வீட்டில் இருந்து வேலை: என்ன செய்ய வேண்டும்?

கரோனா வைரஸ் பாதிப்பினால் பல தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது
 வீட்டில் இருந்து வேலை: என்ன செய்ய வேண்டும்?

கரோனா வைரஸ் பாதிப்பினால் பல தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு நிறுவனங்களிலும் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே போய், கரோனா வைரஸ் தொற்றால் தேவையில்லாமல் பாதிக்கப்படக் கூடிய நிலையைத்தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
 அலுவலகத்தில் வேலை செய்ததைப் போன்று முழுத்திறனுடன் வீட்டில் இருந்து ஒருவர் வேலை செய்ய முடியுமா? அலுவலகச் சூழலை வீட்டுக்குக் கொண்டு வர முடியுமா? என்ற கேள்வி எழுவது இயல்பு.
 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஏற்கெனவே வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
 வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, வேலைக்கு இடைஞ்சலான பல விஷயங்கள் நம் எதிரே அணிவகுத்து நிற்கக் கூடும்.
 நமது குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாகப் பேசுவதைப் போல பேசித் தொல்லை கொடுப்பார்கள், குழந்தைகள் வேலை செய்யும்போது நமது மடியில் அமர்ந்து கொள்ளும், கவனத்தைத் திசை திருப்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒலி, வேலைக்குப் போகும்போது நாம் கடைப்பிடித்த உணவு நேரங்கள், இதர செயல்கள் எல்லாம் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது மாறிவிடும்... இப்படி இடைஞ்சல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 வீட்டில் அலுவலக வேலைகளைச் செய்யும்போது, அலுவலகத்தில் எந்த அளவுக்கு எந்தத் திறனோடு நீங்கள் வேலை செய்தீர்களோ, அதே அளவுக்கு அதே திறனோடு வீட்டிலும் வேலை செய்தாக வேண்டும். அதற்கு என்ன செய்வது?
 ஒவ்வொரு நாளும் திட்டமிடுங்கள்:
 வீட்டில் இருந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டால், முதலில் இன்று என்ன என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று முழுமையாகத் திட்டமிட வேண்டும். எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பதைத் திட்டமிட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்று இவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துக் கொள்வது நல்லது.
 யாரோடு எல்லாம் இன்றைக்கு தொலைபேசியில் பேச வேண்டும்? எப்போது வெப் கான்ஃபரென்ஸ் நடத்த வேண்டும்? சக பணியாளர்களுடன் அல்லது வாடிக்கையாளர்களுடன் என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும்? என்பதையெல்லாம் நாளின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
 குழுவினருடன் தொடர்பில் இருங்கள்: உங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் குழுவினருடன் ஒரு நாளின் தொடக்கம் முதல் அன்றைய வேலை முடியும் வரை எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை உடனே எடுத்துப் பேச வேண்டும். இ மெயில்களை உடனுக்குடன் பார்க்க வேண்டும். உடனடி தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் இருக்கும்போது பிற பணியாளர்களுடன் என்ன தகவல்களை எல்லாம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வீர்களோ, அதேபோல் வீட்டில் இருந்து வேலை செய்யும்போதும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 அலுவலகம் போல வீட்டை மாற்றி அமையுங்கள்: அலுவலக வேலை செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்கென ஒரு தனி அறையை ஒதுக்குவது நல்லது. வீட்டில் உள்ளவர்கள் அல்லது கூடத் தங்கியிருக்கும் அறை நண்பர்கள் வேலை செய்யும்போது இடையில் வந்து குறுக்கிட்டுப் பேசக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருங்கள். அதற்கு உங்கள் வேலை முறைகளை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
 அதேபோன்று வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, தேநீர் அருந்த, உணவு உண்ண, நொறுக்குத் தீனிகள் தின்ன குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதை எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் மீறக் கூடாது. அன்றைய வேலை நேரம் முடியும் வரை இதை மிகவும் கண்டிப்பாக நீங்கள் பின்பற்றினால்தான் உங்களுடைய வேலையை நீங்கள் திட்டமிட்டபடி செய்து முடிக்க முடியும்.
 வேலை செய்வதற்கான கருவிகளை ஒழுங்கமையுங்கள்: வீட்டில் இருந்து வேலை செய்யும் போது லேப் டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தொலைத்தொடர்புக்காக இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இவையெல்லாம் பழுதாகாத வகையில் இயங்க வேண்டும். எதிர்பாராத மின்தடைகளைச் சமாளிக்க லேப்டாப், செல்பேசி போன்றவற்றை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இணையதளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த சிக்னல் கிடைப்பதில் தொந்தரவு இல்லாத தொலைத் தொடர்பு நிறுவனங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இன்வெர்ட்டரைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும், உங்களுடைய அன்றைய வேலை உடனே நின்று போய்விடக் கூடிய நிலை ஏற்பட்டு, பல எதிர்பாராத பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

விடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீங்கள் உங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளருடன் பேச வேண்டியிருக்கலாம்; வேலைக்குப் புதிதாகக் சேரும் ஒருவருக்கான நேர்காணலை நீங்கள் நடத்த வேண்டியிருக்கலாம். எனவே, தொலைத் தொடர்புக்காக நீங்கள் பயன்படுத்தும் இமெயில், கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ், ஸ்கைப் உள்ளிட்ட அனைத்திற்குமான கட்டணங்களை உடனுக்குடன் செலுத்தி, அவற்றின் இயக்கம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 வீட்டில் இருந்து வேலை...பயன்கள் எவை?: ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போய் வருவதற்கான உங்களுடைய நேரம் மிச்சமாகும். அலைச்சல் குறைவு என்பதால் உடல் சோர்வு ஏற்படாது. அந்த பயண நேரத்தை வீட்டில் உள்ளவர்களுடன் கழிக்க, விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபட பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து அவர்களுடைய படிப்புக்கும்
 நீங்கள் உதவ முடியும்.
 எல்லாவற்றுக்கும் மேலாக அலுவலகத்தில் ஒவ்வொன்றுக்கும் உங்களுடைய உயர் அதிகாரியின் உதட்டசைவிற்காகக் காத்திருப்பதற்கு மாறாக, சொந்தமாக முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய நேரத்தை திட்டமிடும் திறன் மேம்படும். வேலைக்கு இடைஞ்சலாக ஏற்படும் பல தொந்தரவுகளைச் சமாளிக்கும் திறனுடையவராக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
 ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com