவு செயற்கைக்கோளின் படங்களின்படி இந்தியா அணு சக்தி சோதனைக்கான முன்னேற் பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறதாக அறிகிறோம். அதற்கான விளக்கம் என்ன?'' என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பிரதமர் நரசிம்மராவ், ""அது எங்களின் அணுசக்தி கட்டமைப்பின் வழக்கமான பராமரிப்பு தான்'' என்று சொல்லி சமாளித்துவிட்டு, "" இப்போது சோதனை இல்லை'' என்று மறுத்திருக்கிறார். அமெரிக்கா தெரிந்து கொண்டதை அடுத்து அணு ஆயுத சோதனையை பிரதமர் ராவ் இன்னும் 4 வாரத்திற்கு தள்ளி வைத்தார். 1996 பிப்வரியில் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். அது தொடர்ந்து தாமதமானது. 1996 மார்ச் மாத இறுதியில், பில் கிளிண்டனிடமிருந்து ராவிற்கு இரண்டாவது அழைப்பு வந்தது. ராவ் அணு ஆயுத சோதனையை செய்ய வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். கிளின்டன் சரியாக என்ன சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ராவ் ஒரு வேளை சோதனை நடத்தினால் ஏற்படும் பின் வரும் விளைவுகளைச் சமாளிக்க தேவையான முன்னேற்பாட்டில் கவனம் செலுத்தியதால் மீண்டும் தாமதமானது. இதிலிருந்து இந்தியா அணுஆயுத வல்லமை பெற்ற நாடாக மாறிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா எவ்வளவு கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தது என்பது தெளிவாகிறது.

இந்திய தேசிய பாராளுமன்ற தேர்தல்கள் மே 1996 - இல் திட்டமிடப்பட்டிருந்ததால், பிரதமர் நரசிம்மராவ் அடுத்த இரண்டு மாதங்களில் தீவிர பிரச்சாரத்தில் இருந்தார். மே 8 -ஆம் தேதி இரவு 9 மணிக்கு அப்துல் கலாமிற்கு ஒரு தகவல் வந்தது, உடனடியாகப் பிரதமரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பிரதமர் ராவ் அவரிடம், “""கலாம், அணுசக்தித் துறை மற்றும் உங்கள் குழுவுடன் அணு ஆயுத சோதனைக்குத் தயாராக இருங்கள். நான் திருப்பதிக்குச் செல்கிறேன். எனது உத்தரவுக்காக நீங்கள் காத்திருங்கள்.

DRDO-DAE அணிகள் அணு ஆயுத சோதனை நடவடிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும்''” என்று உத்தரவிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவு அவர் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்டு என்.டி.ஏ வெற்றி பெற்றது என்பதால், இப்போது சோதனை செய்ய வேண்டாம் என்று ராவ் உத்தரவிட்டார். இந்த பின்னடைவு கலாமிற்கு சோர்வை ஏற்படுத்தியது. திடீரென்று அன்று நள்ளிரவு நரசிம்மராவிடம் இருந்து கலாமிற்கு அழைப்பு வந்தது. ""அணு சக்தி துறை தலைவர் சிதம்பரத்தை அழைத்து கொண்டு வாருங்கள், நாம் மூவரும் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகவிருக்கிற அடல் பிகாரி வாஜ்பாயைச் சந்தித்து அணுசக்தி சோதனை திட்டத்தின் தயார் நிலையை முற்றிலும் விளக்க வேண்டும்'' என்று அழைத்தார். அதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவில் இவர்கள் மூவரும் வாஜ்பாயைச் சந்தித்து இதன் அனைத்து முன்னேற்பாடுகளையும், அமெரிக்காவின் தொடர்ந்த அழுத்தத்தையும், அணு சக்தி திட்டத்தினால் ஏற்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் 1996 மே 16 அன்று பிரதமராக பொறுப்பேற்றார். இருப்பினும், வாஜ்பாய் அரசாங்கம் வெறும் 13 நாட்கள் நீடித்ததால் அணுசக்தி சோதனைத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.

""அணுசக்தித் திட்டத்தின் தொடர்ச்சியை அடுத்த பிரதமர் வாஜ்பாய் மூலம் உறுதி செய்யும் ராவின் செயல், "அரசியலை விட தேசம் பெரியது'” என்று நம்பிய ஓர் அரசியல்வாதியின் முதிர்ச்சியையும் அவரது தேசபக்தியையும் வெளிப்படுத்துகிறது'' என்று டாக்டர் கலாம் குறிப்பிட்டார். பிரதமர் வாஜ்பாய் இரண்டாவது முறையாக 1998- இல் வெற்றி பெற்ற பின்பு தனது முதல் பணியாக அணு ஆயுதச் சோதனையை விரைவாக நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். டாக்டர் கலாமையும், டாக்டர் சிதம்பரத்தையும் அழைத்தார் பிரதமர் வாஜ்பாய். சோதனைக்கான நாள் குறிக்கப்பட்டது. "ஆபரேஷன் சக்தி 98' திட்டம் ரகசியமாக பிறந்தது.

ஆபரேஷன் சக்தி 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செயல்படத் தொடங்கியது, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இராணுவ சீருடை அணிந்த மேஜர் ஜெனரல் பிருத்விராஜ் என்று அழைக்கப்பட்டார். கலாமும், சிதம்பரமும் இதற்கான போர்த்தந்திரங்களை வகுத்தார்கள், எல்லாம் ரகசியமாக நடந்தது.

