Enable Javscript for better performance
உலகச் சுழற்சி உண்மையெனக் காட்டியவர்!- மு.கலியபெருமாள்- Dinamani

சுடச்சுட

  

  உலகச் சுழற்சி உண்மையெனக் காட்டியவர்!- மு.கலியபெருமாள்

  By DIN  |   Published on : 24th March 2020 01:13 PM  |   அ+அ அ-   |  

  im4

  சென்ற இதழ் தொடர்ச்சி...
  நியூட்டனின் முதல் இயக்க விதியை அதாவது(Newton first law of motion) வேறு வெளி ஆற்றலினால் (external forces) பாதிக்கப்படாமல் இருக்கும் போது ஒரே ஒழுங்காகவே செல்கிறது - என்ற விதியை நன்றாக அறிந்திருந்த போக்கால்ட் தன்னுடைய ஊசல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தார். ஊசலுக்குக் கீழ் உள்ள மணல் வட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். இந்த நேரத்தில் எல்லாருக்கும் ஒரு கேள்வி எழுவது இயற்கையே. அதாவது பூமியோடு சேர்ந்திருக்கும் வீடு சுழலும்போது, வீட்டோடு இணைந்திருக்கும் ஊசலும் சுற்ற வேண்டியதுதானே என்பதுதான் அக்கேள்வி. ஆனால், ஊசல் மட்டும் சுற்றவில்லை. அதற்குக் காரணம், கம்பியில் தொங்கும் குண்டானது எந்த திசையில் வேண்டுமானாலும் சுற்ற முடிகிறது. ஆனால், பூமியோடு இணைந்திருக்கும் வீடு, பூமி சுற்றும் போது தானும் சேர்ந்து பூமி சுற்றுகிற திசையிலேயே சுற்ற வேண்டியிருக்கிறது. இவ்வாறு உலகச் சுழற்சி உண்மை என்பதை மெய்ப்பித்துக் காட்டினார் போகால்ட். தன்னுடைய ஆராய்ச்சியை விவரித்து 1851 -ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் பிரெஞ்சு அறிவியல் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
  பின்னர் தன்னுடைய ஆராய்ச்சியைப் பாரிஸ் வான ஆராய்ச்சி நிலையத்திலும் வேறு பல இடங்களிலும் பெரிய அளவில் செய்து காட்டினார். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாரிசில் நடத்திக் காட்டிய 
  பரிசோதனையே. போகால்ட் இந்தப் பரிசோதனையைப் பாரிசிலுள்ள உரோமர் கோயிலில் இரண்டாம் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்கிச் செய்து காட்டினார். அந்த கோயிலில் உள்ள பெரிய வளைவு மாடத்தில் (dome) 67 மீட்டர் நீளமுள்ள எஃகு கம்பியில் 28,000 கிராம் எடையுள்ள ஈயக் குண்டைத் தொங்கவிட்டு அந்த பரிசோதனையைச் செய்துகாட்டினார். இந்த ஈயக்குண்டு தாமிரத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது. 1855- இல் நடந்த பொருட்காட்சி ஒன்றில் இந்த சோதனையைச் செய்து காட்டும் ஊசலின் அசைவுகள் குறையாமல் ஒரே அளவாக வைக்க ஒரு மின்காந்த முறையைப் பயன்படுத்தினார்.
  "போகால்ட் ஊசலின்' அடிப்படைக் கூறுகளை பெஞ்சமின் டிராப்பர் என்பவர் ஒரு கட்டுரையில் அழகாக குறிப்பிடுகிறார். அதாவது, ஊசல் ஆடத் தொடங்கியதும் ஊசலின் ஆடுதளம்(Plane of Pendulums) உடனே வலது பக்கமாக சுற்ற தொடங்குகிறது. குண்டின் அடியில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊசியானது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் மணலில் ஒரு புதிய இடத்தில் வரிவரியாகச் சிறுசிறு கோடுகளை போடுகிறது. ஒரே அளவாக ஆடிக் கொண்டிருக்கும் ஊசல் ஒரு வட்டத்தைச் சுற்றிக் கோடுபோடுகிறது. ஆனால், குண்டானது ஒரே இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஆடும் ஊசலின் மாறாத தளத்திற்கு அடியில் கட்டடத்தின் தரை உண்மையாகவும் கண்ணுக்குத் தெரியும் படியும் நகர்ந்து சென்றது. வலம்புரியாகச் (Clockwise) சுற்றிய நிலமானது, ஊசல் இடம்புரியாகச் (AntiClockwise) சுற்றுவது போன்ற தோற்றத்தை அளித்தது. இவ்வாறு பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்ற உண்மையை 1851 -ஆம் ஆண்டு போகால்ட் மெய்ப்பித்தார். 
  இவ்வாறு உலகச் சுழற்சியை உண்மையெனக் காட்டிய போகால்ட் ஒரு சாதாரண பத்திரிகையாளரின் மகனாக 1819 -ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18- ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரியூ டி ஆசாஸ் என்ற ஊரில் பிறந்தார். இயற்கையிலேயே உடல் நலம் குன்றி வளர்ந்து பள்ளியிலும் கல்லூரியிலும் தன் திறமை வெளித் தெரியாமல் வாழ்ந்து வந்த போகால்ட், மாணவர்களின் உள்ளத்திலும் உலக வரலாற்றினை விளக்கும் உயர்ந்த மாளிகைகளிலும் பொறித்து வைக்கும் படியான சிறந்த நிலையை அடைந்தார். 
