Enable Javscript for better performance
ஓங்கி அடிச்சா... ஒன்னுமே நடக்காது தம்பி!- Dinamani

சுடச்சுட

     ஓங்கி அடிச்சா... ஒன்னுமே நடக்காது தம்பி!

    Published on : 17th March 2020 01:18 PM  |   அ+அ அ-   |    |  

    im4

    யுத்தம் ஒரு சிறந்த தீர்வு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த யுத்தத்தில் வென்றவர் எவருமில்லை; அடுத்த யுத்தத்தில் வெல்லப் போவதும் யாருமில்லை."
     -எலினோர் ரூஸ்வெல்ட்
     "நாங்கள்லாம் சிங்கம்டா, "சிறுத்தைடா, புலிடா, யானைடா, கரடிடா, நரிடா, ஓநாய்டா' என்றெல்லாம் கொக்கரிக்கும் மனிதர்கள் பலர், அவர்கள் தங்களை"நான் மனிதன்டா' என்று ஏன் சொல்லிக் கொள்வதில்லை? தங்களை மனிதரல்லாத, ஏதோ மிருகங்களாக சித்திரித்துக் கொள்ள விரும்புபவர்கள், அச்சித்திரிப்பை தங்களது தகுதியாக, கம்பீரமாகக் கருதுவதோடு, தாங்கள் பயங்கரக் கோபக்காரர்கள் என்பதையே இதன் மூலம் சொல்ல விழைகின்றனர்.
     "நாங்கள்லாம் பயங்கரக் கோபக்காரர்கள்... பார்த்துக்க'" என்கிற வசனத்தை அவர்களது அடையாள அட்டையைப்போல அடிக்கடி பயன்படுத்தியவர்கள் எல்லாரும், அவர்கள் பெற்றதை விட, இழந்ததே அதிகம். இது நமக்கு வாழ்க்கையும், வரலாறும் சொல்லும் பாடம்.
     வீரத்தைப் படம் பிடித்து காட்டுகிறேன் என்றே எத்தனையோ திரைப்படங்களில் ஆதிக்கத்தையும், அடக்குமுறையும், அராஜகத்தையும், அக்கிரமத்தையும் தொடர்ந்து காட்டிவந்ததன் விளைவுதான், படித்த, படிக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் அவர்களது புஜ பலத்தை வீரமாகக் கருதுகின்ற அவலநிலை.
     "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா! பாக்குறியா... பாக்குறியா' என்று கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிகர்கள் உரக்கப் பேசுவதை திரையில் பார்க்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அது பிழைப்புக்கு உதவாது. வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை; வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைசிறந்த வீரன். அப்படியென்றால் படித்த மாணவனுக்கு, படித்து முடித்து முனைப்போடு உழைக்கின்ற இளைஞனுக்கு, எது அழகு? வீரம் என்ற பெயரில் தறிகெட்ட கோபத்தை வெளிப்படுத்தவது அல்ல என்பது நமக்கெல்லாம் தெளிவாகும்.
     காவல்துறையினரின் சமீபத்திய குற்றக் குறிப்புகள், புள்ளிவிவரங்கள் நமக்கு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தருகின்றன. இன்று மதுரை போன்ற மாநகரங்களில் நடக்கும் பெரும்பாலான கொலைகள் இருபதிற்கும் குறைவான வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களால் செய்யப்படுகின்றன என்றும், அக்கொலைகளுக்கான நோக்கமோ, காரணமோ எதுவுமே இல்லாமலும் இருக்கிறது எனவும் தெரிவித்திருப்பது நமது அதிர்ச்சியைப் பன்மடங்காக்குகிறது. குற்றவாளிகளாக ஆக்கப்படும் இத்தகைய மாணவர்களுக்கு தெரிவதில்லை, வீரம் என்கிற பெயரில் வெளிப்படும் கோபம்... நம் அறிவை, உடலை, நடத்தையை, குடும்பத்தை, சுற்றத்தை, வாழ்க்கையை, எதிர்காலத்தை, எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியது என்று.
     ஒன்றை ஆக்க வல்லது வீரம். ஒன்றை அழிக்க வல்லது கோபம். வீரம் என்பது வாழ்வை அழிப்பதல்ல; வாழ்வை அளிப்பது என்கிற உண்மையை எப்படியோ நம் இளைஞர்களுக்கு உணர்த்த, புரிய வைக்க நாம் தவறிவிட்டோம். கோபம் வரும்போது மனதைக் கட்டுப்படுத்துவதே ஒரு வீரனுக்கு அழகு; அணிகலன்.
     "கோபம் கொண்டவன் ஓர் அரைப் பைத்தியம்' என்று ஓர் ஆங்கில பழமொழியும், "கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் முடிவு வருத்தம்' என்று ஓர் அரபிப் பழமொழியும், "கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்று ஒரு தமிழ் பழமொழியும் கூறுகிறது. அது போல "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற தமிழ் பழமொழியையும், ஒளவை பாட்டியின் "ஆறுவது சினம்' என்கிற ஆத்திச்சூடியையும் நம்மில் பலர் படித்திருப்போம். இத்தகைய பழமொழிகள் உணர்த்துவதெல்லாம், மிதமிஞ்சிய கோபம் மனிதனைப் பாழாக்கிவிடும் என்பதே!
     திருவள்ளுவரும் தன்னுடைய பங்குக்கு வெகுளாமை என்னும் அதிகாரத்தில் பத்துக் குறள்களிலும் கோபத்தினால் நேரும் துன்பங்களைப் பற்றி விவரித்திருக்கிறார். அளவுக்கு மீறி சினம் கொண்டவர் உயிருடன் இருப்பினும் செத்தவராகவே கருதப்படுவர் என்று "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை"
     (குறள்: 310) என்றும், கோபத்தை துறந்தவர் உயர்ந்தவராகவே போற்றப்படுவார் என்றும் கூறுகிறார்.
     "சினமென்னும் சேர்ந்தாரைக்
     கொல்லி இனமென்னும்
     ஏமப் புணையைச் சுடும்'
     என்கிற குறளில், "சேர்ந்தாரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்' என்கிறார்.
     கோபம் ஒருவரை அழித்து விடும் என்று சான்றோர்கள் இத்தனை பேர் இவ்வளவு சொல்லியிருந்தாலும், "ரெளத்திரம் பழகு'" என்று பாரதி சொல்லியிருப்பதை இங்கு தொடர்புப்படுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். காரணம் "பாதகம் செய்பவரைப் பார்த்தால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்று பாரதி கூறியதின் அர்த்தம், தேவையான நேரங்களில், தவறு நடக்கின்ற இடத்தில் அதைத் தட்டிக் கேட்பதற்கு கோபம் கொள்வதில் தவறில்லை என்பதுதான்.
     இங்கு கோபம் ஆக்கும்; உருவாக்கும். குலைந்து கிடப்பதைச் சீராக்கும். வளைந்து கிடப்பதை நேராக்கும். மொத்தத்தில் அனைவருக்கும் நன்மை மட்டுமே செய்வது "ரெளத்திரம்'. ஆனால், சினம் என்று அறிப்படும் கோபம் சீரழிவை மட்டுமே தரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
     கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும்; மறுதரப்பினரையும் பாதிக்கும். அந்த அடிப்படையில், "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா! பாக்குறியா பாக்குறியா' என்று யார் சொன்னாலும், எவ்வளவு பிரம்மாண்டமாக உரக்கச் சொன்னாலும், ஒன்னுமே நடக்காது என்பது மட்டுமே உண்மை.
     பார்க்க வேண்டியவனும் இருக்க மாட்டான்; பார்க்கச் சொல்றவனும் இருக்கமாட்டான் என்பதை படித்த, படிக்கின்ற மாணவர்கள் மற்றும் நாம் அனைவரும் புரிந்து கொள்வோம்.
     - கே.பி. மாரிக்குமார்
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp