தண்ணீரில்லாமல் கார்களைக் கழுவலாம்!

"மிகவும் தாகமாக இருப்பவருக்கு உலகத்தில் எல்லாவற்றையும் விட, ஒரு சொட்டு தண்ணீர்தான் மிகவும் முக்கியமானது' -
தண்ணீரில்லாமல் கார்களைக் கழுவலாம்!

"மிகவும் தாகமாக இருப்பவருக்கு உலகத்தில் எல்லாவற்றையும் விட, ஒரு சொட்டு தண்ணீர்தான் மிகவும் முக்கியமானது' - இது ஏதோ மிகைப்படுத்திக் கூறுவது அல்ல. கடுமையான தாகத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு உண்மையென்று. 
கடந்த ஆண்டு மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட தகவல் ஒன்றில், இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புதுதில்லி உள்ளிட்ட 21 நகரங்களில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. 600 மில்லியன் மக்கள் மிகவும் கொடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது. 
ஆனால் நாம் ஒவ்வொரும் ஒரு நாளைக்கு சராசரியாக 135 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். 
அதுவும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றைக் கழுவுவதற்கு நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மிக மிக அதிகம். வாளியில் தண்ணீரைப் பிடித்து ஒரு காரை மிகச் சிக்கனமாகக் கழுவினோம் என்றால் கூட குறைந்தது 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுவே தண்ணீர் பைப்பில் இருந்து ரப்பர் ட்யூப் மூலமாக காரைக் கழுவினோம் என்றால் 90 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. காரைக் கழுவும் சர்வீஸ் ஸ்டேஷன்களில் ஒரு காரைக் கழுவ 200 லிட்டர் தண்ணீர் வரை பயன்படுத்துகிறார்கள். நமது நாட்டில் இப்போது 23 கோடி கார்களுக்கும் அதிகமாக உள்ளன. அவற்றைக் கழுவ ஓராண்டில் எவ்வளவு தண்ணீரை நாம் செலவழிக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால்... குற்ற உணர்வில் நாம் மூழ்கிவிடுவோம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட செலவழிக்காமல் காரைக் கழுவும் முறையைக் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், நிதின் சர்மா. அவரும் அவருடைய மனைவி ஷாமா சர்மாவும் சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோ வாட்டர்லெஸ் (GO WATERLESS) என்ற நிறுவனத்தை மும்பையில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இப்போது நாக்பூரிலும் அதன் கிளை நிறுவனம் தோன்றியிருக்கிறது. 
தண்ணீரில்லாமல் காரைக் கழுவுவதா? என்ற கேள்வி எல்லாருக்கும் எழும். அந்தக் கேள்வி நிதினுக்கும் எழுந்தது.
நிதின் சர்மா ராஜஸ்தானில் உள்ள IASE கல்விநிறுவனத்தில் பிபிஏ பட்டப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்ததும் வேலை தேடிக் கொண்டிருக்காமல், அவருடைய தந்தை சத்தீஷ்கரில் நடத்தி வந்த வாகனத் தொழிலில் ஈடுபட்டார். அங்கே ஒரு கார் மெக்கானிக் வொர்க்ஷாப்பை நடத்தி வந்தார். பேட்டரிகளை விற்பனை செய்து வந்தார். கார்களைப் பழுது பார்க்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். 

கார்களைப் பழுது பார்த்து, கடைசியில் வாட்டர் சர்வீஸ் செய்து தந்தார். ஆனால் அங்கே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது.
"தண்ணீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் பழுது பார்க்க விட்டுச் சென்ற கார்களைக் கழுவத் தண்ணீர் இல்லை. காரைக் கழுவாமல் சர்வீஸ் செய்து தந்ததற்கு நிறைய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டோம். அந்த ஆண்டு மட்டுமில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் அதேபோன்று தண்ணீர்ப் பற்றாக்குறை. இதற்கு என்னதான் தீர்வு? தலையைப் பிய்த்துக் கொண்டேன். தண்ணீர் இல்லாமல் காரைக் கழுவ முடியுமா? என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 
சில கெமிகல் என்ஜினியர்களின் உதவியோடு நானோ டெக்னாலஜிமுûயைப் பயன்படுத்தி, தாவரங்களில் இருந்து காரின் அழுக்குகளை நீக்கும் பசை போன்ற திரவத்தை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். இயற்பியல், அதி நவீன மாலிகுலர் வேதியல் என எனது படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் என் தலையை மூழ்கடித்து காரைக் கழுவும் பசை போன்ற திரவத்தைக் கண்டுபிடித்தேன். 

இந்தத் திரவம் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் கேடு ஏற்படுத்தாதது. அதை காரின் வெளிப்புறத்திலோ உட்புறத்திலோ லேசாகத் தடவி, துடைத்தால் போதும். காரில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். காரில் கீறலை ஏற்படுத்தாது. காரின் எல்லாப் பகுதிகளிலும் கண்ணாடியிலும், பிரேக்கிலும் இந்தத் திரவத்தைப் பயன்படுத்தி தூய்மையாக்கலாம். 
நானும் என் மனைவியும் சேர்ந்து ரூ.10 லட்சம் முதலீட்டில் மும்பையில் வாட்டர்லெஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்'' என்கிறார் நிதின். 
இப்போது நாக்பூரிலும் இந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 1000 நிலையான வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு இப்போது உள்ளனர். 23 பேர் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். 
"ஒரு காரைச் சுத்தம் செய்ய 100 மி.லி. ஸ்பிரே போதுமானது. நாங்கள் இதுவரை 1000 லிட்டர் ஸ்பிரேவை கார்களைக் கழுவுதற்காகப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றால் எத்தனை கார்களைச் சுத்தம் செய்திருப்போம் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். தாவரங்களில் இருந்து இந்த பசை போன்ற திரவத்தைச் செய்வதற்கான மூலப்பொருள்களை பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்கிறோம். 
காரைச் சுத்தம் செய்ய தண்ணீர் மட்டுமல்ல, மின்சாரமும் தேவையில்லை. கைகளால் ஸ்பிரே செய்து கைகளாலேயே துடைத்துவிடலாம். அதுமட்டுமல்ல, இதைப் பயன்படுத்துவதால் காரில் துரு பிடிப்பதில்லை. காரில் பூசப்பட்டுள்ள பெயிண்ட்களில் கீறல் விழுவதில்லை. இதற்கென நாங்கள் ஒரு செயலியை உருவாக்கியிருக்கிறோம். வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்தி கார் கழுவும்படி கூறினால், அவர்களுடைய வீட்டுக்கே சென்று எங்களுடைய பணியாளர்கள் காரைச் சுத்தம் செய்து தருவார்கள். இதனால் வாடிக்கையாளர்களின் நேரமும் மிச்சமாகிறது. மக்கள் குடியிருக்கும் நிறைய காலனிகளில் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்'' என்கிறார் நிதின்.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தண்ணீரில்லாமல் கார்களைக் கழுவும் நிறுவனங்களை ஏற்படுத்துவதுதான் நிதினின் கனவாக இப்போது இருக்கிறது.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com