கரோனா: மெய்ப்பொருள் காண்பது அறிவு!

கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
கரோனா: மெய்ப்பொருள் காண்பது அறிவு!

கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை அனைத்தையும் அந்த நோய்த்தொற்று கடுமையாகப் பாதித்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் அதே வேளையில், அந்த நோய்த்தொற்று தொடர்பான வதந்திகளும் மக்களிடையே வேகமாகப் பரவி வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களிடையே சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில சமூக வலைதளங்களே நோய்த்தொற்று தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழலில், கரோனா நோய்த்தொற்று தொடர்பான உண்மைச் செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். நோய்த் தொற்று தொடர்பாக மக்களிடையே உலவி வரும் சில வதந்திகளையும் அதன் உண்மைத்தன்மையையும் ஆராய்வோம்.

நீரிழிவு நோய், காசநோய், இதய நோய் உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களை மட்டுமே கரோனா வைரஸ் தாக்கும் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகிறது. ஆனால், இது உண்மையல்ல. ஆரோக்கியமாக உள்ளவர்கள் முதல் நோயாளிகள் வரை அனைவரையும் கரோனா நோய்த்தொற்று தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகளைக் கூட கரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்டால் கரோனா நோய்த்தொற்று ஏற்படாது என்று சிலர் நம்பி வருகின்றனர். உண்மையில் சளி, காய்ச்சல் ஆகியவையும் கரோனா நோய்த்தொற்றைப் போல முதன்மையாக நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவையே. ஆனால், கரோனா வைரஸூம், சளியை ஏற்படுத்தும் வைரஸூம் முற்றிலும் வேறுபட்டவை. அவற்றுக்கிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நம்மை ஒருநாளும் காக்காது.

முகக் கவசம் அணிந்து கொண்டால் கரோனா நோய்த்தொற்று ஏற்படாது என்ற வதந்தி பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளியேறும் நீர்த்திவலைகள் வாயிலாக கரோனா வைரஸூம் வெளியேறும். அது மேஜைகள், உலோகங்கள் உள்ளிட்ட பரப்புகளிலும் சுற்றுப்புறக் காற்றிலும் பரவும்.

காற்றில் கலக்கும் வைரஸ், சுவாசத்தின் மூலம் நமது உடலினுள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், வைரஸ் பரவியிருக்கும் பரப்புகளை நாம் தொடும்போது நம் கைகளில் அந்த வைரஸ் ஒட்டிக் கொள்ளும். பின்னர், நமது கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை நாம் தொடும்போது அந்த வைரஸ் உடலுக்குள் சென்றுவிடும்.

எனவே, முகக் கவசம் அணிவது மட்டுமல்லாமல், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதும், முகத்தை அடிக்கடி தொடாமல் இருப்பதுமே நம்மை கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

வெüவால்களிடமிருந்து தான் கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாகத் தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதை எந்தவித ஆதாரங்களும் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், எந்த விலங்கிலிருந்து பரவியது என்பது தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, வெüவால்களைக் கண்டு யாரும் அச்சம் கொள்ளவோ அவற்றின் இருப்பிடங்களை அழிக்கவோ தேவையில்லை.

கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பலர் பட்டம் பெறாமலேயே மருத்துவர்களாக மாறியுள்ளனர். வெந்நீர் குடித்தால் கரோனா வைரஸ் சாகும் என்றும், உப்பு கலந்த வெந்நீரைக் கொண்டு கொப்பளித்தால் வைரஸ் உடலிலிருந்து வெளியேறிவிடும் என்றும் வதந்திகளை அவர்கள் பரப்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது அவசியம். அறிமுகமில்லாத நபர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வழங்கும் மருத்துவக் குறிப்புகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கக் கூடாது. அவை நமது உடலுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்தியா போன்ற வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகளில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவாது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது வரை மிதவெப்பநிலை கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது.

சுவாசக்காற்றை உள்ளிழுத்து 10 விநாடிகள் வரை இருமல் வராமல் இருந்தால், நமக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என அர்த்தம் என்ற வதந்தி வலைதளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது.

"மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றார் வள்ளுவர். கரோனா தொடர்பான எந்த செய்தியையும், கருத்தையும் நாம் ஆராய்ந்து ஏற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com