உற்சாகமே ஒரே வழி!

கரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் காப்பதற்காக கடந்த 50 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம்.
உற்சாகமே ஒரே வழி!

கரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் காப்பதற்காக கடந்த 50 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். பண்பையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்த பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் தினசரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கான பருவத் தேர்வுகளையும் இணையவழியிலேயே நடத்திவிடலாமா என்று கூட கல்லூரி நிர்வாகங்கள் ஆராய்ந்து வருகின்றன.

கல்லூரியில் பேராசிரியர்களைச் சந்தித்து, நண்பர்களுடன் ஒன்றிணைந்து செயல்வழியில் கல்வி கற்ற சூழலை இணையவழிக் கல்வி என்றுமே ஈடுசெய்துவிட முடியாது. இத்தகைய கடினமான சூழலும், 2 மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் இளம் தலைமுறையினருக்குத் தீர்க்க முடியாத மனஅழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், இந்தச் சூழலை நாம் திறம்பட எதிர்கொண்டாக வேண்டியது மிகவும் அவசியம்.
முதலில் நாம் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இத்தகைய கடினமான சூழல் தற்காலிகமானதுதான் என்பதே. எத்தனையோ பெரும் நோய்த்தொற்றுகளையும், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இயற்கைப் பேரிடர்களையும் இந்த உலகம் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றிலிருந்தும் உலக நாடுகள் விரைவில் மீளும். எனவே, இந்தத் தற்காலிக சூழலைக் குறித்து அதிகமாக சிந்தித்து வருத்தப்படத் தேவைஇல்லை.

இரண்டு மாதங்களாக வீட்டிலேயே முடங்கியிருக்கும்படி ஆகிவிட்டதே என்றும் வருந்த வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், நமக்கு யாரென்றே தெரியாத நபர்களையும் கரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து காப்பதற்காகவே நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம். நம்மைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலன் கருதியே நாம் வீட்டுக்கு வெளியே செல்லாமல் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டால் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதற்கு முன் நோய்த்தொற்று பரவிய காலத்திலெல்லாம் இல்லாத ஒன்று தற்போது நம்மிடம் இருக்கிறது. அதுதான் தொழில்நுட்பம். வீட்டின் உள்ளே முடங்கிக் கிடந்தாலும், தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் தற்போது தொடர்பு கொள்ள முடியும். அந்தத் தொழில்நுட்பங்களைத் தேவையான முறையில் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்களுடன் பொழுதைக் கழித்து மனஅழுத்தத்திலிருந்து நீங்கள்
விடுபடலாம்.

மனம் திறம்படச் செயல்படுவதற்கு வேண்டிய மற்றொன்று, போதிய உடலுழைப்பு. தற்போதைய சூழலில் வீட்டிலேயே இருப்பதால், முறையான உடற்பயிற்சிகளைத் தினந்தோறும் மேற்கொள்ளத் தவறக் கூடாது. உடற்பயிற்சிகளின் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடிப் பகுதியிலோ காற்றோட்டமான சூழலில் உடற்பயிற்சி மேற்கொள்வதுமனஅமைதியை அளிக்கும்.

பெரும்பாலானோருக்கு இணையவழியில் கல்லூரி வகுப்புகள் நடைபெறுகின்றன. அந்நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயல்களில் ஈடுபடலாம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மனதைச் செலுத்த வேண்டும். ஓய்வின்றி ஒரு விஷயத்தைச் செய்வது மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு மனதை அமைதியுறச் செய்ய வேண்டும்.

ஊரே வீட்டுக்குள் ஓய்வெடுக்கும் வேளையிலும், வீட்டிலுள்ள பெண்கள் ஓய்வில்லாமல் உழைத்து வருகின்றனர். எனவே, கல்லூரி வகுப்புகள் போக, மற்ற நேரங்களில் சமையல் செய்தல், துணி துவைத்தல், பாத்திரங்களைக் கழுவி வைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வீட்டுப் பெண்களின் சுமைகளைக் குறைத்து அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழல் ஏற்பட்டால், நோய்த்தொற்று தொடர்பான செய்திகளைத் தொலைக்காட்சிகளிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ காண்பதைத் தவிர்க்க வேண்டும். அதே வேளையில், கரோனா நோய்த்தொற்று தொடர்பான விவரங்களையும் விளக்கங்களையும் உலக சுகாதார அமைப்பின் வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலிருக்கும் காலத்தில் செல்லிடப்பேசிகளை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். செல்லிடப்பேசியின் அதீத பயன்பாடு கண்பார்வைக் குறைபாட்டை அதிகரிப்பதுடன் மூளையின் செயல்திறனையும் குறைத்துவிடும். எனவே, நம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தி நமக்கு நாமே எதிரி ஆகிவிடக் கூடாது.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தனிமையில் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், இந்தச் சூழலில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தனிமைப்பட்டுவிடக் கூடாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடும்பத்தாரிடையே அதிக அளவில் கலந்துரையாட வேண்டும்.

போதிய இடைவெளியில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசலாம். பள்ளியில் உடன் பயின்று வெகு காலம் தொடர்பில் இல்லாதவர்களை செல்லிடப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நட்பைப் புதுப்பிக்கலாம். மனஅழுத்தத்திலிருந்து விடுபட உற்சாகமாக இருப்பதே ஒரே வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com