டி.ஆர்.டி.ஓவின் மூன்று ஆய்வகங்கள் வெடிகுண்டுகளுக்கான கூறுகளை வடிவமைத்தல், சோதனை செய்தல் மற்றும் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டன, இதில் மேம்பட்ட டெட்டனேட்டர்கள், வெடிப்பு மற்றும் உயர் மின்னழுத்த தூண்டுதல் அமைப்புகள் ஆகியவை அடங்கும். கர்னல் உமாங் கபூரின் கட்டளையின் கீழ் நான்கு இந்திய ராணுவ லாரிகளில் குண்டுகள் கொண்டு செல்லப்பட்டன; மே 1, 1998 அன்று அதிகாலை 3 மணிக்கு BARC இலிருந்து அனைத்து சாதனங்களும் இடமாற்றம் செய்யப்பட்டன. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, குண்டுகள் இந்திய விமானப்படையின் AN-32 இல் படைத் தலைவர் மகேந்திர பிரசாத் சர்மா விமானத்தின் தலைமையில் ஜெய்சால்மேருக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை இராணுவப் படகில் பொக்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டன. அணுகுண்டு வெடிப்பு சாதனங்கள், சாதனங்கள் தயாரிப்பு கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டு, "பிரார்த்தனை மண்டபம்' என்று பெயரிடப்பட்டது.

சோதனைத் தளங்கள் இரண்டு அரசாங்க குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டன. முதல் குழுவில் தெர்மோநியூக்ளியர் சாதனம் (சக்தி I), பிளவு சாதனம் (சக்தி II) மற்றும் துணை கிலோட்டன் சாதனம் (சக்தி III) ஆகியவை இருந்தன. இரண்டாவது குழுவில் மீதமுள்ள IV துணை கிலோட்டன் சாதனங்கள் சக்தி IV மற்றும் V ஆகியவற்றைக் கொண்டிருந்தன. முதல் குழு மே 11 -ஆம் தேதியும், இரண்டாவது குழு மே 13 -ஆம் தேதியும் சோதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. தெர்மோநியூக்ளியர் சாதனம் "வெள்ளை மாளிகை' என்ற தண்டு குறியீட்டில் வைக்கப்பட்டது. இதை போல வெடிகுண்டுகள் "தாஜ்மஹால்', "கும்பகர்ணன்' என்று பெயரிடப்பட்டு மே 10, 1996 அன்று தயார் நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக இராணுவ அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இது திட்டமிட்ட சோதனை நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே இருந்தது. தண்டுகள் எல் வடிவத்தில் இருந்தன. சோதனை சாதனத்திற்கான கிடைமட்ட அறை இருந்தது.

சோதனைகளின் நேரம் உள்ளூர் வானிலை நிலைமைகளைப் பொருத்தது.காற்று முக்கியமான காரணியாக இருந்தது. சோதனைகள் நிலத்தடி இருந்தன, ஆனால் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் யுனைடெட் கிங்டம் நடத்திய சோதனைகளின் போது ஏற்பட்ட பல தண்டு முத்திரை தோல்விகள் (Shaft Seal Failures) காரணமாக, தண்டுக்கு சீல் வைப்பது கசிவு-ஆதாரம் என்று உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. அதிகாலை வாக்கில், காற்று வீச்சு குறைந்தது, வெடிப்பு சோதனை வரிசை தொடங்கப்
பட்டது.
அமெரிக்காவின் உளவு செயற்கைகோள்களின் கவனத்தைத் திசை திருப்ப ஏவுகணைகளை ஒரிஷா வீலர் தீவில் இருந்து தொடர்ச்சியாக ஏவச் செய்தார் அப்துல்கலாம். சோதனை தள தயாரிப்புகளுக்குப் பொறுப்பான டி.ஆர்.டி. ஓவின் டாக்டர் கே.சந்தானம், சோதனை கவுண்ட் டவுனை செயல்படுத்தும் இரண்டு விசைகளை வரம்பு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம். வாசுதேவுக்கு வழங்கினார். அனைத்து சோதனை குறிகாட்டிகளும் இயல்பானவை என்பதைச் சரிபார்க்கும் பொறுப்பு. குறிகாட்டிகளைச் சரி பார்த்த பிறகு, வாசுதேவ் தலா ஒரு சாவியை BARC மற்றும் DRDO இன் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார். அவர்கள் கவுண்ட்டவுன் முறையை ஒன்றாகத் திறந்தனர். 11 மே 1998 -இல் மாலை 3.45 மணிக்கு அணு சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை வெற்றி பெற்றது. 200 கிலோட்டான்கள் வரை பிளவு (Fission) மற்றும் தெர்மோநியூக்ளியர் முறையில் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இந்தியா பெறுவதற்கான முக்கிய நோக்கத்தை இந்த சோதனைகள் வென்று எடுத்தன. போக்ரான்- ஐஐ இன் வெடிப்புகள் ஒவ்வொன்றும் "பல பத்தாண்டுகளாக மற்ற அணு ஆயுத நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளுக்குச் சமம்' என்று கலாமும், சிதம்பரமும் உறுதி செய்தார்கள். பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி இந்தியாவை முழு அளவிலான அணுசக்தி நாடாக அறிவித்தது. சோதனைகளின் விளைவாக அமெரிக்கா உட்பட பல முக்கிய வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தடைகளை விதித்தன. இதனால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை இந்தியா எப்படிச் சமாளித்தது? தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com