Enable Javscript for better performance
நமது சவால்கள்: பொருளாதாரத் தடை... தொழில்நுட்பத் தடை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள்- Dinamani

சுடச்சுட

  நமது சவால்கள்: பொருளாதாரத் தடை... தொழில்நுட்பத் தடை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

  By DIN  |   Published on : 17th March 2020 12:51 PM  |   அ+அ அ-   |    |  

  PONRAJ

  மிச்சமெல்லாம் உச்சம் தொடு 60
  இந்தியா 1998 -ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 தேதிகளில் நடத்திய 5 அணு ஆயுத சோதனைகள் உலகின் பெரும்பகுதியை சீற்றப்படுத்தியது. அமெரிக்காவிற்கு கடும் கோபம் ஏற்பட்டது. "இந்தியாவின் அணுசக்தி சோதனைகள் நியாயமற்றவை என்று நான் நம்புகிறேன்; இந்தியா தங்கள் பிராந்தியத்தில் ஓர் ஆபத்தான புதிய உறுதியற்ற தன்மையை தெளிவாக உருவாக்குகிறார்கள். இதன் விளைவாக, யு.எஸ். சட்டத்தின்படி, இந்தியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளேன்' என்று 1998 மே, 13 - இல் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் தடை விதித்தார். 
  அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் (NFU - No First Use) என்ற தனது கொள்கையை அறிவித்தது அணுசக்தி வல்லமை பெற்ற இந்தியா. அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி ஓர் எதிரியால் முதலில் தாக்கப்படாவிட்டால், அணு ஆயுதங்களை முதல் போர் வழிமுறையாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அணுசக்தி வல்லமை பெற்ற நாடுகள் அறிவித்து அதன்படி நடப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய குறிக்கோள். இதே கொள்கைகள் முன்பு இரசாயன மற்றும் உயிரியல் போருக்கும் பயன்படுத்தப்பட்டன. சரி யாரும் பயன்படுத்தவில்லையே... அப்புறம் எதற்கு இந்த அணு ஆயுதம் என்ற கேள்வி சரிதானே?
  ஒரு நாடு அணு ஆயுதம் வைத்திருந்தால் அது மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல். இன்னொரு நாடு அணு ஆயுதம் தயாரித்திருந்தால், இரண்டு நாடுகளுக்கு இடையே யுத்தம், மிரட்டல்... யார் இந்த உலகத்தில் பலம் வாய்ந்த நாடு என்று. 5 நாடுகள் அணு ஆயுத பலம் வைத்திருந்தால், உலகத்தில் மற்ற நாடுகளுக்கு இந்த நாடுகளைப் பற்றிய பயம். மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்ட 5 நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, யு.கே, பிரான்சு, சீனா. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல். 
  உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் சீனாவும், இந்தியாவும். சீனாவிடம் அணு ஆயுதம் இருக்கும் போது, இந்தியாவிடம் அணுஆயுதம் இருந்தால் தான் இரண்டு நாடும் அமைதிப் பாதையில் செல்லும். இல்லையென்றால் சீனா பொருளாதார பலத்தில் மட்டுமல்ல, அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டும் இந்தியாவை மிரட்டிக்கொண்டிருக்கும். இந்தியா அணு ஆயுதம் செய்துவிடக் கூடாது என்பது இந்த 5 அணு ஆயுத நாடுகளின் எண்ணம். அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்ததினால்தான் இந்தியா மீது இந்த நாடுகளுக்கு கடும் கோபம். இந்தியா மீது பொருளாதாரத் தடை, தொழில்நுட்பத் தடை விதித்தது. பொருளாதார பலத்தில் சீனா இந்தியாவை விட பன்மடங்கு பெரியது. அணு ஆயுத பலத்தில் சீனாவிற்கு நிகராக இந்தியாவை வல்லமை பெற்ற நாடாக மாற்றினார்கள் அப்துல் கலாமும், சிதம்பரமும், அன்றைய பாரத பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் ஆகியோருடைய தலைமையில். 1998- இல் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு இந்தியா, 2020- இலும் இந்தியா அணு சக்தி வல்லமை பெற்ற நாடுதான். அமெரிக்கா மற்றும் உலகத்தின் தொழில்நுட்பத் தடையை மீறி இன்றைக்கு இந்தியா போர்விமான தொழில்நுட்பத்திலும், ராக்கெட் தொழில்நுட்பத்திலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும், அணு மின்சாரத் தொழில் நுட்பத்திலும் பல்வேறு நிலைகளில் சுயசார்பை எட்டியிருக்கிறது. 