  ஏனென்றால் "போகால்ட் ஊசலின்' தத்துவத்தை விளக்குவதற்காக உலகத்தின் பல முக்கியமான நகரங்களிலும் அது வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற போகால்ட் ஊசல்கள் லண்டனில் உள்ள தெற்கு கென்லிங்ஸ்டன் அறிவியல் பொருட்காட்சி சாலை, வாஷிங்டனிலுள்ள தேசிய அறிவியல் கழகம், லாஸ் ஏஞ்சலிலுள்ள கிரி வித் பிளானடோரியம், சான்பிரான்சிஸ்கோவிலுள்ள கலிபோர்னியா அறிவியல் கழகம், சிகாகோவில் உள்ள அறிவியல் தொழிலியல் பொருட்காட்சிச் சாலை முதலிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 
  இதுபோல் இன்னும் பல பொருட்காட்சிச் சாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், வான ஆராய்ச்சி நிலையங்களிலும் போகால்ட் ஊசல்கள் இருக்கின்றன.
  சாதாரண இயந்திர விளையாட்டுக் கருவிகள் செய்வதில் வியப்பூட்டும் திறமை பெற்றிருந்த போகால்ட்- ஒரு மருத்துவ மாணவனாகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர்- பாரிஸ் ஆராய்ச்சிச் சாலையில் வேலையில் அமர்ந்து அரசியல் கழகத்தினரின் "காப்ளி' பதக்கம் பெற்ற போகால்ட் உலக சுழற்சியை மெய்ப்பித்த தனது ஊசலை விட அறிவியல் உலகிற்கும் மக்களுக்கும் செய்த தொண்டு மிகவும் பெரியது.
  அவருடைய படிப்பின் கதை, அவருடைய கண்டுபிடிப்புகளே. மருத்துவப் படிப்பை விட்டு விலகிய போகால்ட் முதன் முதலில் டாக்டரின் ஒளிப்படம் (photo) எடுக்கும் முறையில் சில சீர்திருத்தங்கள் செய்தார். பிறகு 1850 - இல் சுற்றும் கண்ணாடி முறையினால் (Rotating mirror method) ஒளியின் வேகம் நீரில் குறைவாகவும், காற்றில் மிகுதியாகவும் இருப்பதையும் கண்டார். இதுபோலவே ஒளி ஊடுருவும் ஒவ்வொரு ஊடகங்களிலும் (media) ஒளியின் வேகம் வேறுபடுகிறது என்பதைக் காட்டினார். பூமியின் சுழற்சியைச் செய்துகாட்ட 1852-இல் சுழல் மானி (gyroscope) என்ற கருவியைக் கண்டுபிடித்தார். 
  பின்னர் 1855- இல் காப்பிடப்படாத கடத்திகளைச் (uninsulated coductors) சுற்றி உண்டாகும் மின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தார். இதற்குப் "போகால்ட் மின் ஓட்டம்' அல்லது "எட்டி மின் ஓட்டம்' என்று பெயர். அடுத்த ஆண்டிலேயே பிரதிபலிக்கும் தொலைநோக்கிக்கு (reflecting telescope) வேண்டிய வட்டமானது நீள் வட்டமானது மான (ellipticel) கண்ணாடிகள் செய்வதற்கு ஒரு முறையைக் கண்டார்.
  இவ்வாறு அல்லும் பகலும் அறிவியல் கூட்டங்களில் அயராது உழைத்து வந்த அவருக்கு மற்ற அலுவல்களையும் கவனிக்க எப்படி தான் நேரம் கிடைத்ததோ? 1845 முதல் தனது வாழ்க்கையின் இறுதி வரையில் journal des debats என்ற செய்தித்தாளின் அறிவியல் பகுதியை மேற்பார்த்து வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகிய காற்றில் ஒளியின் வேகத்தை 1862 -ஆம் ஆண்டில் கணக்கிட்டார். 

  அதாவது காற்றில்- ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 கல் என்பதை அளவிட்டார். 1851-இல் போகால்ட் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப் பட்டார். பிறகு 1864-இல் அறிவியல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரும் பெருமதிப்பும் பெற்றுப் புகழ் ஏணியில் உச்சியில் நின்ற போகால்ட் திடீரென்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அன்று அவருடைய ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த கொடுநோய். உலகம் சுற்றுகிறது என்ற உண்மையை இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டிய அந்த உத்தமரை இந்த உலகத்தில் இருந்து பிரித்து விட்டது. ஆம்; 1868 -ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11-ஆவது நாள். தனது 49-ஆவது வயதில் அவர் நேசித்த அவர் வாழ்ந்த பாரிஸ் மாநகரத்திலேயே அவர் இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். என்றாலும், இந்த உலகம் உள்ளவரை, இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவருடைய பெயரும் புகழும் இந்த உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai