கரோனாவுக்குப் பிறகு... தொழில்நுட்பங்களின் மூலமே வளர்ச்சி!

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், உலகின் தொழில்துறை நின்று போயிருக்கிறது.  மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் உறைந்து போயிருக்கின்றன.
கரோனாவுக்குப் பிறகு... தொழில்நுட்பங்களின் மூலமே வளர்ச்சி!


கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், உலகின் தொழில்துறை நின்று போயிருக்கிறது. மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் உறைந்து போயிருக்கின்றன. என்றாலும் உலகம் இயங்கியே ஆக வேண்டும். உலகம் இயங்குவதற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். கரோனாவுக்கு முன்பிருந்த நடைமுறைகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேசத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் ஒரு தூண்டுதலாக உள்ளது. இப்போதுதான் தொடங்கியிருக்கிற தொழில்களாகட்டும், சர்வதேச அளவில் வளர்ந்த பெரும் தொழில்துறையாகட்டும், ஒவ்வொன்றும் அவற்றின் தேவைக்கேற்ப, ஆற்றலுக்கேற்ப பல்வேறுவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே வந்திருக்கின்றன.

கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு தொழில்நுட்பங்களின் மீதான தொழில்துறையினரின் கவனம் அதிகரித்திருக்கிறது.

தொழில்துறை உடனடியாக இயங்குவதற்கு தேவையான தொழில்நுட்பங்களின் மீது - நவீன தொழில்நுட்பக் கருவிகளின் மீது- அவர்களின் கவனம் குவிந்திருக்கிறது. தொழில்நுட்பங்களின் மீதான அவர்களின் இந்த ஈடுபாடு, கரோனோ ஊரடங்கின்போது மட்டுமல்ல; அதற்குப் பிறகும் தொழில்துறை இயங்குவதற்கும், வளர்வதற்கும் உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே உள்ளது.

வருங்காலத்தில் தொழிற்துறை சந்திக்கவிருக்கிற பிரச்னைகளையும், போட்டிச் சந்தை மற்றும் தொழிற் போட்டிகளை எதிர்கொள்வதற்காகவும் இந்த நவீன தொழில்நுட்பங்களை தற்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் உள்ள தொழிற்துறையினர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய மற்றும் மிகப் பெரிய தொழில்துறையினர் அவர்களுடைய நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப கட்டுமானங்களை, செயல்முறைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக தொலை தூரத்தில் இருந்து வேலை செய்தல், நிறுவனத்தின் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆன்லைன் தொடர்புகள்: இப்போது நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஒருவரையொருவர் நேரடியாகப் பார்த்துப் பேசத் தேவையில்லை. வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு முதல் வீடியோ கான்ஃபரன்ஸ் வரை பலவற்றைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும். இது தவிர, இணையதளங்கள், டிஜிட்டல் நியூஸ்லெட்டர்ஸ், பிளாக்ஸ், டிஜிட்டல் கான்ஃபரன்ஸ் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களைத் தொடர்பு கொள்ளும் முறை தற்போது வளர்ந்திருக்கிறது. நிறையப் பேர் சந்திக்க வேண்டும் என்றால் ஜூம், ஸ்கைப் ஆகிய செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

தகவல்களைப் பாதுகாத்தல்: நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை ஆன்லைன் மூலம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உதாரணமாக கரோனா தொற்று உள்ள இக்காலத்தில் வீட்டிலிருந்தபடியே நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

அப்போது நிறுவனத்துடன் தொடர்புடைய ஏராளமான தகவல்கள் ஆன்லைன் மூலம் பகிரப்படுகின்றன. ஆன்லைன் மூலம் பகிரப்படுவதற்கு பொதுவான தளங்கள் பயன்படுகின்றன. அந்த பொதுவான தளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அவர்களுக்குத் தேவையான, குறிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செய்வது கரோனா பாதிப்பு உள்ள தற்போதைய காலத்துக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் பயன்படக்கூடியதாகவே உள்ளது.

மனிதவளப் பிரிவின் செயல்களை கணினிமயமாக்குவது: கரோனா பாதிப்பால் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பல நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. அலுவலகத்துக்கு வராமல் வேறு இடத்தில் வேலை செய்யும்போது, பணியாளரின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். எப்போது வேலையைத் தொடங்கினார்? எப்போது வேலையை முடித்தார்? என்ன வேலை செய்தார்? என்பன போன்ற தகவல்களை இப்போது ஆன்லைன் மூலமாகவே நிறுவனங்கள் தெரிந்து கொள்கின்றன.

மனிதவளப் பிரிவு இவ்வாறு கணினிமயமாகி வருகிறது. இது வருங்காலத்திலும் தொழில்நிறுவனங்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்கிறது.

டிஜிட்டல் பணப் பரிமாற்றம்: ஆன்லைன் மூலமாகப் பொருள்கள் வாங்குவது, வங்கியில் உள்ள பணத்தைப் பிறருக்கு மாற்றிவிடுவது என்பன போன்றவற்றை மக்கள் எல்லாரும் செய்கிறார்கள்.

இது கரோனா பாதிப்பு காலத்தில் அதிகரித்திருக்கிறது. இது தொடர்ச்சியாகவும் மிக அதிகமாகவும் நிகழ்வதால், ஆன் - லைன் வணிகத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரித்திருக்கிறது.

வருங்காலத்தில் Paytm, UPI  அடிப்படையிலான பணப் பரிமாற்றங்களைப் போல பல செயலிகள் நேரடிப் பணப் பரிமாற்றத்துக்காக உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கரோனா பாதிப்பு உள்ள இக்காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதே சமயம் இந்தத் தொழில்நுட்பங்கள் தேவைக்கேற்ப மேலும் வளரக் கூடிய நிலையே உள்ளது. எனவே சிறு, குறு தொழில்நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நிலை பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகிஇருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com