  இந்தியாவில் 1990 - களில் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார் பிரதமர் நரசிம்மராவ். அது இந்தியாவை லைசன்ஸ் ராஜ் அரசாட்சியில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது. அன்றிலிருந்து தான் இந்தியா பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்தது. 1998- இல் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா. ஆனால் 28 ஆண்டுகள் கழித்து 2020- இலும் இன்றும் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடையவில்லை; வீழ்ச்சியடைந்து இருக்கிறது. 
  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்க நாற்கர சாலை அமைத்து பொருளாதாரத்தை மேலும் ஊக்கப்படுத்தியவர் வாஜ்பாய். ஆனால் இன்றைக்கு பொருளாதாரத்தில் இந்தியா கோட்டை விட்டு விட்டு செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் சாதிக்க தவறிய இந்தியா தொழில்நுட்பத்தில் தடையை மீறி எப்படிச் சாதித்தது?
  இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியதும், அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் பொருளாதாரத் தடையும், தொழில்நுட்பத் தடையும் விதித்த பின்பு ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. விமான தொழில் நுட்ப திட்டத்தில் அமெரிக்காவுடன் பணியாற்றிய 20 இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் தடைவிதிக்கப்பட்ட மறுநாள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 1992 -ஆம் ஆண்டில் ஆரம்பித்த எல்.சி.ஏ போர் விமானத்திற்காக டிஜிட்டல்-ஃப்ளை-பை-வயர் கண்ட்ரோல் சிஸ்டம் (Digital Fly-by-Wire Control System - 
  DFCS) உற்பத்திக்காக BAE சிஸ்டம்ஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இந்தியாவுடன் இணைந்து உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. 1998 -இல் தடை விதிக்கப்பட்டதும் இத்தனை வருடம் இணைந்து தயாரித்த அனைத்து உபகரணங்கள், வடிவமைப்பு திட்டங்கள், மென்பொருள், திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தங்களிடம் வைத்துக்கொண்டு, ஒப்பந்தத்தை முறித்து விஞ்ஞானிகளை திருப்பி அனுப்பியது. 6 ஆண்டு கால இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, பொருள்கள் அனைத்தும் வீணாகின. 

  இந்தியா அணுசக்தி வல்லமை பெற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது என்ற மகிழ்ச்சி ஒருபுறம். ஆனால் எங்கள் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் சோகம். அனைவரும் எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தொழில்நுட்ப மேம்பாட்டினால், நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாமல் எவ்வளவு சோதனைகளை, தடைகளை விதித்து நம்மை முன்னேறவிடாமல் வைப்பதற்கு கடினமாக உழைக்கிறார்கள் என்ற சோகம். சோர்ந்து போன எங்களுக்கு ஊக்கம் தேவைப்பட்டது. உடனே அப்துல்கலாம் வருகிறார் வந்து அனைத்து விஞ்ஞானிகளையும் அழைத்து பேச போகிறார் என்ற செய்தி வந்தது. உடனே அனைவருக்கும் அவரிடம் இருந்து ஏதேனும் முக்கிய செய்தி இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 
  நாங்கள் அனைவரும் ADA கேன்டீனில் உள்ள ஹாலில் கூடிஇருந்தோம். அப்துல் கலாம் வந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் முதல் ஆளாக கை கொடுத்து நான் வரவேற்றேன். அப்துல் கலாம் உரையாற்றினார். அணு ஆயுத சோதனைக்குப் பின் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை பற்றி சொல்லிவிட்டு அதை பிரதமர் வாஜ்பாய் பார்த்துக்கொள்வார். ஆனால் இந்தியாவின் மீது ஏவப்பட்ட தொழில்நுட்பத் தடையை நமது ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் நாம் தான் வெற்றிகரமாக தகர்த்தெறிய வேண்டும். இந்த தொழில்நுட்பத் தடையினால் ஏற்பட்ட மனிதவள இழப்பு, பணமிழப்பு, அதனால் வரும் பல்வேறு பின்னடைவுகளை பற்றி எடுத்துச் சொல்லிவிட்டு, சில கடினமான யோசனைகளையும், நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். 
  பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சிக் கூடங்களில் இருந்து NATIONAL CLAW TEAM (Control LAW TEAM) விஞ்ஞானிகள் கொண்ட விமான கட்டுப்பாட்டு தொழில்நுட்ட விதிகளை உருவாக்கி, டிஜிட்டல் பிளை பை வயர் கன்ட்ரோல் சிஸ்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் தொழில் நுட்பத்திற்காகச் சார்ந்திருந்த இந்தியா, இந்த தடையை ஒரு சவாலாக எடுத்து நாம் அந்த இலக்கிற்குள் செய்து முடிக்க வேண்டும்; அனைத்து விஞ்ஞானிகளும், இந்த திட்டம் வெற்றியடைய ஒற்றுமையோடு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முழு அணியும் அமெரிக்காவின் தொழில்நுட்பத் தடையை ஒரு தேசிய சவாலாக எடுத்துக் கொண்டது. 
  "இந்தத் திட்டத்தை முடிக்க மூன்று வருடங்கள் ஆகப்போகின்றன என்றால் இரண்டு ஆண்டுகளில் செய்வோம்'' என்றார். ""செய்வோம் நாங்கள்'' என்றோம். "இது இருபது மில்லியன் டாலர்களை எடுக்கப் போகிறது என்றால் அதை பத்து மில்லியன் டாலர்களில் செய்வோம்'' என்றார். ""செய்து முடிப்போம் சார்'' என்றோம். எங்கள் வேலை நேரம் எட்டு மணி நேரம் அல்ல. நாங்கள் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்து பணியை முடிப்போம் என்று அனைவரும் உறுதியளித்தோம். இந்திய அறிவியல் சமூகத்தின் சக்தியையும், நம் நாட்டின் சக்தியையும் அப்துல் கலாம் எங்களுக்கு உணர்த்திய நேரம், அதை நான் உணர்ந்தேன். தொழில்நுட்பத் தடை அல்லது பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் எந்த நாடும் நம்மை ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை நான் உணர்ந்தேன். நமது விஞ்ஞானிகளின் சக்தி நம்மை அடக்கி ஆள நினைக்கும் எந்த நாட்டினது குரூர புத்தியையும் தோற்கடிக்கும் என்று அப்துல் கலாம் எங்களுக்கு உணர்த்திய தருணம் அது. 
  இதன் பின்னணி என்ன? இந்த தேசிய சவாலை எப்படி சமாளித்தோம்? 1992 - ஆம் ஆண்டில் ஏ பி ஜே அப்துல் கலாம் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அவர்களின் நோக்கம்: இலகு ரக போர் விமானம் (LCA-தேஜாஸ்) திட்டத்திற்காக ஃப்ளை-பை-கம்பி (Fly-by-Wire) விமானக் கட்டுப்பாட்டு விதிகளை (CLAW - Control LAW) உருவாக்குவது. இந்த குழு அப்துல் கலாம் கொடுத்த கனவை நனவாக்க உறுதி எடுத்துக்கொண்டு களம் இறங்கியது. 
  1992 -ஆம் ஆண்டு ஜூன் 2 -ஆம் தேதி, கலாம் பெங்களூரில் CLAW குழுவின் முதல் கூட்டம் நடந்தது, சி.எஸ்.ஐ.ஆர்-என்ஏஎல் (CSIR-NAL) இந்த பணிக்கு தலைமையிடமாக இருந்தது. இந்த குழுவினர் அடிப்படை பூஜ்ஜியத்திலிருந்து எல்லாவற்றையும் தொடங்கினார்கள். அவர்களுக்குள் அப்துல் கலாம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்த குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் வேலை செய்தனர். 
  28 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய CLAW குழுவை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுடன் முக்கியமாக ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்ய முடிவு செய்தார் அப்துல் கலாம். 1992 - ஆம் ஆண்டில், தேஜாஸுக்கு CLAW - ஐ உருவாக்குவது உட்பட ஆறு முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆலோசனையைத் தேடும் உலகளாவிய டெண்டரை ADA உருவாக்கியது. 
  CLAW - ஐத் தவிர்த்து, ஐந்து தொழில்நுட்பங்களுக்கும் அவர்கள் பதில்களைப் பெற்றனர், CLAW இராணுவம் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் என்பதால் அதை இந்தியாவுக்கு கொடுக்கவோ, அல்லது அந்த தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்கவோ எந்த நாடும் தயாராக இல்லை. 
  இந்த செயல்பாட்டில், LCA திட்டத்தின் முக்கியமான பகுதியான வேக் என்கவுண்டர் சிமுலேஷனை CLAW குழு உருவாக்கி தேர்ச்சி பெறவேண்டும். வேக் என்கவுண்டர் சிமுலேஷன் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான மாடலிங் கட்டுப்பாட்டு செயலியாகும். விமானத்தை ஏழு கூறுகளாகப் பிரிப்பதன் மூலமும் ஒவ்வொரு கூறுகளிலும் கணினி சக்திகள் மற்றும் தருணங்களைக் கணக்கிடுவதன் மூலமும் ஏரோடைனமிக்ஸ் உருவகப்படுத்தப்படுகிறது.
  HOTAS (ஹேண்ட்ஸ் ஆன் úத்ராட்டில்-அண்ட்-ஸ்டிக்) பைலட் தனது பணியின் போது முழுமையான சுலபமாக இருப்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் தேஜாஸ் ஒரு நிலையற்ற தளம். எனவே அதன் மூளையாகச் செயல்படக்கூடிய முக்கிய பாகம் தான் CLAW, அதை உருவாக்க வேண்டும். 
  இந்திய விமானப்படையின் இணைக்கப்பட இருக்கிற இலகு ரக போர் விமானம் LCA-தேஜாஸின் வெற்றிகரமான இயக்கும் பகுதியாக CLAW சிஸ்டமும் ஒன்றாகும் இதை வெற்றிகரமாக செயல்பட வைப்பதின் மூலம் தான் முக்கியமான ஆரம்ப செயல்பாட்டு அனுமதி (ஐஓசி) பெறுவதற்கான முதல் கட்டத்திற்கே வரமுடியும். 
  LCA இலகு ரக போர் விமானத்திற்கான முக்கியமான தொழில்நுட்பங்களை இந்தியா இதுவரை உருவாக்காதநிலையில் நாம் அவற்றை உருவாக்க வேண்டிய நிலை ஒரு புறம். ஒரு சில தொழில்நுட்பங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியோடு உருவாக்கினாலும் - ஆரம்ப நாட்களில் இலகு ரக போர் விமானம் உருவாக்கும் திறன், நமது பத்திரிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் விமானப் படையினரால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் இறக்குமதி சுலபம், ஊழலுக்கு வாய்ப்பு, அந்நியச் செலாவணி வீண். ஆனால் இந்தியாவில் சுயசார்பாக உருவாக்குவது மிகவும் கடினம், ஆனால் ஒரு முறை செய்துவிட்டால் நாம் நமது போர்விமானங்களுக்கு அந்நிய நாடுகளை நம்பி இருக்கத் தேவையில்லை. நமது பாதுகாப்பு கொள்முதல் கொள்கையின் விளைவாக ஏற்படும் தாமதம் மற்றும் செயல்திறன் குறைவு, குறைந்த சம்பளத்தால் வெளிநாடுகளுக்கு நாம் இழக்கும் விஞ்ஞானிகள், இதற்கு மத்தியில் இந்தத் திட்டத்தில் வேலை செய்த விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி தான் நாம் வென்றோம். 
  எப்படி வென்றோம்? தொழில்நுட்பத் தடையை எப்படி நாம் சமாளித்தோம்? தொடர்ந்து பார்ப்போம். 
  உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
  பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
  vponraj@live.com
  (தொடரும்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp